அதிரை செக்கடிக் குளம், ஆலடிக்குளத்தில் நீர் நிரம்பாததற்கு "இதான்" காரணமா? ஷாக் அரசியல் பின்னணி

Editorial
0
அதிரையின் முக்கிய குளங்களான ஆலடிக் குளம், செக்கடிக் குளம், மண்ணப்பன் குளம், புள்ள குளம் போன்றவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழுமையாக நிரம்பாமல் உள்ளன. தற்போது நீர் நிரப்பப்படாத காரணத்தால் இந்த குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன.

இந்த குளங்கள் இப்படி வறண்டுபோய் கிடக்க முக்கிய காரணம், அதிராம்பட்டினம் 3 வது வார்டுக்கு உட்பட்ட தோப்புக்காடு பகுதியில் இருக்கும் காசரா ஏரியில் உள்ள பம்பிங் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தாமல் வைத்து இருப்பதுதான் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
கடந்த 9-10 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க நகரில் உள்ள முக்கிய குளங்களில் நீர் நிரப்பும் வகையில் பம்பிங் நிலையம் காசரா ஏரியில் அமைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்தொடங்கி சுமார் 5 முதல் 6 மாத காலம் தண்ணீர் தேங்கி இருக்கும்.
இந்த நீர் பம்பிங் நிலையம் மூலம் பம்ப் செய்யப்பட்டு அதிராம்பட்டினத்தின் முக்கிய குளங்களான செக்கடிக் குளம், ஆலடிக்குளம், மண்ணப்பன் குளம், செட்டியாக்குளம், ஆணையான் குளம், புள்ளக் குளம், அதன் அருகே உள்ள காட்டுக்குளம் ஆகியவற்றில் நிரப்பப்பட்டு வந்தது. சில சமயங்களில் ஆணையான் குளம் நிரம்பினால் செல்லியம்மன் கோயில் பின்புறம் இருக்கும் குளத்துக்கும் தண்ணீர் செல்லும் என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2021 வரை பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலையம், புதிய நகராட்சி நிர்வாகம் அமைந்ததில் இருந்து பயன்படுத்தப்படாததால் இந்த குளங்கள் நிரம்பாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் நகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர் நான்சி பிச்சை நம்மிடம் பேசினார்.
அப்போது அவர், "ஏற்கனவே ஏரியில் இருந்து பம்ப் மூலம் 9 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து குளங்களுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதை காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது செயல்படுத்தாமல், கரிசல்மணி ஏரியில் பம்ப் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கிறார்கள். இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதில் வேறு நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தலாம்." என்று தெரிவித்தார்.

இது குறித்து அதிரை பேரூராட்சி முன்னாள் துணை சேர்மனும், அதிமுக நகர செயலாளருமான பிச்சையிடம் அதிரை பிறை சார்பாக பேசினோம். அவர் கூறியதாவது, "வெள்ள காலங்களில் மோட்டார் சேதமடைந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இந்த ஸ்டேசன் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நமதூர் குளங்களுக்கு இதன் மூலம் நீர் வந்துகொண்டு இருந்தது.
இந்த ஏரியில்  6 மாதங்கள் தண்ணீர் இருக்கும். தற்போது கரிசல்மணி ஏரியிலிருந்து நீர் எடுப்பதாக சொல்கிறார்கள். அதில் தண்ணீரே இல்லை. காசரா ஏரி பம்பிங் ஸ்டேசனுக்கு செல்ல ஊழியர்கள் இல்லை என காரணம் சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் எப்படி அங்கு ஊழியர் சென்றுகொண்டு இருந்தார்?
மாநிலத்தில் திமுக ஆட்சியமைந்தும் ஒரு ஆண்டு தண்ணீர் எடுத்தார்கள். அப்போது எப்படி ஊழியர் சென்றார். புதிய நகராட்சி நிர்வாகம் அமைந்தவுடன் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். இப்போதுகூட ஒரு நாள் காசரா ஏரி பம்பிங் ஸ்டேசனில் இருந்து அதிரை வண்டிப்பேட்டை வழியாக வரும் நீர் வழி வாய்க்காலை ஒரு நாள் ஜேசிபி கொண்டு தூர்வாரினால் உடனே தண்ணீர் வரும். ஆனால், செய்ய மறுக்கிறார்கள்." என்றார்.
அரசியல் காழ்புணர்ச்சிகளை கடந்து அதிரையின் நீர் நிலைகளை நிரப்ப நகராட்சி நிர்வாகம் காசரா ஏரி பம்பிங் ஸ்டேசனை பராமரித்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை.
Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...