அதிரையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துகிறதா நகராட்சி? புறக்கணிக்கப்படும் முஸ்லிம் ஷரீஅத் சட்டம்

Editorial
0
அதிரை: இந்திய அரசியலமைப்பு ஷரீஅத் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள ஹிப்பத் என்ற உரிமையை பறிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் அதை பதிய சொல்லி கட்டாயப்படுத்தி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள நம் இந்தியா இன்று அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடி வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என அவரவர் மதங்களுக்கு என சொத்து, திருமணம் போன்றவற்றில் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்பட்டு அதில் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முஸ்லிம் தனிநபர் சட்டம் இந்தியாவில் அமலில் உள்ளது. இது சொத்து, திருமணம் உள்ளிட்டவற்றில் முஸ்லிம்கள் ஷரிஅத் முறையை பின்பற்றிட அனுமதியளிக்கிறது. அதில் ஒன்றுதான் ஹிப்பத். அன்பளிப்பு என்று சொல்லப்படும் இந்த முறையின் மூலம் காலம் காலமாக முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, வாரிசுகளுக்கு சொத்துக்களை கொடுப்பது வழக்கம்.

இதை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் சட்டத்தில் இல்லாத நிலையில், அதிரை நகராட்சியான பிறகு ஹிப்பத்தை பதிவு செய்ய சொல்லி நகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யாத காரணத்தால் அரசுக்கும் நகராட்சிக்கும் வருவாய் குறைவதாக கூறி நிர்வாகம் முஸ்லிம்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையில் கை வைத்து இருக்கிறது. இது தொடர்பாக அதிரை பிறை தரப்பில் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு விசாரித்தபோது சட்டப்படி ஹிப்பத் முறை ரத்து செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவரால் காட்ட முடியவில்லை.

இதுகுறித்து வழக்கறிஞர் முஹம்மது தம்பியிடம் பேசினோம். அவர் கூறுகையில், "ஹிப்பத் என்பது அன்பளிப்பு எனப்படும். முஸ்லிம்கள் அசையும், அசையா சொத்துக்களை தாங்கள் விரும்பியவர்களுக்கு கொடுப்பதாகும். கொடுப்பவர்கள் கொடுப்பதும், பெறுபவர்கள் அதை ஏற்பதும்தான் இதன் விதி.  இதை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சட்டப்படி, முஸ்லிம்களுக்கு என இருக்கும் தனிச்சட்டம் இதை அங்கீகரிக்கிறது.

சொத்து மாற்றச்சட்டம் (Transfer of Property Act,1872) படி சட்டப்பிரிவுகள் 123 முதல் 129 வரை ஹிப்பத் முறையை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்வதில் விலக்கு இருக்கிறது. 1966 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முஸ்லிம்களுக்கு இடையே ஹிப்பத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என உறுதிபடுத்தி இருக்கிறது. 

கேரள உயர்நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆந்திரா உயர்நீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் என பல நீதிமன்றங்கள் ஹிப்பத் தொடர்பாக இதைதான் சொல்லி உள்ளன.

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய முஸ்லிம் தனிச்சட்டத்தை கடைபிடிக்கும் காயல்பட்டினம், கீழக்கரை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. 2000ம் ஆண்டுக்கு பிறகு பட்டா உள்ளிட்ட காரணங்களுக்காக  நோட்டரி பப்ளிக் மூலம் இதை எழுதி வைத்தார்கள்.

இதுவரை ஹிப்பத் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஹிப்பத் முறையை ரத்து செய்யும் எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் இதற்கு எதிராக வரவில்லை. இப்படி இருக்க அதிராம்பட்டினம் நகராட்சி  ஹிப்பத் முறையை எதிர்ப்பது என்பது, முஸ்லிம் தனிநபர் சட்டம் அளித்த உரிமையை பறிக்கும் செயல். இது பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை போன்றதாகும்." என்றார்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சியான அதிமுக போன்றவை எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், அதிரை நகராட்சியில் ஹிப்பத் முறை மறுக்கப்படுவது பல்ஸ் பார்க்கும் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...