அதிரை மக்களின் வாக்குரிமையில் விளையாடிய "நூற்றாண்டு" முஹல்லா.. அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சியதா இளஞ்சூரியன்?

Editorial
0
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டால் இணைக்கலாம் எனவும் தேர்தல் ஆணையமும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் அறிவித்தாலும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இதை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அதிரையிலும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால், இந்த இணைப்பால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை அதிரை பிறையில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் அதிராம்பட்டினத்தில் குறைவான அளவிலேயே ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே இதை அதிகரிக்க வீடு வீடாக சென்று வந்த நகராட்சி அதிகாரிகள் தற்போது இணைக்காதவர்களின் செல்போன் எண்களை தொடர்புகொண்டு எச்சரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே அதிரையை சேர்ந்த பழமையான அதிக வார்டுகளை உள்ளடக்கிய முஹல்லா ஜமாத் அலுவலகத்தில் இதற்கான முகாம் நடத்த அதிகாரிகள் வலியுறுத்தினர்.  தொடக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜமாத் நிர்வாகம் பின்னர் முகாமை நடத்தி இருக்கிறது. இதன் மூலம் மக்கள் ஆதார் - வாக்காளர் அட்டையை இணைத்துள்ளனர்.

தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்த நிர்வாகம் அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைய விரும்பிய முக்கியஸ்தர்கள் என்று அழைக்கப்படும் சில சுயநலவாதிகள் பேச்சை கேட்டு  இந்த முடிவை எடுத்ததாக முஹல்லா வாசிகளும், முன்னாள் நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர். 

அரசு முகாமுக்கு அனுமதி அளிக்காவிட்டால் ஜமாத்துக்கு பிரச்சனை ஏற்படும் என்று சிலர் அச்சமூட்டியதாகவும், அதன் பிறகே அரசின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்று எண்ணி இந்த முகாமுக்கு அனுமதியளித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஹல்லா மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஜமாத் என்று அறிவித்துவிட்டு இப்படி சிலர் கொடுத்த அழுத்தங்களுக்கும், அச்சங்களுக்கும் பணிந்து இத்தகைய முகாமை நடத்துவதுதான் மக்கள் நலனா? 

எல்லாவற்றுக்கும் மேலாக அதிரை மக்கள் முஹல்லா ஜமாத்தின் அறிவிப்புகளையும், பள்ளிவாசல் அறிவிப்புகளை நம்புகிறார்கள். மக்களை வழிநடத்தும் தலைமையிடத்தில் முஹல்லா ஜமாத் உள்ளது. அப்படி இருந்துகொண்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வது சரிதானா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...