அதிரை அருகே நடுவிக்காடு கிராமத்தில் ₹45 லட்சம் மதிப்பில் மஞ்சக்குடி ஏரியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மழவேனிற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது மஞ்சக்குடி ஏரி. நடுவிக்காடு மற்றும் அதன் தாய்கிராமங்களின் மிக பெரிய பரப்பளவைக்கொண்ட ஏரியாக இது உள்ளது.
இந்த மஞ்சக்குடி ஏரி நீர் பாசனத்தை நம்பி சுமார் 150 ஏக்கர் நிலபரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மஞ்சக்குடி ஏரியை தூர்வாரினால் சம்பா, தாளடி, குருவை சாகுபடிக்கு தேவையான நீரை சேமிக்கமுடியும். நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும். இந்த ஏரி நிறைந்தால் அதில் இருந்து வாய்க்கால் வழியாக அதிரை குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படும். இதனை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்த ஏரியை சீரமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தொடங்கி வைத்தார். இதில் மழவேனிற்காடு ஊராட்சி மன்றத்தலைவர் S.S.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த பணியில் மதகுகள், களிங்கு, படிக்கட்டுகள் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளன. அதேபோல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வடிகாலுக்கான வாய்க்கால்களும் தூர்வாரப்பட உள்ளன.