அதிரை மக்கள் ஏமாற்றம்.. மதுக்கூரை தாலுக்காவாக அறிவிக்கக்கோரிய எம்.எல்.ஏ! நகராட்சி எதுக்கு என மக்கள் கேள்வி

Editorial
0



தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை பேசும்போது "பட்டுக்கோட்டை வட்டத்தை இரண்டாக பிரித்து மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி தர வேண்டும்.

பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நூலகம் மதுக்கூரில் உள்ளது. இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குவதாலும் கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும் மழைக்காலங்களில் ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகி விடுவதாலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பிற்கு தேவையான கருத்துக்களை தெரிந்துகொள்வதற்கும் மதுக்கூர் நூலகத்திற்கு அரசு நிரந்தரமான சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும், உள்ளிட்ட கோரி க்கைகளை தமிழக முதல்வர், துறை அமைச்சர்கள் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்." என பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல் சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் முத்துப்பேட்டை தாலுக்காவாக செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக தாலுக்கா இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தொகுதியாக இருந்த ஊர் இது. தஞ்சாவூர் மாவட்டம் 2 நகராட்சிகளுல் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. என பல்வேறு சிறப்புகளை கொண்ட அதிராம்பட்டினத்தை பட்டுக்கோட்டையிலிருந்து பிரித்து தனி தாலுக்காவாக அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது.

தாலுக்கா அலுவலகம் அமைந்தால், அதிரைக்கு அனைத்திலும் முன்னுரிமை கிடைக்கும். ஆவணங்களுக்காக பட்டுக்கோட்டைக்கு அலைய தேவையில்லை. அதை வைத்து தொழில் வளர்ச்சியடையும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

ஆனால், மக்களை வரிச்சுமையில் தள்ளும் வகையில் நகராட்சியாக அறிவித்துவிட்டு இன்னும் தாலுக்காவாக அறிவிக்காமல் இருக்கிறது தமிழ்நாடு அரசு. எம்.எல்.ஏ. அண்ணாதுரையும் அதிராம்பட்டினம் தாலுக்கா கோரிக்கையை புறம்தள்ளிவிட்டு மதுக்கூரை தாலுக்காகவாக அறிவிக்க வலியுறுத்தி இருப்பது மக்களை ஏமாற்றமடைய வைத்து இருக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...