அதிரை மக்கள் ரொம்ப மாறிட்டாங்க என புலம்பும் உ.பிக்கள்... உதிக்குமா சூரியன்...?

Editorial
1
அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு  19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு தற்போது ஓய்ந்திருக்கின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தொடர்ந்து அதிரை உள்ளாட்சித் தேர்தல் களம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்து அதிரையை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்கள், பிற்பட்டவர்கள், அனைத்து சமூகங்களை சேர்ந்தவர்களிடம் நாம் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் கருத்துக்களை கேட்டோம். சமூக வலைதளங்களில் அதிரை மக்களின் கருத்துக்களை நாம் தொடர்ந்து கவனித்து வந்தோம்.

இதில் பாஜகவுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காவிட்டாலும் பெரும்பாலான வார்டுகளில் அதிமுகவுக்கு எதிர்ப்பு அலையே உள்ளது. அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சுயேட்சையாக பைப் சின்னத்தில் போட்டியிடுவதையும் மக்கள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். இதையெல்லாம் கடந்து சொந்த செல்வாக்கு காரணமாக ஓரிரு இடங்களில் அதிமுக கணிசமான வாக்குகளை பெறும் வாய்ப்பு உள்ளது.

அடுத்து திமுகவுக்கு வருவோம்.. பாஜக வந்துவிடும் என்று சொல்லியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவினருக்கு இதில் எதை சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியவில்லை என்பதை அவர்களின் பிரச்சாரங்களில் காண முடிந்தது. சி.ஏ.ஏ. போராட்டங்களில் திமுக தலைமை ஓரளவு பங்கு கொண்டு மக்களிடம் கையெழுத்து இயக்கம் போன்றவற்றை நடத்தினாலும், அதனால் அதிகம் பாதிப்பை சந்திக்கக்கூடிய இஸ்லாமியர்கள் அதிரை வசிக்கும் அதிரையில் நகர திமுகவின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

அதிரையில் நடைபெற்ற ஷாஹின் பாக் போன்ற போராட்டங்களில் திமுகவை சேர்ந்த சில உறுப்பினர்கள் பங்குபெற்றாலும் நகர திமுக நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டும், அழைத்தால் சிறப்பு விருந்தினர்போல் வந்து அமர்ந்துவிட்டு செல்வதாகவுமே இருந்தது. அடுத்து இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே காவி கும்பலால் பரப்பப்பட்ட கொரோனா ஜிஹாத் என்ற அவதூறு பிரச்சாரத்துக்கும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமை முறையான எதிர்வினை ஆற்றவில்லை. குறிப்பாக கொரோனாவை காரணம் காட்டி அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் ஆண்கள், பெண்கள், முதியவர்களை வீடு புகுந்து மனிதாபிமானம் இன்றி நள்ளிரவு நேரங்களில் எல்லாம் அரசு அதிகாரிகள் அழைத்து சென்றபோது நகர திமுக கண்டுகொள்ளாமலேயே இருந்தது.

அந்த சமயத்தில் அதிராம்பட்டினத்துக்கு சென்றால் கொரோனா வந்துவிடும் என பரப்பப்பட்ட மத துவேச அவதூறால் சுற்றுவட்டார கிராமங்கள் நமதூரை புறக்கணித்தன. இதனால் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடியபோது எதிர்க்கட்சியாக இருந்த இஸ்லாமியர்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் திமுக எதையுமே செய்யவில்லை. ஷிபா உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் செவியலர்கள் அதிரைக்கு வர பக்கத்து கிராம ஊராட்சிகள் தடை விதித்தபோது அங்கு ஊராட்சி, ஒன்றிய பதவிகளை அலங்கரித்த திமுக தடுக்க முயலவில்லை. நகர திமுகவும் அவர்களுடன் பேசி இதற்கு தீர்வுகாண முற்படவில்லை.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் எனக்கூறிவிட்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், அதை குறிப்பிடாமல் விட்டுவிட்டு எதிர்ப்பு எழுந்த பிறகு அதில் திருத்தம் செய்ததையும் மக்கள் மறந்துவிடவில்லை. சட்டமன்றத்தில் அதற்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் அதன் பின்னர் அந்த விவகாரம் குறித்து கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது.

அதே தேர்தல் அறிக்கையில் அதிரையில் உயிர்கொல்லி காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. 2016 திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோதே அதிரை பிறையில் நாம் அதன் பாதிப்புகளை சுட்டிக்காட்டியதால், மக்கள் மத்தியில் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த தேர்தல் அறிக்கையில் மீண்டும் அதை குறிப்பிட்டது அதிரையர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை முதலில் அம்பலப்படுத்தி அதிரை பிறை வெளியிட்ட பதிவு அந்த தேர்தலிலேயே திமுகவுக்கு தலைவலியை கொடுத்தது. நமது பதிவால் எழுந்த தொடர் அழுத்தங்களால் தொழிற்சாலை அமைக்கப்படாது என பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை உறுதி அளித்தாலும் அது எழுத்துப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.

இருப்பினும் பாஜக அதிமுக கூட்டணிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அதிரை மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். அதிரை பிறை அந்த தேர்தலுக்கு முன் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் இதையே காட்டியது.

பாஜக வரக்கூடாது, அதிமுக மீதான அதிருப்தி என்ற காரணத்தாலேயே 69% பேர் திமுகவை அந்த தேர்தலில் ஆதரித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியதை தவிர்த்து இஸ்லாமியர்களின் எந்த கோரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை. அதில் முதன்மை கோரிக்கையாக இருந்த கோவை சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் அவர்கள் ஜாமீன் பெறுவதற்கு எதிராகவே திமுக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே கருதி வருகின்றனர். அதேபோல் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான காவல்துறை அடக்குமுறையும் தொடர்ந்து வருவதால் திமுக மீதான மக்களின் நன்மதிப்பு குறைந்துள்ளது.

அதே போல் அதிரை நகராட்சியாக்கப்பட்டு வார்டு மறுவரையறையில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் வகையிலும், மக்கள் தொகையை குறைத்துக் காட்டி வார்டுகளை குறைத்ததாகவும் திமுக அரசு மீது அதிரை மக்கள் பரவலாக குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பாக அதிரை நகராட்சியை முற்றுகையிட்டு சம்சுல் இஸ்லாம் சங்கமும், இஸ்லாமிய கட்சிகளும், பொதுமக்களும் இணைந்து நடத்திய போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த வார்டு மறுவரையறை புகாரை உள்ளூர் திமுக பிரமுகர்களே மறுத்து வரும் நிலையிக் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் சேர்மன் அஸ்லம், வார்டு மறுவரையில் குளறுபடிகள் சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் கடந்த 9 மாதங்களில் அதிரையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும் அதிமுக ஆட்சியில் இருந்த நிலையே தற்போது தொடர்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்படி மக்களிடையே ஒரு பக்கம் எதிர்ப்பு அலை இருக்க, மறுபக்கம் உட்கட்சிப்பூசலில் சிக்கி தவித்து வருகிறது திமுக. கூட்டணியிலிருந்த காங்கிரஸ், முஸ்லிம் லீக் தனித்து போட்டியிடுவதால் திமுகவுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சீட் கிடைக்காத அதிருப்தியில் திமுகவை சேர்ந்த பலரே சுயேட்சையாக களம் காண்பதாலும் திமுகவின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் திமுகவை சேர்ந்த சில வேட்பாளர்களை வீழ்த்த அந்த கட்சியை சேர்ந்தவர்களே சிலரை சுயேட்சைகளாக நிறுத்தி பணம் செலவு செய்து வெற்றியை தடுத்து வருகின்றனர். இதுபோன்ற விசயங்கள் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வாக்கு சேகரித்த திமுகவினரிடம் மக்கள் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தனர். திமுகவை சேர்ந்த தொண்டர்களே உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் எனக்கூறி வருவதால் நகர திமுக தலைமையும் கலக்கத்தில் உள்ளது.

Post a Comment

1Comments
 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பான அதிரை இஸ்லாமிய மக்களே சிந்தியுங்கள்
  இந்த அயோக்கிய பயல் ஏனாதி பாலு எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு அதிராம்பட்டினத்துக்குள் கால் வைக்கிறான்
  கடந்த காலத்தில் உங்கள் இஸ்லாமிய ஒட்டு எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட்டு இப்பொழுது எதற்கு வருகிறான் இதுவரைக்கும் இந்த தி மு க அணியினர் யாராவது பொறுப்புப்பெடுத்து பதில் சொன்னார்களா ???

  கோவை சிறைவாசிகளின் விடுதலையை முட்டுகட்டையாக்கி கொண்டு இன்றும் இந்த அயோக்கிய
  தி மு க குழு திரிகிறது
  மக்களே சிந்தியுங்கள்

  ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...