அதிரையில் ஒண்ணே கால் நூற்றாண்டை நெருங்கும் கல்விக் கலங்கரை விளக்கம் - மலரும் நினைவுகள்

கல்விக்குத் தொண்டு செய்வோர் மறைவதில்லை,  அவர்கள் விதைத்த கல்வியால் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்" என்பது பழமொழி.

இந்தப் பழமொழிக்குப் பொருத்தமாய்,
நம் அதிராம்பட்டினம் நகரில்,
 கல்விக்குத் தொண்டு செய்து, மறைந்த ஹாஜி ஜனாப்: காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களின் கல்விப் பணியைச் சுருக்கமாக எழுதுவதில் மகிழ்கிறேன்.

1900 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று,
தான் பிறந்து வளர்ந்த புண்ணிய பூமியாம் அதிராம்பட்டினத்தைச் சுற்றி, தனது உழைப்பின் பயனாக உருவான, சுமார் 1500 ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்களை இந்த சமுதாய மக்களின்  மார்க்கக் கல்வி வளர்ச்சிக்காக வாரி இறைத்து, வக்ஃபு செய்துள்ளார் என்பது பெருமையான விஷயம் தானே?

அதே ஆண்டில், அன்றைய காலகட்டத்தில், பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு, 'மதரஸத்துஸ் ஸலாஹி ஃபி அத்ரமில் ஃபலாஹி' என்ற மாபெரும் மதரஸாவை நிறுவியுள்ளார்.

இந்த மதரஸாவின் முதல் அறங்காவலர்களாக (டிரஸ்டியாக)
அவரோடு உடன் பிறந்த சகோதரர்களான,
ஜனாப் எம் கே என்
நைனா முகம்மது மரைக்காயர்,
ஜனாப் எம் கே என் அகமது தம்பி மரைக்காயர்,ஜனாப் ஸலாத் லெப்பை மரைக்காயர் ஆகியோரை கனிவுடன் நியமித்தார்.

கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களுக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாததினால் தன் மூன்று சகோதரர்களின் நேரடிப் பார்வையில் மதரஸா டிரஸ்ட்டை
வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார்.

*அவரின் மறைவுக்குப் பின்னர், அந்த மூன்று சகோதரர்களின் நேரடி ஆண் சந்ததியினர்கள் முதிய வயது கிரமப்படி ஒருவர் பின் ஒருவராக டிரஸ்டியாக பரிபாலனம் செய்து வர வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்.
(ஆதாரம்: டிரஸ்ட் சம்பந்தப்பட்ட வரலாற்று  ஆவணங்கள்)

மார்க்கக் கல்வியைப் போதிப்பதற்காக மதரஸாவை நிறுவியதோடு மட்டுமல்லாமல்,உலகக் கல்விக்கும் அடித்தளம் அமைத்துவிட்டுச் சென்றார்.

அவருக்குப் பின் வந்த அறங்காவலர்கள், அவருடைய நோக்கம் நிறைவேறும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு படிப்படியாக உயர்ந்து, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி,கலை மற்றும் அறிவியல் கல்லூரி என கல்வி ஆலயமாகத் தற்போது உருவெடுத்து,ஒண்ணே கால் நூற்றாண்டை நெருங்கியுள்ளது.

 நூற்றுக்கும் மேற்பட்ட படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தரும் அமுதசுரபியாக இன்றைய தினம் விளங்குகிறது.

இந்தப் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வியைக் கற்றுத் தரும் ஆலயமாகத் திகழ்கிறது.

ஒண்ணே கால் நூற்றாண்டை நெருங்கும் கல்விக் கலங்கரை விளக்கமான இந்நிறுவனத்தில் பணியாற்றும் எத்தனையோ பட்டதாரிகளுள் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி!

"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை'

கவிஞர்
கல்லிடைக் குயில்
உமர் பாரூக்
தமிழாசிரியர்

Post a Comment

0 Comments