அதிரை காயலான் கடையும்... அதிகரிக்கும் மின்தடையும்

Editorial
0

காயலான் கடைக்கும் மின் தடைக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். வீட்டில் மின்சாரம் இல்லை. போனில் சார்ஜ் முடிய போகிறது. சொல்ல வந்த விசயத்தை வேகமாக சொல்லு என்ற உங்கள் எண்ண ஓட்டம் புரிகிறது. இதை எழுதும் எங்கள் வீட்டிலும் மின் தடை ஏற்பட்டு லேப்டாப் சார்ஜ் குறைந்து வருவதால் சொல்ல வந்ததை வேகமாக சொல்லி விடுகிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம்... கடந்த ரமலான் மாதத்திலிருந்து அதிரையில் மின் தடை தொடர்ந்து வருகிறது. தினசரி வீட்டுக்கு பால் வருகிறதோ இல்லையோ... மின் தடை மட்டும் தவறாமல் வந்துவிடுகிறது.

மின் தடை ஏற்படுவதற்கான காரணத்தையும், முன் அறிவிப்பையும் மின்சார வாரியம் வெளியிட்டு விடுவதுடன், பழுதை சீர் செய்து விட்டதையும் தெரியப்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் போன் ரிசீவரை திருப்பி வைத்துவிட்டு மக்களின் குரலுக்கி பதிலளித்தவர்களுக்கு மத்தியில் இவர்கள் சொல்லிவிட்டு செய்கிறார்களே என்று அதிரை மக்கள் நினைத்து பாராட்டியும் வந்தனர்.

ஆனால், இதுவே தொடர்கதையாகி தினசரி ஏதாவது பழுதை காரணம் காட்டி மின் தடை செய்வதை எவ்வளவு தூரம் பொறுத்துக்கொள்ள இயலும் என்பது அன்று பாராட்டிய அதே மக்களின் இன்றைய குமுறலாக உள்ளது.

"ஊரடங்கில் ஊர் சுத்தக்கூடாது என அரசு சொல்லுது, ஆனால், இந்த வெயில் காலத்தில் கரண்டையும் கட் பன்னிட்டு வியர்வையில வீட்டுக்குள்ளயே இருக்க சொன்னால் எப்படி முடியும்?" என்ற குரல்கள் அதிரையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஊரடங்கு காரணமாக வீடுகளில் Work from home பணி செய்வோர் இந்த மின் தடையால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் பணி செய்யும் நேரம் அதிகமாவதாகவும், குறித்த நேரத்தில் பணியை முடிக்க இயலவில்லை, இதனால் உயரதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

"மழை இல்லை. பலமான காத்து இல்லை. மட்டை, மரத் தோவை, விழுவதற்கு, இந்த கொரனா காலக்கட்டத்தில் மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட மாட்டாது என்று மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால் இதில் அவசர மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதை தொடர்ந்து, இன்றைக்கு மட்டும் பல தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் உழைத்துக் கொண்டு இருப்பார்கள். பாராட்டக்கூடியது. ஆனால், மக்களின் சகிப்பு தன்மை ஓரளவு தான்,இருக்கும். போன ஆட்சியில் போகத, மின்வெட்டு தற்போது போவதின் நோக்கம் என்ன? என்பது, பல மக்களின் கருத்தாக பல தளங்களில் உலா வருகிறது." என அதிரை TNEB  வாட்ஸ் அப் குழுமத்தில் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார் ஒரு அதிரையர்.

"அடிக்கடி மின்வெட்டு ஏற்கத்தக்கதல்ல.  மின்பாதையில் சமீபகாலத்தில் மட்டுமே இந்த கோளாறுகள் ஏற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு நிவர் புயல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கடைசி நிமிடம் வரை சப்ளை இருந்தது. அந்த சமயத்தில் கூட மதுக்கூர் - அதிராம்பட்டினம் மின்பாதையில் பிரச்சினை ஏற்படவில்லை. மேற்படி மின்பாதை பராமரிப்பின்மை காரணமாக தொடர் பிரச்சினைகள் ஏற்படுகிறதா என்கிற ஐயம் தோன்றுகிறது." என்ற சந்தேகத்தை அதே குழுமத்தில் எழுப்பியுள்ளார் வழக்கறிஞர் முஹம்மது தம்பி.

எல்லாம் நியாயம் தான், ஆனால், காயலான் கடைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைப்பது புரிகிறது. வெயிட் பன்னுங்க விரிவாக சொல்கிறோம்.

அதிராம்பட்டினத்தில் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதே போல் மழை, புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால், எப்போதும் பழுதை காரணம் காட்டி மின்சாரம் துண்டிக்கப்படுவது உள்ளபடியே சந்தேகத்தை தருகிறது.

மாதாந்திர பராமரிப்பு பணிகளின்போது ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்? அல்லது எப்படி சீரமைத்தால் பழுதாகும் அளவுக்கு பழைய இரும்புக்கடை போல் பழைய கருவிகளை கொண்டு காலம் தள்ளுகிறதா அதிரை மின்சார வாரியம் என்ற கேள்வி எழுகிறது.

தொழில் நகராக மாறி வரும் அதிரையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதுடன் ஊர் எல்லையும் விரிந்து வருகிறது. இதனால் அதிரைக்கான மின் தேவையும் அதிகரித்து வருகிறது. 

எனவே 2015ம் ஆண்டு அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தபடி அதிரையில் 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின்நிலையத்தை அமைத்தால் பழுதுகளையும், மின் வெட்டையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...