உதவிக்கு தயங்காமல் அழையுங்கள் - அதிரை நகராட்சித் தலைவர் தாஹிரா அம்மாள் கடிதம்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து முன்னாள் பேரூராட்சித் தலைவர் MMS தாஹிரா அம்மாள் அவர்கள் அதிரையின் முதல் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிரை நகராட்சி மன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் தலைவர் தாஹிரா அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், அவர் அதிரை மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், "அன்பிற்கினிய அதிராம்பட்டினம் நகர பொதுமக்களே உங்கள் அனைவரின் மீதும் ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக என்ற பிரார்த்தனையுடன் இம்மடலை வரைகிறேன்.

அன்பார்ந்த உறவுகளே கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம் சார்ந்துள்ள திமுகழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றிக்கு பின்னர் உங்களின் சகோதரியாக என்னை நகர் மன்ற தலைவியாக அமரவைத்து அழகு பார்கின்றீர்கள் உங்களின் அன்புக்கும் கட்டளைக்கும் இணங்கி நகர வளர்ச்சிக்கு கழகத்தின் உறுதுணையோடு நிச்சயமாக பங்காற்றுவேன்.

நமது நகரத்தின் வளர்ச்சி,மேம்பாடு, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்களாகிய உங்களிடம் இருந்து நான் ஒத்துழைப்பை உரிமையோடு கேட்கிறேன்.

நீங்கள் அளிக்கும் ஆதரவும், ஒத்துழைப்பால் மட்டுமே நமது நகரமும் மக்களின் வாழ்வும் மேம்படும்.

பாகுபாடு அற்ற ஒளிவு மறைவில்லாத நிர்வாகத்தை கட்டமைத்து 100℅ மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட முன்னேற்ற கழக அரசின் நல்ல பல திட்டங்களை பெற்றுத்தர நானும்,உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் செயல்பட உங்களின் பிராத்தனைகளை எதிர்நோக்கி இருக்கின்றேன்.

மேலும் நகர்மன்ற தொடர்பாக எந்த உதவிக்கும் என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments

 1. *சொகுசு வாகனங்களை வாங்கும் திட்டத்தை நகராட்சி தள்ளிப்போட கோரிக்கை*

  பெறுநர்
  நகராட்சித் தலைவர்
  அதிராம்பட்டினம்

  இன்று (28/03/2022) தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு முதல்மைறையாக நகராட்சி மன்றம் கூடுகிறது.

  இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

  முக்கிய தீர்மானங்களில் நகராட்சி ஆணையர், தலைவர்களுக்கான சொகுசு வாகனங்கள், நகராட்சி கட்டடம், திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு விடுவது, மாதாந்திர வாகன செலவு நிதி ஒதுக்கீடு, பொதுப் பாலங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றிற்கு இந்த முதல் அமர்வில் உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

  மக்களின் அடிப்படைத் திட்டங்களுக்கு இன்னும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பொதுமக்களிடம் வீட்டு வரி வசூலை துரிதப்படுத்த வேண்டி கடந்த வாரம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டுவதாக இருந்து பிறகு ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

  இந்நிலையில் இன்று கூடும் முதல் அமர்வில் சொகுசு வாகனங்களுக்கு சுமார் 30இலட்சம் வரை நிதி ஒதுக்க தீர்மானம் கொண்டுவரப்படுவதாக தெரிகிறது.

  இவற்றை நகராட்சித் தலைவர் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் திட்டங்களை குறிப்பிட்ட அளவில் நிறைவேற்றி மக்களின் நன்னம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும்.

  நகராட்சி துப்புரவுப் பணிக்கு தேவையான வாகனங்களே இல்லாத போது, (தற்போது இரண்டு வாகனங்களே இருக்கிறது), சொகுசு வாகனங்கள் வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி

  முகம்மது மாகிர்

  ReplyDelete