அதிரை மக்களே.. ஞானவாபி மசூதிக்காக திரண்டு வாருங்கள்! தஞ்சையில் அமைதி பேரணிக்கு அழைக்கும் TNTJ

Editorial
0


Ads: Crescent builders - Coming Soon
வழிபாட்டுத் தலங்களை நீதிமன்றங்கள் பாதுகாக்க  வலியுறுத்தி தஞ்சையில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா ஜியாவுதீன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "முஸ்லிம்களின் 450 ஆண்டுகால இறையில்லமான பாபர் மஸ்ஜிதில் சங்பரிவாரத்தினர் சட்ட விரோதமாக (1948ல்) சிலைகளை வைத்து பள்ளியை இழுத்து மூட வழிவகை செய்தார்கள். அதன் பிறகு 1992 ல் உலகமே பார்த்துக் கொண்டு இருக்க பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

நீதிமன்றம், அரசு இயந்திரம் என சட்டத்தின் அத்தனை கூறுகளும் வேடிக்கை பார்க்கவே இம்மாபெரும் அநியாயம் அரங்கேறியது. மதவெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் பாசிச சக்திகள் பாபர் மஸ்ஜித் நிலத்தில் ராமர் கோவிலையும் கட்டி முடித்து விட்டார்கள். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாசிச சக்திகள் அடுத்து காசி, மதுரா என்று ஆயிரக்கணக்கான பள்ளி வாசல்களை குறி வைக்க ஆரம்பித்து விட்டன.

தற்போது சங்பரிவாரத்தினர் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியை குறிவைத்து பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளனர். முகலாய பேரரசர் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துத்தான் கியான்வாபி மசூதியைக் கட்டியதாக சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் பிரச்சாரம் செய்து வெறுப்புணர்வை பரப்புகின்றனர். ஏற்கனவே கியான்வாபி மசூதியில் லிங்கம் இருப்பதாக கூறி அது, எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய, ‘கார்பன் டேட்டிங்’ சோதனை நடத்துவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தற்போது கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தெற்கு பாதாள அறையை கையகப்படுத்த வாரணாசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இன்று வழிபாடும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரானதாகும்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991, (The Places Of Worship (Special Provisions) Act, 1991) சட்டத்தின்படி பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் பெரும்பான்மை, மத நம்பிக்கை என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டால் நீதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இந்தியாவில் பல மசூதிகள் இலக்கு வைக்கப்படுகின்றன, அவை எவ்வளவு பழமையானவையாக இருந்தாலும் அவற்றை அபகரித்து தொடர்ச்சியாக அரசியல் செய்ய பாசிச சக்திகள் முயற்சித்து வருகின்றன.

அரசியல் சாசனத்தை தூக்கி நிறுத்தக் கடமைப்பட்ட நீதிமன்றம் சங்பரிவார கும்பல்களின் சதிச்செயல்களை ஆதரிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கியான்வாபி பள்ளி நிர்வாகம்  “அங்கு இதற்கு முன் எந்த பூஜையும் நடந்ததில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற கருத்து,'' என்று கூறியுள்ளார்.

கியான்வாபி மஸ்ஜிதின் அஞ்சுமன் இன்டெஜாமியா கமிட்டி இந்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களை முஸ்லிம்கள் நம்பிய போதும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.  எனவே வழிபாட்டுத்தலங்களை நீதிமன்றங்கள் பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சை மாநகரில் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் கீழவாசல் அண்ணா மண்டபம் அருகில் மாபெரும் மக்கள் திரள் பேரணி நடைபெறும். " என கூறியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...