அதிரை நகர துணைத் தலைவராக பதவியேற்ற நாளிலேயே பதவி விலகுவாரா குணசேகரன்?

அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில், அதிரை நகராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டது நகர திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் போட்டி வேட்பாளராக இராம.குணசேகரனை நிறுத்தி திமுக கவுன்சிலர்கள் துணைத் தலைவராக தேர்வு செய்தனர்.

இது கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினரை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மீறினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் எச்சரித்துள்ளார்.

இதனால் இராம.குணசேகரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சி உத்தரவை மீறியதற்காக தலைமையின் அதிருப்தியை சம்பாதித்துள்ள அவருக்கு இரு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று தலைமையின் உத்தரவுக்கு இணங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது. அல்லது திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகுவது. தீவிர திமுக அனுதாபியான அவர் முதலமைச்சரின் உத்தரவை ஏற்று நகராட்சி துணைத் தலைவர் பதவியை துறப்பார் என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றனர்.

Post a Comment

0 Comments