அதிரையை அதிர வைத்த ஏடிஎம் கார்டு மோசடி.. நண்பர்கள், உறவினர்களிடமே உதவி கேட்டு ஏமாற்றிய கும்பல்

Editorial
0
அதிரையில் நெருங்கிய நண்பர்களிடமே உதவி என்று பொய் சொல்லி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி பல லட்சங்களை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்து கொரோனா நேரத்தில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனால் தற்போது அப்பாவிகள் பலர் பெரும் பிரச்சனையில் சிக்கி உள்ளனர்.

நம்பி ஏடிஎம் கார்டை கொடுத்த அப்பாவி இளைஞர்களும் பெண்களும் தொடர் விசாரணைகளால் செய்வதறியாது தவிக்கின்றனர். சிலர் விபரம் அறியாமல் 500, 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஏடிஎம் கொடுத்தும் பிரச்சனையில் சிக்கி இருக்கின்றனர்.

தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடனே பொய் சொல்லி ஏமாற்றியவர்களிடம் நியாயம் கேட்காமல், அவர்கள் மீது புகாரளிக்காமல் பழக்கம் என்று விட்டுவிடும் அளவுக்கு அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும் இருப்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது.

இன்னொரு சோகம் என்னவென்றால் பொய் சொல்லியோ அல்லது கமிஷன் தருவதாக சொல்லியோ ஏ.டி.எம்.களை சேகரித்து கொடுத்தவர்களில் பலருக்கு இதை எதற்காக செய்கிறோம் என்றே தெரியவில்லையாம். சில ஆயிரங்கள், லட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஹராமான காரியத்தை செய்து அப்பாவிகளையும் பிரச்சனையில் தள்ளி இருக்கிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் பண ஆசையில் வீட்டில் உள்ள பெண்களிடம் கூட ஏ.டி.எம் கார்டை வாங்கி அவர்களையும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். மார்க்கம் பேசி, பக்கம் பக்கமாக எழுதுவோரும் இவ்வாறு குழிக்குள் விழுந்துள்ளார்கள்.

பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் என்ற அடிப்படையை பின்பற்றி இருந்தாலே இவர்கள் ஏமாற்று வேலையில் இறங்கி இருக்க மாட்டார்கள். தீவிர விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.

இந்த பதிவு அந்த வழக்கு குறித்தது கிடையாது. இதேபோல் MLM, நகை முதலீடு, பிட் காயின் என நமதூர் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் பலர் எளிமையாக சம்பாதிப்பதாக நினைத்துக்கொண்டு ஹராமில் இறங்கி அவர்களும் மோசடி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மற்றொரு தரப்பினர் லட்சங்களை இழந்து அதை மீட்க தவறான வழிக்கு செல்கிறார்கள்.

வட்டி என்று தெரிந்தோ தெரியாமலோ EMI, CREDIT CARD, ஆன்லைன் லோன் ஆப்-ஐ பயன்படுதேதி வட்டியில் மூழ்கிவிடுகின்றனர். தற்போது வருவாய் ஈட்டுவதற்கான பல்வேறு வழிகள் வந்துவிட்டன. அதில் ஹலால் எது? ஹராம் எது? என்ற புரிதலை பொருளாதார ஞானம் கொண்ட உலமாக்களோ அல்லது மார்க்க ஞானம் கொண்ட பொருளாதார அறிஞர்களோ விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் தெரியாமலேயே ஹராமிலும் மோசடியிலும் சமூகம் சிக்கி சின்னாபின்னமாகிவிடும் அபாயம் உள்ளது.

- நூருல் இப்னு ஜஹபர் அலி






Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...