அதிரை 2வது வார்டு மக்களின் குசும்பு.. நகராட்சிக்கு நன்றி! இதுக்கு பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியா?

Editorial
0

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் 2வது வார்டு  மற்றும் ஆஸ்பத்திரி தெரு பகுதி சாலைகள் குறித்து சிலர் தேவையில்லாமல்  சமூக வலைதள பக்கங்களில் தவறான கருத்துகள் பரப்ப வேண்டாம் என்று 2வது வார்டு மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளனர்.

அதில், “சாலைகள் குண்டும் குழியுமாக இல்லாமல் பளபள என இருந்தால் பயங்கர வேகத்தில் வாகனங்கள் செல்லும். அதனால் விபத்துக்கள் நிறைய நடக்கும். குண்டும் குழியுமாக இருந்தால் மெல்லத்தான் செல்வார்கள்.  எனவே பொதுமக்கள் பாதுகாப்பை கருதியே ஸ்பீட் பிரேக்கர்கள் போல இத்தகைய குழிகளை அனுமதித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் உடல் ஆடாமல் அசையாமல் அலுங்காமல், குலுங்காமல்  சொகுசாக வாகனத்தில் சென்று வருவதால் நிறைய பேருக்கு சரியான உடற்பயிற்சி இன்றி உடல்ஆரோக்கியம் கெட்டு வருகின்றது. அவர்களின் நன்மை கருதிதான் குலுங்கி குலுங்கி சென்றால் அவர்களுக்கு உடல்பயிற்சி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில் குழிகளை மூடாமல் விட்டு வைத்து இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் திடீர் திடீர் என பிரச்சனைகள் வரும்பொழுது நிலைகுலையாமல் அதை எதிர்கொண்டு சந்திக்க  போதிய  துணிவும், உடல்  உறுதியும், மனவலிமையையும், நொடியில் முடிவெடுத்து தப்பிக்கும் சாதுரியமும்  வேண்டும் என்பதற்காகவே சாலையின் நடுவில் திடீர் திடீர் என குழிகள் வருமாறு விட்டு வைத்துள்ளார்கள். இவைகளில் இருந்து தப்பித்து தப்பித்து பயிற்சி எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

மற்ற ஊர்களில் திருட்டு, கொலை, கொள்ளைகள் நடத்திவிட்டு எளிதாக தப்பிவிடுகின்றார்கள். ஆனால் இங்கு உள்ள சாலை குழிகளால் அவர்களால் எளிதாக தப்பிக்க முடியாது. வேகமாக சென்றால் எங்காவது ஒரு இடத்தில கண்டிப்பாக அடிபட்டு விழுந்து கிடப்பார்கள். எளிதாக பிடித்துவிடலாம். குற்றங்கள் குறைந்துவிடும்.

மணல் தட்டுப்பாடு கடுமையாக உள்ள இந்த காலத்தில் சாலைகளில் உள்ள புழுதிகளால் ஒவ்வொருவரும் வீட்டுக்கு எளிதாக மண் கொண்டு சென்று சேமிக்கலாம், கட்டிடம் கட்ட உதவும்   என்பதையும் மறந்துவிட்டார்கள்.

வாகனபழுது பார்க்கும் தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் வழங்கி உள்ளது. அவர்களின் வாழ்க்கைதரம் பலமடங்கு உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்து பார்க்கவேண்டும். இப்படி இதில்  இத்தனை  நன்மைகள் இருக்கையில் வேண்டும் என்றே அதிராம்பட்டினம் சாலைகளுக்கு களங்கம் கற்பித்துவரும் சிலரின் செயல் வருத்தமடைய வைத்து உள்ளது.

இத்தனை நன்மைகள் செய்து தந்துள்ள அரசு அதிகாரிகளுக்கு மிக முக்கியமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அதிராம்பட்டினம் நகர அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நன்றி கூறவேண்டுமே தவிர அவர்களை குறை கூறக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...