நமது தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக பெண்ணா? அப்போ பழனிமாணிக்கம் நிலை.. யார் இந்த அஞ்சுகம் பூபதி?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு பதில் இளம் பெண் மருத்துவரை அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த பரசுராமன் எம்பி ஆக இருந்தார். அதற்கு முன் பழனிமாணிக்கம் எம்.பி ஆக இருந்தார். தஞ்சை மாவட்ட திமுகவின் தவிர்க்க முடியாத புள்ளியாக பழனிமாணிக்கம் வலம் வந்தாலும், மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசல் கட்சித் தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சில பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவையே பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் நடந்து கொண்ட விதம் கட்சித் தலைமை வரை சென்றது.

இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்படுவதற்கு முன்பே தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நிறுத்தப்பட மாட்டார் என்ற செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்தன. குறிப்பாக திமுகவினரே இந்த தகவலை கூறி வந்தனர். தஞ்சை மக்களவைத் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலில் தஞ்சாவூரையும் இணைத்திருந்தது.

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கியவர்களுக்கு தற்பொழுது நேர்காணல் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட திமுகவை சேர்ந்த பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக வின் பொருளாளரும் அதிராம்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அஸ்லம் விருப்பமனுவை தாக்கல் செய்து நேர்காணலில் கலந்து கொண்டார்.

அவர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக டி.ஆர்.பாலுவை தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து பேசிய நிலையில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இதன் முடிவில் திமுக தலைமை ஒருவரை தேர்வு செய்து இருப்பதாக தஞ்சை திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இம்முறை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு தஞ்சை மக்களவைத் தொகுதியில் சீட் ஒதுக்க வாய்ப்புகள் குறைவு என்றும் அஞ்சுகம் பூபதி என்ற இளம் பெண் மருத்துவருக்கு திமுக தலைமை தஞ்சை மக்களவைத் தொகுதியை ஒதுக்க இம்முறை அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக தற்பொழுது பதவி வகித்து வருகிறார். திமுக மருத்துவர் அணியில் இடம் பெற்றிருக்கும் இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மகப்பேறு மருத்துவராக இருக்கும் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பல்வேறு பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்து தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவரது கணவர் திராவிடர் கழகத்தில் மாநில பொறுப்பில் இருந்தவர்.

2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தஞ்சை தொகுதியில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அப்போது அவருக்கு 29 வயது மட்டுமே. இளம் மருத்துவராக அறியப்படும் இவர், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து நேர்காணலிலும் பங்கேற்று உள்ளார். இம்முறை இவருக்கு திமுக சீட்டு ஒதுக்குவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று பேச்சு அடிபடுகிறது. என்ன நடக்கிறது என்பதை வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் பார்க்கலாம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...