அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - சுவாரஸ்ய தகவல்கள்

Editorial
0


சட்டசபைத் தேர்தல் நேருங்கி விட்டது. ஊடகங்கள் தொடங்கி திரும்பும் திசையெங்கும் தேர்தல் பேச்சுக்களை காண முடிகிறது. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், நமது பட்டுக்கோட்டை தொகுதியில் இம்முறை எந்த கட்சிகள் போட்டியிட உள்ளன? வேட்பாளர் யார்? என்ற பேச்சுக்களையும் காண முடிகிறது.

இந்த பரபரப்பு மத்தியில், நம்மில் பலரும் அறிந்திறாத ஒரு தகவல் தான் அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி. உடனே நாம் ஏதோ இப்படி ஒரு கோரிக்கை வைப்பதாகவோ அல்லது புனைவு என்றோ நினைத்துக்கொள்ள வேண்டாம்.

நமதூரை தலைமையாக கொண்டு அதிராம்பட்டினம் என்ற ஒரு சட்டமன்றத் தொகுதி இருந்தது. 1952,1957,1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி இருந்தது. 

1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.வெங்கட்ராமன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1957 தேர்தலில் பிரஜா சோசலிச கட்சியை சேர்ந்த ஏ.ஆர்.மாரிமுத்து அதிராம்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தண்டாயுதபாணி பிள்ளை வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து கூடுதல் தகவல்களை எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் கூறுகையில், "அதிரை தொகுதியின் கடைசி எம்எல்ஏ திரு. தண்டாயுதபாணி . கல்யாணஓடையைச் சேர்ந்தவர். அப்போது பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய ஊர்கள் பெயரில் தனித்தொகுதிகள் இல்லை. சொல்லப்போனால் ஒரத்தநாடு, நமது தொகுதிக்குள். வாக்கு எண்ணிக்கை அங்குதான் நடத்தப்படும். 

1967ல்தான் புதிய தாெகுதிகளாக நமக்கு அருகில் உள்ள இவ்வூர்களின் பெயர்களில் தொகுதிகள் உருவாகி பட்டியலில் இருந்து அதிரை நீக்கப்பட்டு பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. இதற்கு ராஜாமடம் வெங்கட்ராமன் என்ற முன்னாள் குடியரசுத் தலைவரே காரணம் என்று கிசுகிசு உலவியது. தண்டாயுதபாணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மாரிமுத்து. குடிசை சின்னம். பிரஜா சோசலிஸ்ட் கட்சி. மீண்டும் 1967 ல் திமுக கூட்டணியில் மாரிமுத்து வென்றார்.

1957 ஆம் ஆண்டு தேர்தலை பார்த்த சிலர் இன்னும் இருக்கக்கூடும். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர் யார் என்று நினைவு இல்லை. திமுக முதன்முதலில் தேர்தல் களம் கண்ட தொகுதிகளில் அதிரையும் ஒன்று. வேட்பாளர் என்.எஸ்.இளங்கோ. தஞ்சை மாவட்ட திமுக செயலாளர். உதயசூரியன் சின்னம். தேர்தல் பிரச்சாரத்துக்கு எம்ஜியார், என் எஸ் கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் வந்தார்கள். இன்றைய ஏஜே நகர் திடலாக கிடந்தது. அங்குதான் கூட்டம். நள்ளிரவு தாண்டிவிடும். ஆனால் மும்முனைப் போட்டியில் ஏ.ஆர் . மாரிமுத்துவிடம் காங்கிரஸும் திமுகவும் தோற்றது. அப்போது ஓட்டுப்பெட்டிதான்.

வெங்கட்ராமன் நமதூருக்கு செய்த இன்னொரு துரோகமும் உண்டு. அதாவது சேதுரோட்டை  தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையிலிருந்து திருப்பி பட்டுக்கோட்டை வழியாக சேதுபாவா சத்திரத்தில் இணைத்தது. இதன் காரணமாக நமது பகுதி பல ஆண்டுகள் போக்குவரத்து துண்டாகிக்கிடந்தது. கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரான பின்பே ராஜாமடம் பாலம் கட்டப்பட்டு அவரே திறந்து வைத்தார்." என்றார்கள்.

இதுகுறித்து அதிரையை சேர்ந்த அப்துல் கஃபூர் அவர்கள் கூறுகையில், "புதுப்பள்ளி அருகிலுள்ள ஒரு பழைய வீட்டின் வெளிப்புறச் சுவற்றில் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன்.”அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதியை இல்லாமல் ஆக்கிய வெங்கட்ராமா உனக்கா ஒட்டு? என்று எழதப்பட்டு இருந்ததைப் பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்" என்றார்.

இதுகுறித்த கூடுதலான சுவரஸ்யமான தகவல்கள் இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...