அதிரையில் பெருநாள் பிறையும்... கூட்டமான குளக்கரையும்!முன்னோர்களின் மலரும் நினைவுகள்

Editorial
0
அதிரையில் தொழில்நுட்பம் வருவதற்கு முந்தைய காலத்தில் எப்படி பிறை பார்க்கப்பட்டது? பெருநாள் எப்படி முடிவு செய்யப்பட்டது? என்பன போன்ற நமது கேள்விகளுக்கு குரல் பதிவு வாயிலாக எழுத்தாளர், கல்வியாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் அதிரை பிறையிடம் பகிர்ந்த மலரும் நினைவுகள் இவை...

"ரமலான் நோன்பு மிகச்சிறப்பாக முடிந்திருக்கிறது. அதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நோன்பின் தொடக்கத்தில் எப்போது தலைப்பிறை என்பது தொடங்கி எப்போது பெருநாள்? பிறை பார்க்கப்பட்டதா? போன்ற கேள்விகள் சில ஆண்டுகளாக எழுந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிவிப்பை ஆதாரங்களை காட்டி வெளியிடுகிறார்கள். நோன்பு மகிழ்ச்சியாக சென்றாலும் தொடக்கத்தையும், இறுதியையும் ஒன்றாக அமைப்பது சில ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.

இதுபோன்ற சூழலில் எங்களை போன்ற முதியோர்கள் எல்லாம் அந்த காலத்தில் எப்படி பெருநாள் கொண்டாடினோம் என்பதை சற்று நினைத்து பார்க்கிறோம். அப்போதெல்லாம் எந்த இயக்கங்களும் கிடையாது. எல்லா ஊர்களும் கட்டுப்பாட்டில் இருந்தன. ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு பெரியோர்கள் சொல்வதை கேட்டு நடந்து வந்தனர்.

தலைப்பிறை, பெருநாள் பிறை பார்க்கும் நாளில் எல்லா குளக்கரைகளின் படித்துறைகளில் மக்ரிபுக்கு முன்பிருந்தே கூட்டம் கூடிவிடும். குறிப்பாக கடற்கரைத்தெரு பள்ளிவாசலோடு ஒட்டி இருக்கக்கூடிய வெட்டிக்குளத்து கரையில் பார்த்தால் மேற்கு பக்கம் பிறை பார்க்கக்கூடிய வானம் நன்றாக தெரியும்.

அதேபோல் ஆலடிக்குளத்தில் தற்போது பெட்ரோல் பங்கு இருக்கும் கரையிலும் ஒரு கூட்டம் கூடும். செக்கடி குளம் கிழக்கு நோக்கி இருப்பதால் பிறையை பார்க்க முடியாது என அறிந்து அங்கு கூட்டம் கூடாது. மேற்கு பக்கம் பள்ளிவாசல் மறைத்துவிடும். கரிசல்மணி ஏரியிலும் ஒரு கூட்டம் கூடும்.

எல்லோரும் வானத்தை பார்ப்பார்கள். யாராவது ஒருவருடைய கண்ணில் பிறை தென்பட்டுவிட்டது என்று சொன்னால் உடனே அவர் 4 பேரை அழைத்து பிறையை காட்டுவார். அது சிறிய கீற்றுபோல இருக்கும். கொஞ்ச நேரம்தான் பார்க்க முடியும். அப்படியே ஆங்காங்கே பார்த்த பின்னர் உறுதிபடுத்துவதற்குள் இஷா நேரமாகிவிடும். மரைக்கா பள்ளியில்  (மஸ்ஜிதுல் அக்சா) உறுதிபடுத்தி அறிவிப்பார்கள். அப்போது ஒலிபெருக்கிகள் இருக்காது. நகரா அடித்து அறிவிப்பு செய்வார்கள்.

இஷா தொழுகை முடிந்த பிறகு தக்பீர் சொல்வார்கள். தக்பீர் சொல்லிவிட்டால் பெருநாள் என்று அறிவித்ததாகிவிடும். தக்வா பள்ளியின் அப்போதைய பெயர் துலுக்கா பள்ளி. அங்கு தக்பீர் சொல்லப்பட்டால், செய்தி ஊர் முழுவதும் பரவிவிடும். உடனே ஊர் முழுவதும் கிடாய்களை அறுக்க தொடங்கிவிடுவார்கள். நமக்கு பெருநாள் களைகட்டிவிடும். 

பிறை உறுதிபடுத்த முடியாத நிலை இருந்தால், அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அந்த காலத்தில் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து நமக்கு தகவல் வருவது கடினம். மக்கா, மதினாவுடன் அப்போது தொடர்பு வைத்திருந்தவர்கள் குறைவுதான். சென்னையுடன் தொடர்பு இருந்தது. மண்ணடி மஸ்ஜித் மஃமூரிலிருந்து தகவல் வந்துவிட்டது என்று அறிவிப்பார்கள்.

வெளிநாட்டிலிருந்து தகவல் வேண்டுமென்றால் நமக்கு இருப்பது இலங்கைதான். நமதூர் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த பெரியவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள் தொலைபேசியில் புக் செய்து நமக்கு தகவல் சொல்வார்கள். அதை வைத்து சென்னையிலும் உறுதிபடுத்திவிட்டு அறிவிப்பார்கள். 

1965 காலகட்டம் என்று நினைக்கிறேன். அப்போது நள்ளிரவு ஒன்றரை மணிக்கு பெருநாள் என்று அறிவிப்பு வெளியானது. இலங்கையிலிருந்து தகவல் வந்ததாக சொன்னார்கள். அப்போதெல்லாம் இது போன்ற அறிவிப்புகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஊரில் உள்ள அனைவரும் கட்டுப்படுவார்கள். அந்த பெருநாளை ஊரே ஒன்று கூடி பள்ளிவாசல்களில் நேரத்தை அறிவித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தொழுகை நடைபெறும்.

ஊர் முழுவதும் ஒரே நாளில் அழகான முறையில் பெருநாளை கொண்டாடுவார்கள். பெரிய ஜும்மா பள்ளியில் குத்பாவுக்கு செல்வார்கள். அப்போது ஊரில் பாதிபேர் காலையில் தொழுவதோடு சரி, ஜும்மாவுக்கு வருபவர்கள் குறைவுதான். பலருக்கு செல்ல வேண்டும் என்றே தெரியாது. தற்போது தொழில்நுட்பமும் அறிவும் வளர்ந்துவிட்டது. அறிவு அதிகரிக்க விவாதங்களும் பெருகிவிட்டன. ஆள் ஆளுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கிறது. யார் சொன்னாலும் சரிபோன்றே தெரிகிறது. 

ஏதாவது ஒருவழியில் செல்ல முடியாமல் இருக்கிறது. பித்னா இல்லாமல் குழப்பம் இல்லாமல் இந்த பெருநாளை நல்ல விதமாக கொண்டாட அல்லாஹ் நமக்கு அருள் புரிவான். இந்த கடுமையான கோடை காலத்தில் இடையில் அல்லாஹ் மழையை அனுப்பி கருணை காட்டினான். இருந்தாலும் பலர் கோடை வெயிலை அனுபவித்து இந்த ரமலானை நிறைவு செய்திருக்கிறோம். முகத்தை திருப்பிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் தழுவி சமாதானமாக ஒற்றுமையான முறையில் ஒரே மாதிரியாக பெருநாளை கொண்டாட வேண்டும் என நாம் துஆ செய்வோம். " என்றார்.

உங்களின் மலரும் நினைவுகளை கமெண்ட் செய்யுங்கள்!

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...