அதிரையில் ரயில் நிற்காதது பாஜக சதி.. கூட்டணியை தூக்கி வீசுவோம் - அதிமுக நகர செயலாளர் பிச்சை ஆவேசம்

Editorial
0

அதிராம்பட்டினம்: அதிரையில் ரயில் நிற்காமல் முத்துப்பேட்டையில் ரயில் நிறுத்தப்பட்டது பாஜகவின் சூழ்ச்சி என அதிமுக நகர செயலாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தாம்பரம் - செங்கோட்டை (20683/84) ரயில்களுக்கு நம் ஊரில் நிறுத்தம் அறிவிக்கவும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிரை வரை நீட்டிக்கவும், கூடுதல் ரயில் சேவைகளை அதிரை ரயில் நிலையத்திற்கு வழங்கவும் வலியுறுத்தி இன்று ரயில் போராளி அஹமது அலி ஜாபர் தலைமையில் அதிரை நல்வாழ்வு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக நகர செயலாளர் குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் அஹமது தமீம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அதிமுக நகர செயலாளர் பிச்சை,  "இந்த போராட்டத்தில் முன்னணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக் பங்கேற்று இருக்கிறது என்றால் இது அதிராம்பட்டினத்தின் மரியாதை பிரச்சனை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. அதிராம்பட்டினம், மரவக்காடு பகுதியில் உப்பு ஏற்றுமதி செய்வதற்காகவே ஆங்கிலேயர்கள் இந்த ரயில் பாதையை அமைத்தார்கள். எந்த ஊருக்காக ரயில் பாதை அமைக்கப்பட்டதோ அந்த ஊரில் ரயில் நிறுத்தம் இல்லையென்றால் அதைவிட மோசமான செயல் வேறில்லை.

இங்கு நிறுத்த வேண்டிய ரயிலை முத்துப்பேட்டையில் நிறுத்துகிறார்கள். முத்துப்பேட்டையில் எர்ணாகுளம் ரயில், செகந்திராபாத் ரயில் நிற்பதில்லை. திருவாரூர் - காரைக்குடி ரயில் மட்டுமே நிற்கிறது. ஆனால் சிலர் கடைசி நேரத்தில் செய்த சூழ்ச்சி காரணமாக முத்துப்பேட்டையில் ரயில் நின்றது. அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மத்தியில் ஆள்வது எங்கள் கூட்டணி கட்சி என்றாலும் கூட்டணி என்பது எங்கள் தோளில் கிடக்கும் துண்டு. அதிராம்பட்டினம் மரியாதைக்காக அந்த துண்டையும் தூக்கி வீசுவோம். பாஜகவின் சூழ்ச்சியால்தான் முத்துப்பேட்டையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது.

எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் எங்களுக்குள் இருந்தாலும் இந்த ஊர் நன்மைக்காக கூடி நிற்கிறோம் என்றால் இந்த ஊரில் இழக்க ஒன்றுமில்லை. இப்படிதான் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையானது. அப்போது யாரும் அதை எதிர்க்காததால் அப்படியே போய்விட்டது. இப்படி ஒவ்வொன்றாக இழக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. 

எனவே தாம்பரம் ரயில் அதிரையில் நிற்பதுடன், சோழன் எக்ஸ்பிரஸின் இணைப்பு ரயிலான மயிலாடுதுறை - காரைக்குடி ரயிலை நிறுத்த 2022 அக்டோபரிலேயே ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இப்போது 2023 அக்டோபரே வந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. போன வாரம் வந்த புதிய ரயில் பட்டியலிலும் இது இல்லை.

இதுபோல் தேவைப்பட்டால் பல்வேறு போராட்டங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு, மதங்களை கடந்து நாமெல்லாம் ஒருங்கிணைந்து ஊர் நன்மைக்காக போராடி புதிய ரயில்களையும், ரயில் நிறுத்தத்தையும் கொண்டு வருவோம்." என்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...