அதிரையில் ஆக்கிரமிப்பால் "செப்டிக் டேங்" ஆக்கப்படும் ஆலடிக்குளம் - மாவட்ட ஆட்சியருக்கு பறந்த புகார்

Editorial
0
அதிரையில் முறையான கழிவுநீர் வடிகால் இல்லாத காரணத்தால் சிஎம்பி வாய்க்காலிலிருந்து வருடம் முழுவதும் ஆலடிக்குளத்திற்கு சாக்கடை வந்து கொண்டிருக்கிறது. தற்போது மன்னப்பன் குளத்தில் தேங்கி இருக்கும் பழைய கழிவு நீரை ஆலடிக்குளத்திற்குள் விடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் மாஹிர் தெரிவிக்கையில், "மன்னப்பன் குளத்தை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மலக்கழிவுகள் கொண்டது தான் மன்னப்பன் குளம் தண்ணீர். அக்கழிவுகள் ஆலடிக்குளத்திற்கு வருவதற்கு இது ஏதுவாகிவிடும்.

மன்னப்பன் குளம் இங்கே இருக்கிறது. அதன் வடிகால் எங்கே? மூன்றாம் நாளாக  (சாக்கடை/சேர்) தண்ணீரை இரண்டு மோட்டார் கொண்டு இன்னொரு குளத்திற்கு நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். மனசாட்சி உள்ள அரசு அதிகாரிகள் ஊரில் இருந்தால் வரச்சொல்லுங்கள்.
மாஹிர்

வடிகாலை ஆக்கிரமிப்புக்கு பறிகொடுத்துவிட்டு, ஆளுங்கட்சியினர் பக்கபலமாக இருப்பதால், அதன் துயரத்தை சமூகம் எதிர்கொள்கிறது. தொடர்ந்து தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். ஆலடிக்குளத்து பழைய தண்ணீரை வெளியேற்றுவதற்கான செலவை அவர்கள் தருவார்களா? அவர்களால் உடைக்கப்பட்ட மதகை சரிசெய்யவே நம்மிடம் பணமில்லை." என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள புகார் மனுவில், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்ன பலவற்றில் ஒன்று மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக இருக்கும் என்றார்.

நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களிடையே நடக்கும் தண்ணீர் சிக்கல் இப்போது அதிராம்பட்டினம் நகராட்சி எல்லையில் உள்ள இரண்டு குளம், வடிகால் வரை வந்துள்ளது.

கடந்தாண்டு ஆலடிக்குள வடிகாலுக்கு நடந்த பெரிய டிராமாவும் அதனால் ஏற்பட்ட சமூகப்பதற்றம் தற்போது இரண்டாமாண்டாக தொடர்கிறது.

உலக அதிசயமாக, பம்பிங் செய்யும் தண்ணீர் வடிகாலில் ஓட வேண்டியது, வடிகால் காணாமல் போனதால், அரசாணை 540ன் கீழ் கொடுத்த மனுக்கள் தூங்குவதால், இன்னொரு குளத்துக்கு தண்ணீர் ஓடுகிறது.

பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்தால், வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தேவையற்ற சலசலப்பை நகராட்சி நிர்வாகம் மீண்டும் வேடிக்கை பார்க்கிறது.

மன்னப்பன் குளத்தை குத்தகைக்கு எடுத்தவர் முறையாக குளத்தில் வடிகாலை தெரிந்து கொள்ளாமல், இன்னொரு குளத்திற்கு தண்ணீரை விட்டு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவது நியாயமா?காவல்துறையே, மாவட்ட நிர்வாகமே, நகராட்சி நிர்வாகத்தின் கண்ணசைவில்,   இருட்டில் நடக்கும் இந்த அநியாயத்தை உடனே தடுத்து நிறுத்துக!!! ஆக்கிரமிப்புகளை அகற்ற இப்பொழுதாவது நடவடிக்கை எடுப்பீர்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...