அதிராம்பட்டினம் - உங்கள் வெளியூர் நண்பர்களை அவசியம் படிக்க சொல்லுங்க!

Editorial
0
தஞ்சாவூர் மீனவர்கள்... என்ன தஞ்சை மீனவர்களா? தம்பி மாத்தி போடுறீங்க... தஞ்சை விவசாயிகள்னு வரும்... என தஞ்சை பற்றி அறியாத பலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட. பலருக்கு தஞ்சை மாவட்டம் பரந்து விரிந்த விவசாய பூமி என்றே தெரியும். ஆனால், அதன் தெற்கு முனை கடலை ஒட்டி இருக்கிறது என்பதை பெரும்பாலானார் அறிந்திருப்பதில்லை.

அவர்களிடம் கூகுள் மேப்பை காட்டி புவியியல் பாடமெல்லாம் எடுத்திருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 2 நகராட்சிகள். ஒன்று பட்டுக்கோட்டை. மற்றொன்று அதிராம்பட்டினம். இதில் அதிராம்பட்டினம் நான் பிறந்த ஊர். கடலை ஒட்டி அமைந்திருக்கிறது.

விளம்பரம்: 

பட்டுக்கோட்டைக்கும் கடலுக்கும் வெகு தொலைவு இல்லை. அதிகபட்சம் 15 கி.மீ.தான் வரும். மருதமும் நெய்தலும் முத்தமிடும் மண் எங்கள் அதிராம்பட்டினம். வடக்கே வயலும் தெற்கே வங்காள விரிகுடா கடலும் கொண்ட அழகிய நகரம்.

இதன் அருகாமையில் உள்ள மல்லிப்பட்டினத்தில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. மனோரா சுற்றுலாதலம் இருக்கிறது. சோழர்கால வரலாற்று எச்சங்கள் புதைந்தும் வெளியிலும் இருக்கின்றன. அனைத்தும் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்டதுதான். அதிராம்பட்டினம் கடலோரத்தில் அலையாத்திக் காடுகளும் லகூன்களும் உள்ளன. மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளை கொண்ட பகுதி. இதனாலேயே சுனாமியால் அதிராம்பட்டினம் அதிகம் பாதிக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் அடிக்கடி குறிவைக்கப்படும் கோட்டைபட்டினம், ஜகதாப்பட்டினம் கடலுக்கு சில கிலோ மீட்டர்கள் முன் வரை தஞ்சை எல்லைதான்.

டெல்டா மாவட்டங்களை 2018 ஆம் ஆண்டு சூறையாடிய கஜா புயலின் வேகம் வேதாரண்யம் கடலோரத்தில் அதிகம் இருக்கும் என கணித்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. காற்றின் திசைமாறி அதிராம்பட்டினத்தில் அதிகபட்ச வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது. ஆனால், ஊடகங்கள் நாகையையும், திருவாரூரையும், தஞ்சை மாவட்டத்தின் வேளாண் பகுதிகளையுமே மையம் கொண்டன. நான் அப்போது காவேரி டிவியில் பணிபுரிந்தபோது ஊரின் அவல நிலையை விளக்கி தனி குழுவை அனுப்பி வைத்தார்கள்.

மற்ற ஊடகங்கள் அதன் பிறகே அதிராம்பட்டினத்தின் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தினார்கள். இதற்கு காரணம், அதிராம்பட்டினம் குறித்து பலரும் அறிந்திராததுதான். எனது ஊரை பற்றி நான்தானே சொல்லியாக வேண்டும். அதற்காகவே இப்பதிவு.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...