அதிரையில் இயங்கும் "அந்நியன் பஸ்" - அப்சட்டாகும் பயணிகள்

பிறழ்வு குணாதிசயம் கொண்டவர்களை Split Personality என சினிமாக்கள் நம்ப வைக்கும், நிஜத்தில் ஹிஸ்டீரியா நோயாளிகள், சாமி, பேய், சைத்தான் பிடித்துள்ளவர்களும் (!?) split personalityகளாக முயன்றபோது நம்ப வைக்க முயல்வர், 

இந்த பிறழ்வு மனப்போக்கு மனிதர்களுக்கு மட்டுமே இருப்பதாகவே காட்டப்பட்டு வந்த நிலையில் அதிரை to பட்டுக்கோட்டை இடையே இயக்கப்படும்  point to point எனப்படும் *இடைநில்லா* பேருந்திற்கும் உள்ளதை நடைமுறைபடுத்தி காட்டியுள்ளது அரசு போக்குவரத்து கழகம் - கும்பகோணம் (பட்டுக்கோட்டை பணிமனை).

அதிரையில் இருந்து புறப்படும் போது    PP எனும் அடைமொழியுடன் கெத்தாக புறப்படும் பேருந்து அதிரையின் பேருந்து நிறுத்தங்களை கடந்தவுடன் சாதாரண டவுன் பஸ்ஸாக தன்னை உருமாற்றிக்கொண்டு வரும் வழியில் அனைத்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளும் / இறக்கிவிட்டும் செல்லும்.

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்பவர்களுக்கு மட்டும் PP பஸ் சிறப்பு கட்டணம் ₹13 வசூலிக்கப்படும், இடைவழி பயணிகளுக்கு சாதாரண டவுன் பஸ் கட்டணமே. இதேபோல் பட்டுக்கோட்டை to அதிரை  திரும்ப வரும் போதும் இதேநிலை தான்.

ஏனைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ₹10 மட்டுமே கட்டணம். PP கொஞ்சம் கூடுதல் வேகமாகவாவது செல்லுமா என்றால் அதுவும் இல்லை.   தனியார் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் PP எனும் இடைநில்லா ஆமை சாரி பேருந்து 25 நிமிடங்களுக்கு குறையாமல் எடுத்துக் கொள்கிறது.

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனாம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

பிற பேருந்துகளைப் போல் ₹10 கட்டணத்தில் சாதாரண டவுன் பஸ்ஸாகவே இயக்கப்படுமானால் நாங்கள் ஏற மாட்டோம் என யாரும் அடம்பிடிக்கப் போவதில்லை. PP என்ற வெட்டி பந்தாவோடு வரும் பஸ்ஸிற்கு ₹13 கட்டணம் தேவையா?

பல வருடங்களுக்கு முன் இந்த தடத்தில்  PP பஸ் சேவை தொடங்கப்பட்ட போது சுமார் 20 நிமிடங்களில் இடை நில்லாமல் தான் இயக்கப்பட்டது என்பதும் கடந்து போன வரலாற்று எச்சம்.

- அதிரை அமீன்

Post a Comment

0 Comments