அதிரையில் மருத்துவமனை கட்ட முட்டுக்கட்டையா? நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன், MMS அப்துல் கரீம் மீது ARDA சங்கம் பரபரப்பு புகார்

அதிராம்பட்டினம்: அதிரை மெயின் ரோட்டில் ARDA சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறி திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் இராம.குணசேகரன், நகராட்சித் தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் மீது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரிடம் சங்கத்தின் பொருளாளர் அஹமது இப்ராஹிம் புகாரளித்து உள்ளார்.

இது குறித்து அவர் எழுதி இருக்கும் புகார் மனுவில், "அதிராம்பட்டினம் ரூரல் டெவெலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) சார்பாக அதிராம்பட்டினம் மக்களின் நலனுக்காக மருத்துவமனை கட்ட வேண்டி அதிராம்பட்டினம் கிராம புல எண்.262/41ல் ஏ1.34 செண்ட் நிலம் அரசாணை எண்.325/1983 (வருவாய்த்துறை) படி கிரயம் வாங்கப்பட்டது. அங்கு மருத்துவமனை அமைவதை தடுக்கும் நோக்குடன் அதிராம்பட்டினத்தை சேர்ந்த வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவ்வழக்கினை பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேற்படி வீரகனேசன் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த மாண்பமை உயர்நீதிமன்றம் மனுதாரரை வெகுவாக கண்டனம் செய்திருந்தது. அதன் பின் மேற்படி வீரகனேசன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனுவையும் மாண்பமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன் பிறகு எங்கள் சங்கத்தின் சார்பில் அவ்விடத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சியில் விண்ணப்பம் செய்து, அனுமதி கிடைக்கப் பெற்று பணிகளை துவங்கும் சமயங்களில் எல்லாம் அப்போதைய அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர், திரு.இராம.குணசேகரன் மற்றும் திரு.முத்துக்கருப்பன் ஆகியோர் தொடர்ந்து இடையூறு செய்து வந்தபடியால், எங்கள் சங்கத்தின் சார்பில்  நிரந்தர உறுத்துக் கட்டளை பிறப்பிக்க கோரி அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கினை விசாரித்த மாண்புமிகு பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மேற்படி "சொத்தில் வாதி சங்கத்திற்கு உள்ள வசத்திலும் அனுபவத்திலும் எதிர்வாதிகளோ அல்லது அவர்களுடைய நபர்களோ தலையிடக்கூடாது” என்று நிரந்தர உறுத்துக் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து வழக்கின் எதிர்வாதிகள் பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உரிமையியல் மேல்முறையீட்டு மனுவும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் மேற்படி நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் தீர்ப்பினை உறுதி செய்தன.

மேற்படி நபர்களின் இடையூறுகள் மற்றும் நீண்ட சட்டப் போராட்டம் காரணமாக மேற்படி நிலத்தில் எங்களால் மருத்துவமனை கட்டும் பணியினை துவங்குவதில் தவிர்க்க முடியாத காலத்தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மேற்படி சொத்து வெளி நபர்களால் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு கருங்கல் நட்டு, கம்பி வேலி அமைத்து இருந்தோம். இடையில் சிலர் எதிர்வாதிகளின் தூண்டுதல் பேரில் கம்பி வேலிகளை அகற்றவே, கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு சர்வேக்கு விண்ணப்பித்து எங்கள் சங்கத்திற்கு சொந்தமான மேற்படி நிலத்தினை அளந்து அத்துக்கட்டி கருங்கல் வேலி அமைத்து பாதுகாத்து வந்தோம்.

மேற்படி சொத்தில் மருத்துவமனைக் கட்டும் பணிகளை விரைந்து துவங்குவதற்காக கடந்த 16.05.2023 அன்று முதல் சுற்றுச்சுவர் கட்டும் வேலை ஆரம்பித்து நடந்து வந்தது.

இந்நிலையில் 22.05.2023 காலை சுமார் 10.40 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் கூறியதன் பேரில் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.இராம.குணசேகரன் தலைமையில் வந்த நகர்மன்ற தலைவரின் கணவர் திரு.MMS அப்துல் கரீம் மற்றும் அடையாளம் தெரிந்த நபர்கள் எங்கள் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் வேலையில் ஈடுப்பட்டு வந்த ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களை மிரட்டி துரத்தியுள்ளனர். அங்கிருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை காட்டிய போது, "நாங்கள் சொல்றதுதான் சட்டம். கோர்ட்டுலா எங்கள ஒன்னும் செய்ய முடியாது. வேலைய நிறுத்து.. இல்லனா நடக்குறதே வேற" பேசியுள்ளனர். என ஒவ்வொருமுறை நாங்கள் பணிகளை துவங்கும் போதும் மேற்படி நபர்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ஆகவே சமூகம் ஐயா அவர்கள் இது விஷயத்தில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல், எங்கள் சங்கத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் நடைப்பெற்றுவரும் பணிகளை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்த முயற்சித்துவரும் அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவரின் கணவர் திரு. எம்.எம்.எஸ்.அப்துல் கரீம், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.இராம.குணசேகரன் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணிகளை தொடர உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments