அதிரையில் ஒயிட்னர் தொடங்கி கஞ்சா வரை - சீரழிந்து வரும் பள்ளி சிறுவர்கள்

Editorial
0


போதை பல ஆண்டுகளாக நம் அதிரையை பிடித்திருக்கும் பேய். விளையாட்டைப் போல ஆரம்பிக்கும் போதைப்பழக்கங்கள் நாளடைவில் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்குப் போய்விடுகிறது. இன்று இளம் வயதினரிடையே... முக்கியமாக பள்ளிச் சிறுவர்களிடம் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வருகிறது.

‘போதை வஸ்துகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று சட்டத்துக்கு உட்பட்டு கடைகளில் விற்கப்படும் சில ரசாயன கலவைகள் சேர்க்கப்பட்ட பொருட்கள். இரண்டாவது சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள். முதல் பிரிவில் மருந்து மாத்திரைகள், பெயின்ட் தின்னர், வார்னிஷ், ஒயிட்னர் மற்றும் ஃபெவிகால், ஃபெவிகுயிக் போன்றவை அடங்கும்.

இரண்டாவதில் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் போன்றவை வரும். சிறுவர்களிடம் அதிகமாக பணம் புழங்காததால் பெரும்பாலும் அவர்கள் முதல் பிரிவைத்தான் நாடிச் செல்கின்றனர். கொஞ்சம் பணப்புழக்கம் உள்ளவர்கள் குடி மற்றும் கஞ்சாவுக்குத் தாவுகிறார்கள்...

‘இன்று ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சாஃப்ட் டிரக்ஸ் எனப்படும் பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி விடுகிறான். உதாரணமாக கஞ்சாவின் ஒரு வடிவமான பாங்கு மிக மலிவாக பல இடங்களில் கிடைக்கிறது. அதேபோல பாக்குவகைகள், புகையிலை வகைகள் சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.

முதலில் இதுமாதிரியான மென்மையான போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் பிறகு இந்த போதை போதவில்லை என மிகத் தீவிரமான போதையைத் தேடிச் செல்கின்றனர். அப்போதுதான் அவர்கள் குடி, கஞ்சா என பலவகையான போதைப் பொருட்களைக் கலந்துகட்டி எடுத்துக் கொள்கிறார்கள். இவைதான் அவர்களைப் பல்வேறு பிரச்னைகளுக்கு கொண்டு செல்கிறது...

தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை உட்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக அதிகரித்துள்ளது. ”போலீஸ் தீவிர வேட்டை!, கஞ்சா விற்பனை பிரமுகர் கைது!“ என்பது போன்ற பத்திரிக்கை செய்திகள் அவ்வப்போது வந்தாலும் கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின்  எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிரையிலும் கஞ்சா விற்றவர்கள் பிடிபட்ட செய்திகள் பல முறை வந்தாலும் சிறுவர்கள், இளைஞர்களிடம் இந்த பழக்கம் குறைந்தபாடில்லை.

அதிரையில் கல்லூரி பருவத்தில் கஞ்சாவுக்கு அடிமையாகுபவர்களை விட பள்ளி பருவத்தில் தடம் மாறுபவர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அந்த பருவத்தில் அதிகம் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருவதை காண முடிகிறது. பல மாதங்களாக பூட்டிக்கிடக்கும் உறவினர் வீடுகள், மைதானங்கள், ஊர் ஒதுக்குபுறத்தில் உள்ள புதர்காடுகளே இவர்கள் கஞ்சா உபயோகிப்பதற்கான இடமாக இருக்கிறது. இதற்கென தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தவறான பாதையில் செல்லும் சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து பெற்றோரிடம் ஒப்படைந்து திருத்த முயன்றாலும், மீண்டும் அவர்களை கஞ்சா என்ற பேய் விடுவதாக இல்லை. பெற்றோரையே அவமரியாதை செய்துவிட்டு கஞ்சா தான் முக்கியம் என செல்கிறார்கள் சிறுவர்கள்.


கஞ்சா வியாபாரிகளின் இலக்கும் இவர்களைப் போன்ற இளைஞர்கள், மாணவர்கள் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் மாணவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாணவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பு நாளடைவில் வன்முறையாகவும் வளர்கிறது. சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கொலைகளுக்கு கஞ்சா  முக்கிய காரணமாக உள்ளது.  பொது இடங்களில் கிடைத்த கஞ்சா, தற்போது ஒருபடி மேலே சென்று கல்வி நிலையங்களிலும் தாராளமாக கிடைப்பதாக செய்திகள் வருகின்றன.


கஞ்சா போதைக்கு அடிமையாகும் சில மாணவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கஞ்சா வியாபாரிகள், அவர்களுக்கு கமிஷன் கொடுப்பது, சில பாக்கெட்கள் இலவசமாக கொடுப்பது என்று தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். ”தற்போது பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா (டோப்) விற்கப்படும் இடத்திற்கு வந்து வாங்கி செல்வதோ அல்லது புரோக்கருக்கு பணம் கொடுத்து வாங்கி கொள்வதோ எளிமையானதாகவும், சகஜமானதாகவும்  மாறியுள்ளது.


பொதுவாக சிறுவர்கள் சிறுசிறு தவறுகள், பெட்டி க்ரைம்களில் ஈடுபடும்போதுதான் காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர். ஆனால், இதுமாதிரியான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களில் நூறு பேரில் எண்பது பேராவது போதைக்கு அடிமையானவர்களாகத்தான் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது ஆடம்பர வாழ்க்கைக்கோ அல்லது சொகுசு வாழ்க்கைக்கோ கிடையாது.

போதைப் பொருட்களை வாங்க பணம் கிடைக்கும் என்பதால்தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக அமைப்பின் இயக்குனரான சிரில் அலெக்ஸாண்டர் இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்தியச் சிறுவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் போதைக்கு பழக்கமாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. முதலில் பள்ளி, வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பாக்கு, புகையிலை, பாங்கு... பிறகு குடி என்று ஆரம்பிக்கும் பழக்கம், போகப்போக மருந்துப் பொருட்கள், ரசாயனம் கலந்த பொருட்களை நாடச் செய்கிறது.

வளர்ந்த நிலையில்தான் இவர்கள் போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கே முயல்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த 30 சதவீதத்தினரையும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கருத முடியாது. பழக்கமாகியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரி. இப்படி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சிறுவர்களை போதையிலிருந்து மீட்கவேண்டும் என சொல்வதைவிட ‘அந்த ஆரம்பகட்டத்திலிருந்து அவர்களை எப்படி தடுப்பது’ என்பதற்கான திட்டத்தைத்தான் நாம் வகுக்க வேண்டும்.

இதற்கு அந்த சிறுவர்கள் புழங்குமிடங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பு பீடி, சிகரெட், பிறகு குடி என்றுதான் தமிழகத்தில் போதையின் வழி இருந்தது. ஆனால், வடநாட்டு இளைஞர்களின் வருகையால் பல்வேறு போதைப் பொருட்கள் தமிழக கடைகளில் கனஜோராக விற்பனையாகிறது.

முதலில் இந்த சாஃப்ட் போதை வஸ்துகளை கடைகளில் இருந்து அகற்ற அரசும், தனியார் அமைப்புகளும் முனைய வேண்டும். பிறகு பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போதைப் பழக்கம் குறித்த கவுன்சிலிங்கை கொடுக்க வேண்டும்.

இதை எல்லாம்  விட்டுவிட்டு சிறுவர்களின் போதை பழக்கத்தை விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை திறப்பதில் எந்தவித பயனும் இல்லை. இப்போதைக்கு நம் சிறுவர்களுக்கும், அவர்களைச் சுற்றி இருக்கும் பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்கும் தேவை போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்தான்...’’ என்கிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...