அதிரை மக்களின் அளப்பறிய பணிகள் - அகம் நிறைந்து வாழ்த்திய ஆசிரியர்

அறத் தொண்டுகள் செய்யும்
அதிரையர்கள்!

"தானத்தில் சிறந்தது அன்னதானம்!
தர்மம் தலை காக்கும்"

இவையெல்லாம் தான-தர்மங்களை உணர்த்தும் பழமொழிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்
நகரவாசிகள்,
இப்பழமொழிகளுக்கு மிகப் பொருத்தமானவர்கள்.

எல்லா ஊர்களிலும் உள்ள தனவான்கள் தங்களால் இயன்ற அளவு, தர்மம் செய்து வருகின்றனர்.

ஆனால்  அனைத்து மக்களும் தங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்வதில் வல்லவர்களாக வலம் வரும் ஒரு நகர் இந்த அதிராம்பட்டினம்!

*செல்வந்தர்கள் பணத்தால் உதவுகின்றனர்.
மற்றையோர் தன் உடல் உழைப்பைத் தந்து உதவுகின்றதை கடந்த பதினைந்து வருடங்களாக நான் நேரில் கண்டு வருகிறேன்.

*சொத்துகளைக் குவிக்கும் அந்தக் காலத்திலேயே,
தன் மொத்தச் சொத்துகளையும்
சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, வாரி இறைத்த வள்ளல் காதிர் முகைதீன் போன்றோர் வக்ஃபு செய்த சொத்துகளின் இன்றைய மதிப்பு
சுமார் மூவாயிரம் கோடிகள்!

*திரும்பிய இடமெல்லாம் பள்ளிவாசல்களால் சூழப்பட்ட ஓர் உன்னதமான நகரம் இந்த அதிரை!

*முழுக்க முழுக்க வெளிநாட்டில் (ஏறத்தாழ 150 நாடுகளில்) பணிபுரியும் இவ்வூர் வாசிகளின் தனி அடையாளமே அது தான்!

*தானும் உயர்ந்து,தன்னைச் சார்ந்தவரையும் தன்னை நம்பி வந்தோரையும் பொருளாதார ரீதியில் உயர வைப்பதில் அதிரையருக்கு இணை வேறெந்த ஊரையும் கூற முடியாது!

*கோபம் மூக்கில் கொப்பளித்தாலும்
குணத்தில் குழந்தைத் தனம் 
சிந்தும்!

*இயற்கை பேரிடர் காலங்களில் தன் உயிரைக் கொடுத்து,பிறரைக் காக்கும் பண்பு, அநேகரிடத்தில் காணலாம்.

*தான் பிறருக்குச் செய்யும் உதவி,
வெளியில் தெரியாமல் காத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்!

*ஊனமுற்றோரையும் மனவளர்ச்சிக் குன்றியோரையும் உதாசீனப்படுத்தும்
சில மனிதருக்கு மத்தியில்,
வெறுப்புணர்வை துளிகூடக் காட்டாத
கருணையாளர்கள் வாழும் பூமி இந்த அதிரை!

*ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதங்களிலும் மற்ற நாள்களிலும் இவர்கள் செய்த தர்மங்களைக் கணக்கிட்டால்
பல கோடிகளைத் தாண்டும்!

*ரமலான் நோன்பு நோற்கும் நூற்றுக்கணக்கான  நோன்பாளிகளுக்கு அதிகாலை ஸகர் நேரத்தில் அசைவ உணவுகளை விலையின்றி அளவின்றி வழங்கிடும்,அன்னதானக் கூடாரமாகத் திகழ்ந்து வருகிறது, இங்குள்ள தக்வா பள்ளிவாசல்!

வெளியூரில் இருந்து இங்கு பணிசெய்யும் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த சேவையைத் தொய்வில்லாமல் செய்வதற்கு, ஓர் உணவுக் குழுவை அமைத்துள்ளனர்.

*உணவைச் சுவையாகச் சமைப்பதில் கைதேர்ந்தவர்கள்!

*அரசாங்கம் கொண்டு வரும் சில சட்டங்களால், ஒரு சமுதாயம் பாதிக்கப்படும் போது, அதற்கெதிராகப் போர்க்கொடி ஏந்தி குரல் கொடுப்பவர்கள் இவர்கள்!
போராட்டக் களத்தில், அரசாங்க சொத்துகளுக்கோ,
பொது மக்களுக்கோ துளி அளவு சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதில்,ராணுவத்திற்குச் சமமானவர்கள் அதிரையர்கள்!

உரிமைக்குக் குரல் கொடுத்து,
உறவுக்குத் தோள் கொடுக்கும்
இந்த அதிரையர்கள்,
நான் கண்ட நல்லோர்களில் முதன்மையானோர் என்பதில் ஐயமில்லை!

கவிஞர்
கல்லிடைக் குயில்
உமர் பாரூக்
தமிழாசிரியர்.

Post a Comment

0 Comments