அதிரையில் இருண்ட காலம்.. இதான் திமுகவின் விடியல் ஆட்சியா? பவர் கட்டால் பரிதவிக்கும் மக்கள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நாளை இதுபோல் ஒரு நாள் மின் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதங்களில் சொன்ன நேரத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதே போல் மழை, புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.

இது அல்லாமல் நாள்தோறும் அதிரையில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்ந்து வருகிறது. அதிரை மின் நிலையத்தை 110Kv ஆக தரம் உயர்த்தும் பணிகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. இதற்கிடையே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மின் தடை செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலத்துக்கு இணையாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டு கூடுதல் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகவே அதிராம்பட்டினத்தில் இரவு நேர மின் தடை தொடர்கிறது. 

அதிரையில் நேற்று இரவு 8-9 மணியில் இருந்தே பல இடங்களில் மின் தடையும், குறைந்த மின்சாரமும் வழங்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். பல முறை தொடர்புகொண்டு மின்நிலைய ஊழியர்கள் போனை எடுக்கவில்லை என்ற புகாரும் வருகிறது. ஜம்பர் துண்டிக்கப்பட்டதால் மின் இணைப்பு தடைபட்டு இருப்பதாக ஒரு ஊழியர் தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் மின் பழுதை காரணம் சொல்கிறது மின்சார வாரியம். அப்படியென்றால் மாதந்தோறும் பழுது நீக்கத்துக்காக தடை செய்யப்படும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு காரணம் மின்சார வாரியத்தின் அலட்சியமா? அல்லது பழைய கருவிகளா? என்ற கேள்வி எழுகிறது.

விடியல் என்று தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் கீழ் அதிராம்பட்டினம் இருண்ட காலத்தில் இருப்பதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...