அதிரையின் நூற்றாண்டு பழைய சங்கத்தை அவமதித்தது அதிரை பிறையா? அல்லது அவர்களா?

Editorial
0
அதிரையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாமை அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து நூற்றாண்டு பழமை கொண்ட சங்கம் நடத்தியது குறித்து அதிரை பிறையில் விமர்சன பதிவை நாம் வெளியிட்டோம். அதன் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதிரை பிறை மீதும் அதில் உள்ள பத்திரிகையாளர்கள் மீதும் முன் விரோதம் கொண்ட சிலர் இதுதான் சரியான தருணம் என்று நினைத்து வசை மொழிகளை வாரி கொட்டி வருகிறார்கள்.

சங்கத்தை சேர்ந்த முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், அனுதாபிகள், முஹல்லாவாசிகள் என பலரும் நமது பதிவின் நோக்கத்தையும், அதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து அமைதியாகவே இருந்தனர். தொலைபேசி வாயிலாக நாம் அவர்களிடம் பேசியபோதும் நம் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் அவர்கள் செவிகொடுத்து கேட்டனர்.

ஆனால், தங்கள் சுயலாபத்துக்காக சங்கத்தை வளைக்க முயலும் சிலரும், இந்த முகாமை 2 முறை நடத்த அனுமதி மறுத்த சங்கத்தை மூன்றாவது முறை நடத்த வற்புறுத்தியதன் பின்னணியில் உள்ள சுயநலமிகள் நமது பதிவை கண்டு பொங்குகின்றனர். நம்மீதும், சங்கத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட சில வாசகர்கள் தலைப்பில் இவ்வளவு கடினம் தேவையில்லையே என்று நம்மிடம் தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஆவணங்கள் இணைப்பின் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சிகள், பாதிப்பின் வீரியத்தை விளக்கிய பிறகு இந்த முகாம் தவறுதான் என்பதை அவர்கள் உணர்ந்து நமது பதிவை ஏற்றுக்கொண்டு பகிரவும் செய்தனர். இதில் அதிரை பிறை எப்போது சங்கத்தை அவமதித்தது என்ற கேள்வியை நாம் எழுப்புகிறோம். ஏனெனில் எந்த சங்கத்தின் பெயரையும் நாம் வெளியிடவில்லை.

அத்துடன், இந்த முகாமை நடத்திய முடிவை எடுத்தவர்களையே நாம் விமர்சித்துள்ளோம். ஒரு நாட்டை விமர்சிப்பது வேறு அரசை விமர்சிப்பது வேறு. ஆளும் அரசை விமர்சிப்பது நாட்டை விமர்சிப்பதாகவோ அவமதிப்பதாகவோ கருதப்படாது. ஆனால், தலைப்பை மட்டுமே படித்துவிட்டு முழு விபரமே தெரியாமல் பலர் வன்மத்தை கக்கி வருவதுடன் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறுகளையும், இழி சொற்களையும் அள்ளி வீசுகின்றனர். 

முஹல்லா மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஜமாத் என்று அறிவித்துவிட்டு இப்படி சிலர் கொடுத்த அழுத்தங்களுக்காக இத்தகைய முகாமை நடத்துவதுதான் மக்கள் நலனா? 

எல்லாவற்றுக்கும் மேலாக அதிரை மக்கள் முஹல்லா ஜமாத்தின் அறிவிப்புகளையும், பள்ளிவாசல் அறிவிப்புகளை நம்புகிறார்கள். மக்களை வழிநடத்தும் தலைமையிடத்தில் முஹல்லா ஜமாத் உள்ளது. அப்படி இருந்துகொண்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வது சரிதானா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. என்ற முந்தைய பதிவில் இடம்பெற்ற நமது கருத்தை பலரும் ஏற்கவே செய்கின்றனர்.

முஹல்லாவை அவமதித்தது நாம் அல்ல. மாறாக முஹல்லாவின் மீதுள்ள மக்களின் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களின் வாக்குரிமைக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு முகாமை நடத்தி இத்தனை ஆண்டுகாலமாக கட்டிக்காத்து வந்த நற்பெயரை கெடுத்தது இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்தவர்கள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சட்டம் இயற்றப்படாமல், அரசாணை இல்லாமலே இந்த இணைப்பு முகாமை சங்கத்தில் நடத்துவதாக அறிவித்தவர்கள்தான் முஹல்லாவை அவமதித்தவர்கள்.

தங்கள் மீதுள்ள பொறுப்பை உணராமல், இந்த இணைப்பின் ஆபத்தை அறிந்தும் அரசியல் அழுத்தங்களால் இதனை நடத்த இடம் கொடுத்தவர்கள்தான் முஹல்லாவை அவமதித்துவிட்டார்கள். சொல்லப்போனால் இப்படியொரு முகாமை நடத்தி சொந்த முஹல்லா மக்களின் வாக்குரிமைக்கே வேட்டு வைக்கும் வேலையை இவர்கள் செய்துள்ளார்கள்.

நூற்றாண்டுகளாக மக்களின் வழிகாட்டியாக, பக்கபலமாக, ஏராளமான உதவிகளை செய்துள்ள, பல பெருமைகளை தாங்கி நிற்கும் நூற்றாண்டு சிறப்புமிக்க சங்கத்தில் இப்படியொரு முகாமை நடத்தி அதை அவமதித்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தின் வெளிபாடுதான் அப்பதிவு.

எனவே சங்கத்தை அவமதித்தது யார் என்பதை விமர்சகர்கள் மறுபரிசீலனை செய்யலாம். அதிரை பிறையின் ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட முஹல்லாவுக்கு உட்பட்டவராக இருக்கலாம். ஆனால், அதிரை பிறை என்பது ஒட்டுமொத்த அதிரை மக்களுக்கான ஊடகம். எனவே எந்த சார்பு நிலையையும் எடுக்கக்கூடாது. 

எனவே இந்த பதிவுக்காக அதிரை பிறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்று மிரட்டுவது, பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்புவது எல்லாம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை. எக்காரணம் கொண்டு நாம் நமது நிலைபாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம். வருத்தம் தெரிவிக்கவும் மாட்டோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...