"அதிரையில் சாலை விபத்து".. புரளி பேசும் பூமர் அங்கிள்ஸ்! கருத்து கந்தசாமிகளே.. குடும்பத்தினர் மனநிலையை யோசிங்க

Editorial
1
அதிரையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ரமலான் மாதம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பைக்குகளில் அதிவேகத்தில் செல்வதும், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு பயணிப்பதும் தொடர் கதையாக உள்ளன.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிரையில் சாலை விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் காயமடைந்தனர்.

நேற்று உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்தில் 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செய்திகளை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டு இருக்கும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்த உடனே விபத்தில் காயமடைந்த அல்லது உயிரிழந்தவர் பற்றி எதுவுமே தெரியாமல் இஷ்டத்துக்கு அறிவுரை என்ற பெயரில் அவதூறாக பொது இடங்களிலும் தனிப்பட்ட முறையிலும் பேசுவது, சமூக வலைதளங்களில் எழுதுவது தொடர்ந்து வருகிறது.

விபத்துக்கான காரணம் என்ன? யார் மீது தவறு? வேகமாக சென்றாரா? என எதுவுமே தெரியாமல் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வதற்காக இங்கு நடந்த சம்பவத்திற்கு எங்கிருந்தெல்லாமோ, விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பவம் பற்றி தெரிந்தாலும் கூட அதுபற்றி இப்போது பேசுவது சரியா?  விபத்தில் காயமடைந்தவரோ அல்லது 
உயிரிழந்தவரோ விதிகளை மீறி இருந்தாலும் அது பற்றி பேசும் நேரமா இது? காயமடைந்த, உயிரிழந்த தங்கள் பிள்ளைகளை நினைத்து வேதனையில் இருக்கும் பெற்றோர்கள் மீது வேல் பாய்ச்சுவதை போன்றது இத்தகைய செயல்.

இன்னும் ஒரு சிலர் உச்சக்கட்டமாக சென்று அந்த இளைஞர், சிறுவரின் தந்தையை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி நீ பைக் வாங்கி கொடுத்ததால்தான் உன் மகனுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று எழுதி துன்பத்தில் இருப்பவரை மேலும் குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகிறார்கள். இப்படி இஷ்டத்துக்கு எழுதுபவர்களால் அதே கருத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் நேரில் சொல்ல மனம் வராது. வாட்ஸ் அப் தானே.. என்று எழுதிவிட்டு கடந்து செல்கின்றனர். நேரில் சொல்வதும் தவறுதான். துன்பத்தில் பங்கெடுப்பதுதான் மனித மாண்பே தவிர மேலும் துன்புறுத்துவது அல்ல.

விபத்து நடந்தவுடன் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறாமல் அறிவுரை என்ற பெயரில் அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கி வருவதே இவர்களின் வேலையாக உள்ளது. சென்னையிலிருந்து ஏன் பைக்கில் வரவேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்? அவசர தேவைக்காகவோ, நிர்பந்தத்தினாலோ வந்திருக்கலாம்.. அல்லது ஆசையிலும் வந்திருக்கலாம். அது அவர்கள் விருப்பம். அந்த இளைஞர்கள் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் அல்ல. அதை பற்றி உங்களிடம் விளக்க வேண்டிய அவசியம் எதுவும் அவர்களின் குடும்பத்தினருக்கு இல்லை.

இதில் பெற்றோர் பேச்சை மீறி பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக காதில் கேட்ட தகவலை எல்லாம் எழுதி இறந்த சகோதரர்களின் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். இவ்வாறு அறிவுரை சொல்லும் எத்தனை பேர் பைக்கில் செல்போன் பேசாமல் செல்கிறார்கள்? எத்தனை பேர் ஊருக்குள் ஹெட் லைட்டை டிம் செய்து பயணிக்கிறீர்கள்? எத்தனை பேர் ஹெல்மெட் அணிகிறீர்கள்? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அசம்பாவீதம் நேர்ந்தவுடன் உத்தமர் அவதாரம் எடுத்து அட்வைஸ் மழை பொழிபவர்கள் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் முதலில் திருத்த முயலுங்கள்.

இதில் ஒரு சிலர் விபத்தில் காயமடைந்தவரின் தனிநபர் விபரத்தை காரணமே இன்றி சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். இதனால், அவர்களின் பெற்றோர்களிடம் விசாரிப்பதற்காக தொடர்ந்து செல்போனில் கால் செய்து துன்புறுத்துகிறார்கள். அந்த சமயத்தில் ஆம்புலன்ஸை அழைத்தோ, இரத்தம் கேட்டோ அவசர அழைப்புக்காக அவர்கள் காத்திருக்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் விசாரிப்பதால் எவ்வளவு இடையூறு ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள். காயமடைந்த தங்கள் பிள்ளையை அவர்கள் கவனிப்பார்களா? அல்லது உங்கள் அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டு இருப்பார்களா?

விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இப்படி பாதிக்கப்பட்டவர்களை திட்டுவதன் மூலமாகவோ, விபத்து நேர்ந்தவுடன் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ரெக்கார்டு போட்டு புலம்புவதாலோ எவ்வித பயனும் இல்லை. இதில் தங்களை ஊர் முக்கியஸ்தர்களாக காட்டிக்கொள்வதற்காக வழிந்து வந்து கருத்து சொல்லி தங்கள் இருப்பை நிறுவும் விளம்பர பிரியர்களும் அடக்கம். சிலரோ இதை பேசுவதற்கான ஒரு விசயமாக மட்டுமே பார்க்கின்றனர். உங்கள் அரசியலுக்கும் விளம்பரத்துக்கும் பொழுதுபோக்கிற்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பயன்படுத்துவீர்களா?

எனவே விபத்து நேர்ந்தவுடன் அது தொடர்பாக அறிவுரை, கருத்து, புலம்பல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை திட்டுவது போன்றவற்றை செய்யாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மனநிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள். நமக்கோ நமது குடும்பத்தில் ஒருவருக்கோ இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால் இப்படிதான் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்போமா? என்று சிந்தித்து செயல்படுங்கள்.

உண்மையாக அக்கறை இருந்தால் சீசனுக்கு இதுபற்றி பேசிவிட்டு கடந்து செல்லாமல் மற்ற நேரங்களில் இதனை தடுக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் எதையாவது மேற்கொள்ளுங்கள். இதுபோன்று உங்களிடம் நேரிலோ வாட்ஸ் குழுவிலோ யாராவது பேசினால் அவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள்.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

1Comments
  1. நான் என்ன மனதில் நினைத்து இருந்தனோ அது அப்படியே எழுதி இருகிங்க....

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...