அதிரை ஆஸ்பத்திரி தெரு சாலை அமைத்ததில் விதிமீறல்.. நகராட்சி மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார்

Editorial
0


அதிரை ஈ.சி.ஆர். சாலையில் இருந்து திலகர் தெரு - அரசு மருத்துமனை ஆஸ்பத்திரி தெரு வழியாக சேர்மன் வாடி சென்றடையும் சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குண்டும் குழியுமான இந்த சாலையின் மீது ஒரு லேயர் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும், உயர்நீதிமன்றமும் புதிய சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு போட வேண்டும் என பல முறை உத்தரவிட்டுள்ள நிலையில் இதை மீறி அதிரை நகராட்சி பழைய சாலையை சுரண்டாமல் மேலே தார் சாலை அமைத்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து அதிரையை சேர்ந்த வஜீர் அலி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "மதிப்பிற்குரிய முதல்வர் அய்யா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, அதிராம்பட்டினம் 17 வது வார்டுக்கு உட்பட்ட தெருவிற்குள் சாலையை சுரண்டியும், பிரதான அரசு மருத்துமனைக்கு செல்லும் சாலையை சுரண்டாமலும் புதிய தார் சாலை போடப்பட்டு உள்ளது. புதிய சாலை போடும்போது பழைய சாலையை சுரண்டி எடுத்துவிட்டு தான் புதிய சாலை போடவேண்டும் என்பது சட்டம்.


சட்டத்தை மீறி பழைய சாலைக்கு மேல் புதிய சாலை போட்டுள்ளார்கள். திமுகவின் கோட்டையான அதிராம்பட்டினம் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது நகராட்சியின் செயல்களால். இதுபோன்ற ஓரவஞ்சனையான செயல்களால் நெருங்கி வரும் தேர்தலில் கணிசமான வாக்குகளை கண்டிப்பாக இழக்க நேரிடலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, தாங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். குறிப்பு : இத்துடன் சம்பந்தப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன் அதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை அமைக்கப்பட்ட மெயின் ரோட்டையும் மில்லிங் செய்யாமல் நகராட்சி அமைத்தது. இதேபோன்று அதிரை சிஎம்பி லேன் சாலையும் மில்லிங் செய்யப்படாமல் அமைக்கப்பட்டதால் இப்பகுதிகளில் வீடுகள் தாழ்வாகவும் சாலைகள் உயரமாகவும் மாறி மழைக் காலங்களில் வீடுகள், கட்டிடங்களுக்குள் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...