அதிரை சங்க வாட்ஸ் அப் குழுக்களில் அதிரை பிறை மீது சொந்த பகை, வன்மத்தை தீர்க்கும் விஷமிகள்

Editorial
0
அதிரையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாமை அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து நூற்றாண்டு பழமை கொண்ட சங்கம் நடத்தியது குறித்து அதிரை பிறையில் விமர்சன பதிவை நாம் வெளியிட்டோம்.
சங்கத்தை சேர்ந்த முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், அனுதாபிகள், முஹல்லாவாசிகள் என பலரும் நமது பதிவின் நோக்கத்தையும், அதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து அமைதியாகவே இருந்தனர். தொலைபேசி வாயிலாக நாம் அவர்களிடம் பேசியபோதும் நம் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் அவர்கள் செவிகொடுத்து கேட்டனர். நேரில் விளக்கம் கொடுப்பதாகவும் கூறியுள்ளோம்.

அதிரையின் அனைத்து முஹல்லாக்களின் மீது அதிரை பிறைக்கு மரியாதையும் பற்றும் உள்ளது. முஹல்லா கட்டமைப்பும், முஹல்லா ஜமாத்துகளின் தேவையும் இந்த சூழலில் அவசியம் என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், அதை அரசியல் ரீதியாகவும், சுயநலனுக்காக சிலர் வெளியிலிருந்து அழுத்தம் கொடுத்து இயங்க வைப்பது, அதன் பெயரை பயன்படுத்திக் கொண்டு வன்மத்தை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில்தான், நாம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுக்காக அதிரை பிறையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதே நேரம் தனிப்பட்ட முறையில் முஹல்லாவுக்கு உட்பட்ட பலர் நம்மிடம் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பதிவில் எந்த தவறும் இல்லை என கூறுகிறார்கள். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். அதை வரவேற்று அதற்குரிய விளக்கத்தையும் கொடுத்தோம்.

வரலாற்று சிறப்புமிக்க சங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுக்களில் அதிரை பிறை ஆசிரியரை தனிப்பட்ட முறையில் மிகவும் கீழ்தரமாக விமர்சித்து வருகிறார்கள். தவறை ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டியதற்காக முஹல்லாவைவிட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என சினிமா படங்களில் வருவதைபோல் என்னற்ற மிரட்டல்களை கொடுப்பதுடன் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறுகளை பகிர்ந்து வருகிறார்கள். 

சாதாரண பதிவுகள், ஃபார்வேர்டு மெசேஜ்களுக்கு கூட கண்டிக்கும், குழுவை விட்டு நீக்கும் அந்த குழுமத்தின் அட்மின்கள் இவர்களை குழுவை விட்டு நீக்கவில்லை.  அதில் சிலரது விமர்சனங்கள் முஹல்லாக்களின் நலன் சார்ந்து இருந்தது. அதை நாம் வரவேற்கிறோம். எப்போது நம் மீதான விமர்சனங்களை நாம் வரவேற்கவே செய்கிறோம். இப்பதிவு அவர்களுக்கானது அல்ல.  ஆனால், வேறு சிலர் அதிரை பிறை மற்றும் அதன் ஆசிரியர் மீது கொண்ட முன்பகை, வெறுப்பு, வன்மம் காரணமாக தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

அதிரை பிறை கடந்த 10 ஆண்டுகளில் எந்த வித சமரசமும் இல்லாமல் முன்னாள் இந்நாள் ஆளுங்கட்சிகளையும் அதிரையில் உள்ள அதன் நிர்வாகிகளையும் விமர்சித்து இருக்கிறது. அதேபோல் வேறு சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மோசடி கும்பல்கள், வெளிநாட்டு வேலை என்று அழைத்து அதிரை மக்களை ஏமாற்றுபவர்கள், அநியாயமாக வியாபாரம் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மோசடிகள், நில ஆக்கிரமிப்பாளர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், போதை ஆசாமிகள், ஒற்றர்கள், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஊரின் பாரம்பரிய பழக்கமான வீடு வரதட்சனை, தெரு, குடும்ப பாகுபாடு, கந்தூரி போன்ற மார்க்கத்துக்கு புறம்பான செயல்களை விமர்சித்து உள்ளது.

இந்த பதிவுகளால் பலர் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள். ஆனால், இத்தனை இழி செயல்களில் ஈடுபட்டவர்கள், விமர்சிக்கப்பட்டவர்கள், இந்த தவறுகளால் பயனடைந்தவர்கள், அவர்களின் கட்சிக்காரர்கள், நண்பர்கள், குடும்பத்தார்கள், கைகூலிகள், அரசியல், பொருளாதார தேவைக்காக கூடவே இருந்தது துதிபாடுபவர்கள், தெரு, குடும்ப வெறியர்கள், வீடு வரதட்சனையை ஆதரிப்பவர்கள் என பலரும், இதுதான் அதிரை பிறையை பழிவாங்குவதற்கு சரியான நேரம் என்பதை அறிந்து பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார்கள். மற்றபடி இவர்களுக்கு சங்கத்தின் மீதெல்லாம் எந்தவிதமான அக்கறையும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட பகையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நாம் உள்ளே சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பற்றி எந்த பதிலையும் இத்தகையவர்கள் அளிக்காமல் இந்த பிரச்சனையை திசைதிருப்புவதிலேயே குறியாக உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...