அதிரையில் ஸ்டாலின் பேச்சை மீறி அமைக்கப்பட்ட மெயின் ரோடு.. சேர்மன் வாடியில் குளம்போல் தேங்கிய மழை நீர்

Editorial
0
அதிரை வண்டிப்பேட்டை ஆலடிக்குளம் அருகில் இருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் நடந்து முடிந்தன.

ஆனால், பழைய குண்டும் குழியுமான சாலையை மில்லிங் என்று சொல்லப்படும் உடைத்து எடுக்காமல் லேசாக சுரண்டிவிட்டு அதன் மீதே புதிய சாலையை போட்டனர். இதனால் சாலையின் உயரம் அதிகரித்து வீடுகள், இணைப்பு சாலைகள், கடைகள் தாழ்வாகின. இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என அப்போதே நாம் எச்சரித்தோம்
தமிழ்நாடு அரசே சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று தெரிவித்தார்.

ஆனால், அவரது ஆட்சிக்கு கீழ் நடைபெறும் சாலை திட்டங்களில் அவரது உத்தரவுக்கே மதிப்பளிக்காமல் இதுபோன்று தரமற்ற சாலைகளை அமைத்தார்கள். அதேபோல்,  2020 ஆம் ஆண்டு மயிலாடுதுறை சாலை தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "பழைய சாலையை தோண்டி எடுக்காமல், அதற்கு மேல் புதிய சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

 இல்லாவிட்டால், இந்த பிரச்சினை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும். சாலை பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய சாலையை தோண்டாமல் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களை பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்." என்று உத்தரவிட்டது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயரமாக சாலை அமைத்த காரணத்தால் தற்போது பெய்த மழைக்கு சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இரவு பெய்த கனமழை காரணமாக சேர்மன் வாடியில் இருந்து செக்கடிமேடி செல்லும் இணைப்பு சாலையின் முகப்பில், HITACHI ATM அருகே குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மோட்டார் வைத்து அந்த மழை நீர் அப்புறப்படுத்தப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...