அதிரை நாம் தமிழர்களே... முஸ்லிம்களை மதம் மாற சொன்ன சீமானை இன்னுமா ஆதரிக்கிறீர்கள்?

Editorial
0

அக்டோபர் 16-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் 
பனைச்சந்தைத் திருவிழாவின் செய்தியாளர் சந்திப்பின் போது(23.22 நிமிடம்) பேசிய சீமான், ”தமிழன் இந்துவே இல்லையே. கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லையே. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம், மாலியம், சிவசமயம். அதைத் தெரியாமல் நீங்கள் வந்து மீளுவோம் என்றால், மரச்செக்கிற்கு வருவது போன்று திருப்பி வா. சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருவது போன்று வந்திரு. அதுக்கு தான் கூப்பிடுகிறேன் ” எனப் பேசி இருக்கிறார்.

சீமானின் இக்கருத்து அக்கட்சியில் உள்ள சிறுபான்மையினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்து இருக்கிறது. இதற்கு முன் சீமான் பேச்சுக்கெல்லாம் ஆதரவு தெரிவித்தவர்கள் கூட இதை கண்டித்து வருகின்றனர். சீமான் ஆர்.எஸ்.எஸ். இன் தமிழ் முகமாக செயல்பட்டு வருகிறார் என பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது முதல் முறைமுறை அல்ல. 2 ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் புதிய படம் ஒன்றில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமரியாதை செய்துள்ளார்கள் எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தனர். தாங்கள் நேசிக்கும் ஒரு தலைவனை இழிவுபடுத்தினால் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டவரை விமர்சிப்பது இயல்பு தான். அதில் குற்றம்காண தேவையில்லை. ஆனால், அவர்களின் விமர்சனம் என்பது துல்கர் சல்மான் என்ற தனி மனிதர் மீது மட்டுமல்லாமல் அவர் சார்ந்த இஸ்லாம் மீதும் முஹம்மது நபி அவர்கள் மீது வைக்கப்படும்போது தான் இங்கு சிக்கல் எழுகிறது.

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இஸ்லாம் மீது எந்த அளவுக்கு காழ்புணர்ச்சியுடன் உள்ளார்கள் என்பதை அந்த விமர்சனங்கள் அம்பலப்படுத்தின. பிரபாகரன் மீதான விமர்சனத்துக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி போன்றவர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். இஸ்லாமியர்களும் துல்கர் சல்மானை விமர்சித்த பதிவுகளை பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து துல்கர் சல்மான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்ட போதும் கூட அந்த படத்தை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி கேள்வி எழுப்பி முஹம்மது நபியை சாடினர் நாம் தமிழர் தம்பிகள். இதற்காக இவர்கள் கூட்டணி அமைத்தது பாஜக சங்கிகளுடன்.

பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்த முஸ்லிம்கள் முஹம்மது நபியை விமர்சித்த நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் இலங்கையில் நிகழ்த்திய இனப்படுகொலைகளை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். அதுவரை அடங்கி இருந்த சீமானின் முஸ்லிம் தம்பிகள் பிரபாகரனை புகழ தொடங்கி உள்ளனர். அத்துடன் நிறுத்தாமல் பிரபாகரனை விமர்சித்தற்காக தமிழ் பேசும் முஸ்லிம்களை துலுக்கர்கள் (துருக்கியர்கள்) என எல்லை மீறி விமர்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை செய்தவர்களில் அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி தம்பிகளும் அடங்குவர். தங்கள் கட்சியை ஆதரித்தால் தமிழர்கள், எதிர்த்தால் தெலுங்கர்கள் என்ற பார்முலாவை இந்துக்களுக்கு வைத்துள்ளதை போல், இஸ்லாமியர்களில் தங்கள் கட்சியை ஆதரிப்பவர்கள் தமிழர்கள், எதிர்ப்பவர்கள் துருக்கியர்கள் என இவர்கள் கூறுகிறார்களா என்ன?

இவர்களுக்கு விடுதலை புலிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இலங்கையில் நிகழ்த்திய  இனப்படுகொலை பற்றி தெரியுமா? 

குஜராத்தில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை போல், ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை செய்ததை போல், இலங்கை தமிழ் சொந்தங்களை சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்ததை போல், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை போல், சிரியாவில் அந்நாட்டு அரசு வல்லரசுகளுடன் சேர்ந்து நடத்தும் படுகொலைகளை போல், இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் கோரமானது. இதுபற்றி சீமானும், அவரது கட்சியினரும் பேசுவார்களா?

இவர்கள் தலைவன் என சொல்லும் பிரபாகரன் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள்:

◾1990 ஜூலை 12ல் குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

◾1990 ஆகஸ்ட் 3ல் காத்தான்குடியில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

◾1990 ஆகஸ்ட் 12ல்  ஏறாவூரில் ஆண் பெண் குழந்தைகள் உட்பட 130 முஸ்லிம்கள் கொலை.

◾1992 ஏப்ரல் 29ல் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் கொலை.

◾1992 ஜூலை 15ல் கிரான்குளத்தில் பஸ்ஸில் வந்து கொண்டிருந்த வர்களை வழிமறித்து 22 முஸ்லிம்களை மட்டும் இறக்கி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது மிகக்குறைவான சம்பவங்களை தான். இன்னும் சொல்லப்படாதது ஏராளம். இப்படி ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்து புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து முஸ்லிம்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து இனச்சுத்திகரிப்பு செய்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.  இதை தட்டிக்கேட்டால் முஸ்லிம்கள் அரசிடம் காட்டிக் கொடுத்தார்கள் என்று பழி போடுவார்கள். புலிகளின் வரலாற்றை பார்த்தால், உமா மகேஸ்வரன் பத்மநாபா அமிர்தலிங்கம் உட்பட சக தமிழ் இயக்க தலைவர்களையும் அந்த இயக்க உறுப்பினர்களையும் எரித்துக் கொன்று அவர்களை  கூண்டோடு ஒழித்தவர்கள்.

ஆனால், நாம் தமிழர் தம்பிகள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. தன் கட்சித் தலைவன், தன் மதத்தை சேர்ந்தவன் என்ற காரணத்துக்காக குஜராத்தில் மோடி - அமித்ஷா செய்த இனப்படுகொலையை சங்கிகள் நியாயப்படுத்துவதைப் போல் தம்பிகள் நியாயப்படுத்துகிறார்கள். இதில் சிலர் தனிப்பட்ட முறையில் நம்மிடமே பிரபாகரன் இப்படியெல்லாம் செய்துள்ளார் எனக்கூறிவிட்டு கூச்சமே இல்லாமல் தங்கள் கட்சியினரை திருப்திப்படுத்த பேஸ்புக்கில் இனத்தலைவன், மாவீரன் என பொங்குகிறார்கள்.

எப்படி விடுதலைப் புலிகள் பிரபாகரனின் நகர்வு முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியதோ அதே போல் தான், சீமானின் அரசியல் நகர்வும் முஸ்லீம்களுக்கு எதிரானதாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதையும் உணர முடிகிறது. தமிழ் கடவுள்களை காப்போம் என்ற பெயரில் வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பை தொடங்கி தமிழ் என்ற போர்வையில் பிற மத சடங்குகளை இஸ்லாமியர்கள் மத்தியில் திணிப்பதும் நடந்து வருகிறது.

சீமான் ஜாதியால் பிரிந்து கிடப்பவர்களை இனமாக இனைப்பதாக கூறுகிறார். அப்படி இனைப்பதற்கு ஜாதியை தான் கருவியாக எடுக்கிறார். மொழி, இனம் கடந்து அனைவரும் சமம் என்ற கொள்கையை பின்பற்றி வரும் முஸ்லிம்களுக்கும் இனவெறியை  தூண்டிவிட்டுள்ளார். இஸ்லாமிய கோட்பாடுகளை மறந்த முஸ்லிம் தம்பிகளும் வீரவணக்கம் என முழங்குவதும், முப்பாட்டன் முருகன் என்பதும்,  என் தலைவன் பிரபாகரன் தான் என்றும், சாதியை வைத்து வந்தேறி என்றும் பேசி வருகிறார்கள்.

முஹம்மது நபி மக்காவில் பிறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். அங்கு அப்துல்லாஹ் இப்னு உபை தலைமையிலான நயவஞ்சக குழு ஒன்று இஸ்லாத்தை ஏற்று  முஹம்மது நபிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது. தனக்கு வரவேண்டிய ஆட்சி முஹம்மது என்ற மக்காவாசிக்கு சென்றுவிட்டதே என்ற இனவெறியும் அதற்கு காரணம். வந்தேறிகள் இங்கு வாழ்லாம், ஆளக்கூடாது என அடுக்குமொழி வசனம் பேசும் தம்பிகள் முஹம்மது நபியின் ஹிஜ்ரத்துக்கு பிந்தைய  படித்துப் பாருங்கள். முஹாஜிர்களை, அன்சார்கள் எப்படி அரவணைத்தார்கள். சரிபாதி பதவியை வழங்கினார்கள் எனப் புரியும்.

இப்படிப்பட்ட மேன்மைமிக்க தலைவரான முஹம்மது நபியை விமர்சிப்பவர்களுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை கொலை செய்த பிரபாகரனை ஆதரிக்கிறீர்கள் என்றால் நீங்களும் ஒரு இன வெறியரே...

சீமான் முஸ்லிம்களுக்காக பேசுகிறர் என ஆதரவு கெடுப்பவர்கள் பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் போன்றவர்களின் அன்றைய பேச்சையும் கேட்டு பாருங்கள். ஆனால் இன்று ராமதாசின் ஜாதி வெறி எப்படி  முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி இருக்கிறது என்று புரியும். அதேபோல் சீமானின் இன வெறியும் எதிர்காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பும். இதற்கு இவர்கள் தூக்கி பிடிக்கும் புலிகளின் வரலாறே சாட்சி..!

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...