அதிரையில் வீடுகளில், பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படாமல் கிழிந்த குர்ஆன்களும், மார்க்க நூல்களும் குப்பைகளில் கிடப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இதனை கண்டு பலரும் வேதனைப்பட்டாலும் தீர்வை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் அதிரை ESA மிஷன என்ற பெயரில் இயங்கும் தன்னார்வலர்கள் குழு அல் கரீம் பின் என்ற பெயரில் திட்டத்தை தொடங்கி, பள்ளிவாசல்களில் தண்ணீர் டேங்குகளை வைத்து அதில் பழைய குர்ஆன்கள், மார்க்க நூல்களை போடுமாறு மக்களிடம் வலியுறுத்தினர். சில மாதங்களிலேயே இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்க, தற்போது 6,000க்கும் அதிகமான நூல்கள் இந்த டேங்குகளில் போடப்பட்டுள்ளன.
விளம்பரம்:
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "அல்கரீம் பின் - கண்ணியமான தொட்டி என்ற பெயரில் தற்போது 6000+ க்கு மேற்பட்ட புத்தகங்களை சேகரித்துள்ளோம். ஆரம்பத்தில் உலமாக்களிடம் மஷூரா செய்த பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இதை நடைமுறை செய்யலாம் என கருதினோம். சங்க நிர்வாகிகளும் நன்றாக ஒத்துழைப்பு செய்தார்கள். ஆனால் இடம் சரியாக வராது, மற்ற சங்கத்திலும் நடைமுறைபடுத்த முடியாது என்ற காரணத்தினால் புதுப்பள்ளி, முஹைதீன் பள்ளி, தக்வா பள்ளி மற்றும் ரஹ்மானியா பள்ளியிலும் வைத்திருக்கிறோம்.
இதில் சேர்ந்த 6000க்கும் அதிகமான புத்தகங்களில் இரண்டாயிரம் பயனுள்ள புத்தகங்களை பிரித்து வைத்தோம்.
அவற்றை காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கும், சில மக்தப்களுக்கும், வீடுகளுக்கும் வாலிபர்களை வைத்து அனுப்பினோம்.
இதை ஆரம்பித்த நோக்கம் - பீர் பாட்டில்கள் அருகில், குப்பைத் தொட்டிகளிலும் இறைவேதம், இறைத்தூதரின் வார்த்தைகளை கண்டோம். காலண்டர்களில் உள்ள ஹதீஸ்தாள்கள், குர்ஆன் தாள்கள், துஆ தாள்கள் அங்கு செல்வதை தவிர்க்க தான் இந்த அல்கரீம் பின் ஏற்பாடு செய்யப்பட்டது. பிப்ரவரி-21-2022 முதல் இன்று வரை அல்ஹம்து லில்லாஹ் நல்ல முறையில் செய்துகொண்டிருக்கிறோம்." என்றனர்.