அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு

Editorial
0

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், "உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைக்க பெற்ற ஒவ்வொரு மனிதருக்கும் நமக்காக ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும். அல்லது இருக்கும் வீட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பானது.

1. பணமதிப்புக் இழப்பு, 2.கஜா புயல் 3.கொரோனா நோய் தொற்று ஆகிய மூன்று விபத்துக்களைக் கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்து, விலைவாசி ஏற்றத்தால் பொருளாதார முடக்கத்தில் வேலைவாய்ப்பு இல்லாமையால் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

விலைவாசி ஏற்றம் எல்லா பொருள்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடம் கட்டத் தேவையான ஒரு வண்டி மணல் கடந்த ஆண்டு 600 ரூபாய்க்கு விற்றது. இன்று ரூபாய் 2500 வரையில் உயர்ந்திருக்கிறது. சிமெண்ட் விலை மூட்டைக்கு 40 ரூபாய் கூடி இருக்கிறது. இந்த சூழலில் 600 ரூபாய் விற்ற மண் வண்டி ரூபாய் 1000-1100 வரை உயர்த்தி 4 மாதத்திற்கு முன் விற்கப்பட்டது. ஆனால் அதை இப்போது ரூ.2500 வரை ஏற்றம் செய்து விற்று வருகிறார்கள். 

மணல் வண்டிகாரர்கள் அரசின் புதிய நிபந்தனைகளின்படி வண்டி மணல் ஒரு நடைக்கு ரூ.105 மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வண்டி நிறைய மணலை ஏற்றிக்கொண்டு வந்து வேறு இடத்தில் ஒரு பகுதியை இறக்கி வைத்துவிட்டு மீதியைக்கொண்டு வந்து ரூ.2500 வரை விபரம் தெரியாதவர்களிடம் விற்றுவிட்டு கட்டிட ஒப்பந்தக்காரர்களிடம் அதே விலை கூறுகிறார்கள்.

இந்த விலைக்கு மணல் வண்டி வாங்கினால் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் பேசி கட்டிட வேலை செய்து கொடுப்பவர்களால் குறிப்பிட்ட நிர்ணயத்தில் வீடு கட்டிக்கொடுக்க முடியாது.

ஆகவே அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் 08.07.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாட்டு வண்டியில் வரும் மணலை கட்டிட பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை என்றும் யூனிட் கணக்கில் பெரிய லாரிகளில் தஞ்சாவூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் இருந்து பர்மிட் போட்டு வரும் மணலை வாங்கிப் பயன்படுத்துவது என்றும், இது கிடைக்காத பட்சத்தில் எம் சேண்டு வாங்கி கட்டிடம் கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சொந்தமாக வீட்டு கட்டிட வேலைகளைச் செய்யும் நபர்கள் உச்ச விலைக்கு வரும் வண்டி மணலை வாங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் அசோசியேஷனில் இல்லாத நண்பர்களும் இதுபற்றிய ஆலோசனைகளை அசோசியேஷனை அணுகி கேட்டுக் கொள்ளலாம்.

வண்டி மணல் விலை இறங்கி வரும் வரை வண்டி மணல் வாங்க மாட்டோம் என உறுதியாகக் கூறிக் கொள்கிறோம். பொது மக்களும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒத்துழைக்க மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...