அதிரை திமுகவினர் பெண் என்றுகூட பார்க்காமல் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டனர் - 19வது வார்டு கவுன்சிலர்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டிலும் வென்றனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு வாரம் கடந்தும் அதிரை திமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசல் காரணமாக நகர்மன்ற தலைவர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதனிடையே அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்தது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில், அதிரை நகராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டது நகர திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் போட்டி வேட்பாளராக இராம.குணசேகரனை நிறுத்தி திமுக கவுன்சிலர்கள் துணைத் தலைவராக தேர்வு செய்தனர். இதுபோல் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே கண்டனம் தெரிவித்து பதவி விலக சொல்லி எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து குணசேகரன் இன்னும் பதவி விலகவில்லை. இதனிடையே தில் நவாஸ் பேகம் நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலின்போது திமுக கவுன்சிலர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பேசி ஆடியோ வெளியிட்டு உள்ளார். அது அதிரையில் வாட்ஸ் அப் குழுமங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், "அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற துணை சேர்மன் பொறுப்புக்கு மதசார்பற்ற திமுக தலைமை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அறிவித்தது. அதன் அடிப்படையில் திமுக நகரச் செயலாளர் அண்ணன் குணசேகரன் அவர்கள் துணை சேர்மன் தேர்தல் முதல்நாள் வரை ஆதரவு தருவதாக சொன்னார். குணசேகரன் அவர்கள் தேர்தல் கடைசி நேரத்தில் போட்டியிட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது நகராட்சி ஆணையர் அவர்கள் உங்களுக்கு முன்மொழிய வழிமொழிய ஆள் இருக்கிறதா என்று கேட்டபோதும் நான் ஒன்றும் தெரியாமல் வெளியில் என் கணவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சொன்னவுடன் என்னை வெளியே அனுப்பக்கூடாது என்று திமுக கவுன்சிலர்கள் தடுத்தனர்.

அதற்கு பிறகு ஆணையர்  என்னை கணவரிடம் கேட்டு வந்து சொல்ல சொன்னார். அதன் பின்னர் எனது வேட்புமனுவைக் கூட நகராட்சி ஊழியர்கள் பூர்த்தி செய்ய உதவி செய்யக்கூடாது என திமுக கவுன்சிலர்கள் மறுத்தனர். இதனால் எனக்கு தெரிந்தவரை எனது வேட்புமனுவை நான் பூர்த்தி செய்துகொடுத்தேன். 

அந்த அளவுக்கு திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுபோல் அவர்கள் உடன் பிறந்த பெண்களுக்கு, மனைவிக்கு நடந்து இருந்தால் என்ன செய்வார்கள்? என் வலிக்கான மருந்து திரும்ப துணைச் சேர்மன் பொறுப்பு கிடைப்பதுதான். அதை திரும்பப்பெறுவதற்கு என் கட்சியும் என் கணவரும் பெரும் முயற்சி செய்கிறார்கள். கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்" எனக்கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments