அதிரை குழந்தை சேக்காதியார் இமாம் ஷாபி பள்ளிக்கு செய்த பேருதவி.. சிறு துளி பெரு வெள்ளமான கதை

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

அதிராம்பட்டினத்தில் கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மதரஸாக்கள் இருந்தபோதிலும் அதை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருந்தனர். ஆரம்ப கல்விக்கு தரமான கல்வி நிறுவனம் இல்லாததால், பல சிறு குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வழித்தவறி செல்லும் நிலையில் இருந்தது. இதனால் அவர்களின் எதிர்காலம் இருண்டுவிட்டது.


இதனை கருத்தில்கொண்டு NMK ஷாகுல் ஹமீது இல்லத்தில் எம்.எஸ்.தாஜூதீன், ஷேக் ஹாதி, சையத் அலி மரைக்காயர் மற்றும் சைபுதீன் ஆகியோர் இளைஞர்களாக இருந்தபோது பாத்திமா டீச்சர் என்று அழைக்கப்படும் பாத்திமா பீவி அவர்களை முதல் ஆசிரியராக கொண்டு 9 மாணவர்கள், 3 பெஞ்சுகள், ஒரு கரும்பலகை மற்றும் மாணவர்களை அழைத்து வர ஒரு மாட்டு வண்டியுடன் சாதாரணமாக தொடங்கப்பட்டது.


1973 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்று தொடக்கப் பள்ளியாக நிறுவப்பட்டு, 1976 ஆம் ஆண்டில், பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை பெருகியதால், அது ஹாசன் வானொலி பூங்கா (பழைய இமாம் ஷாபி) இடத்திற்கு மாற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டு சங்க சட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பள்ளி இந்த அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டது.


1985 ஆம் ஆண்டு பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இத்தனை முயற்சிகள் இருந்தபோதிலும், பெண்கள் ஆரம்பக் கல்விக்குப் பிறகு தங்கள் படிப்பை இடைநிறுத்திக் கொண்டிருந்தனர். அதற்கு காரணம், ஆண், பெண் என தனித்தனி வகுப்புகள் இல்லை என்பதே. இதற்கு தீர்வு காணும் வகையிலேயே, பட்டுக்கோட்டை சாலையில் புதிய வளாகம் உருவாக்கப்பட்டு, 3 தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1997ல் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பழைய இமாம் ஷாபி பள்ளியில் ஆரம்ப வகுப்புகள் மற்றும் பெண்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன.


2015 ஆம் ஆண்டில், அதிகரித்த மாணவர்கள் எண்ணிக்கை காரணமாக, 3 தளங்களைக் கொண்ட புதிய பள்ளி கட்டப்பட்டது. இந்த 50 வருட பயணத்தில் இமாம் ஷாபி பள்ளியின் வளர்ச்சிக்கு பலர் உதவியுள்ளனர். ஆனால் ஆரம்ப கட்டத்தில் இதன் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தவர் குழந்தை சேக்காதியார் அவர்கள். எம் எஸ் தாஜுதீன் அவர்கள் இமாம் ஷாபி பள்ளியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை சேக்காதியார் அவர்களை சந்திக்கிறார். அந்த சமயத்தில் குழந்தை சேக்காதியார் அவர்கள் பட்டுக்கோட்டையில் ஒரு டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார்கள்.


ஆனால் அந்த டுடோரியல் சென்டர் போதிய வெற்றியை பெறாத காரணத்தால் அதை மூடிவிட்டு குழந்தை சேக்காதியார் வெளிநாடு பணிக்கு செல்லும் திட்டத்தில் இருந்தார். இந்த சமயத்தில் பள்ளி தொடங்கப் போவதாக தன்னிடம் தெரிவித்த எம்.எஸ்.தாஜுதீனிடம் டுடோரியல் சென்டரில் பயன்படுத்தப்பட்ட மேஜைகள், கரும்பலகை போன்ற தளவாடப் பொருட்களை இலவசமாக வழங்க முன் வந்தார் குழந்தை சேக்காதியார். ஊர் நலனுக்காக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் குழந்தை சேக்காதியார் டொடோரியல் செண்டரில் பயன்படுத்திய பொருட்களை இலவசமாக வழங்கியது இமாம் ஷாபி பள்ளி தொடங்குவதற்கு பேருதவியாக அமைந்தது.


அதன் பின்னர் வெளிநாட்டு பணிக்கு சென்ற சேக்காதியார் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஊர் திரும்புகிறார். அவரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் அழைத்து கவுரவிக்கும் வகையில் CO-ORDINATOR என்ற பொறுப்பு வழங்கியது. அந்த பொறுப்பை சிறப்பாக செய்து வந்த சேக்காதியார் அவர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வை அறிவித்தார். இமாம் ஷாபி பள்ளி இன்று 50 ஆண்டுகளை எட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால் அதற்கு குழந்தை சேக்காதியார் வழங்கிய கொடை மிக முக்கியமானது. பள்ளியும் அதில் பயின்ற மாணவர்களும் இருக்கும் வரை குழந்தை சேக்காதியாரின் கொடை குணம் போற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...