அதிரை இளைஞர்கள் மீது பழிபோட்டால் போதுமா? விபத்துகளை தடுக்க பெற்றோரும், சமூகமும் என்ன செய்ய வேண்டும்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இந்த விபத்துகளை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அதே சமயம் இளைஞர்களையும், சிறுவர்களையும் மட்டும் குறை சொன்னால் எல்லாம் சரியாகிவிடுமா என்று கேட்டால் இல்லை. பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் விபத்துகளை தடுக்க அவரவர் பங்கிற்கு தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து அதிரை பிறை இந்த கட்டுரையை வெளியிடுகிறது.

பெற்றோர்கள்: 
 • 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
 • 18 வயதை கடந்தாலும் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.
 • பதின் பருவத்தில் உள்ள உங்கள் பிள்ளைகளை உளவியல் ரீதியாக அணுகி மனம்விட்டுப் பேசி திருத்த முயற்சி செய்யுங்கள்.
 • ரேசிங் வீடியோ கேம்கள், பைக்கர்கள், ரேஸ் தொடர்பான யூடியூப் சேனல்களை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
 • நெடுந்தூர பைக் பயணம் மேற்கொள்ளவும், தேவையின்றி நண்பர்களுடன் பைக்கில் செல்லவும் விடாதீர்கள்.
பொதுமக்கள்:
 • இளைஞர்கள் வேகமாக போகிறார்கள் என்று குறை சொல்லிக்கொண்டே பெரியவர்கள் பலர் செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுகிறார்கள். இதன் மூலமாகவும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன.
 • வாகன முகப்பு விளக்கில் “ஹை பீம்” போட்டு வருவதால் எதிரில் வாகனத்தில் வருபவர்களின் பார்வை மறைந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஊருக்குள் பயணிக்கும்போது “டிம் லைட்” போட்டு செல்லுங்கள்.
 • பள்ளிவாசல்கள், மதர்சாக்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் மித வேகத்தில் செல்லுங்கள்.
 • சுயநலனுக்காக வீட்டு வாசல்களில் சாலையை தோண்டி சொந்தமாக வேகத்தடை அமைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
 • கட்டுமானப் பணிகள் நடந்தால், ஜல்லி, மண், செங்கல் போன்றவை சாலையில் சிதறிக்கிடக்காமல் பாதுகாத்துக்கொள்வதன் மூலமாகவும் விபத்துகளை தவிர்க்க முடியும்.
 • அருகில் செல்ல பைக்குகளை பயன்படுத்தாமல் நடந்தோ, சைக்கிளிலோ சென்றால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நண்மை கிடைக்கும்.
இளைஞர்கள்:
 • அல்லாஹ் நம்மை உன்னத நோக்கத்திற்காக படைத்து இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளான். பெற்றோர்கள் நம்மை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார்கள். இதையெல்லாம் அர்ப்ப சுகம், பந்தாவுக்காக நொடிப்பொழுதில் பாழாக்கிவிடாதீர்கள்.
 • அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்பட்டால் நீங்கள் மட்டுமின்றி எந்த தவறும் செய்யாத அப்பாவிகளும் பாதிக்கப்படுவார்கள்.
 • விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று தெரிந்தும் அதிவேகமாக பைக் ஓட்டி ஏதாவது அசம்பாவீதம் நேர்ந்தால் அது தற்கொலை அல்லது கொலைக்கு ஈடாகிவிடும்.
 • சிறு வயதில் ஆர்வ மிகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து தற்போது வருத்தப்படும் பலர் நமதூரிலேயே உள்ளார்கள்.
 • இன்று உங்களை வேகமாக பைக் ஓட்ட ஊக்குவிக்கும் நண்பர்கள், நீங்கள் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தால் சில ஆண்டுகளில் உங்களை மறந்து தங்கள் வாழ்க்கையை தேடி சென்று விடுவார்கள். கடைசி வரை உங்களுடன் இருக்கப்போவது பெற்றோர் மட்டும்தான்.
 • உங்கள் உயிரையும், எதிரில் வருபவர்களின் உயிரையும், உங்கள் பெற்றோரின் கனவுகளையும் சிதைக்கும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது வீரம் இல்லை.
 • வேகமாக பைக் ஓட்டும் உங்கள் நண்பர்களை திருத்த முயற்சியுங்கள். கேட்க மறுத்தால் நீங்கள் அவர்களுடன் பைக்கில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் வயதுக்கு ஏற்ற வீரத்தை காட்ட தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள். சமூக பணியாற்ற வாருங்கள். அநீதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுங்கள். போராடுங்கள்.
- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...