அதிரையர்களே... வீடு வரதட்சனை என்னும் ஹராமை விட்டு விலகுவோம்

Editorial
0

ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் பெண் வீட்டார்கள் படும் கஷ்டம் சொல்லுந்தரமன்று. அதுவும் நமதூருடைய தொன்று தொட்ட வழிமுறைகள் பெண் வீட்டார்களுக்கு மேலும் சிரமங்களை தரக்கூடியதாகவே உள்ளது. குறிப்பாக வீடு வரதட்சனை என்ற பாவத்தை மார்க்கம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரும் செய்து கொண்டிருக்கின்றனர்.


குடும்பத்திற்க்கு ஒரு உலமா இருக்கக்கூடிய நமது அதிரையில், கல்வியாளர்கள் நிறைந்து காணப்படும் நமது அதிரையில் இன்னும் ஒழிக்க முடியாத கொடுமையாக இருந்து வருகின்றது இந்த வீடு வரதட்சனை. ஊரில் வாரா வாரம் நிகழ்த்தப்படும் ஜும்மா பயான்கள், மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டங்கள், சிறப்பு மார்க்க விளக்க ளில் இந்த கொடுமையை குறித்து பெரும்பாலும் பேசப்படுவது இல்லை.

மார்க்க விளக்க கூட்டங்கள் மூலம் அதிரையில் தொன்று தொட்டு பல காலங்களாக நடைபெற்று வந்த பல்வேறு மூடப் பழக்க வழக்கங்கள் அதிரையில் சமீப காலங்களில் ஒழிக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த வீடு வரதட்சனை கொடுமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் பெரும்பாலானவர்களுக்கு இது பாவம் என்றே தெரிவதில்லை. பலர் மார்க்கம் தெரியாமல் இதனை செய்து வருகின்றார்கள். இதற்கு யார் மீது குறை சொல்வது? பெண் வீட்டார்கள் மீதா? மாப்பிள்ளை வீட்டார்கள் மீதா? இந்த பாவம் குறித்து பெரிய அளவில் எச்சரிக்காதவர்கள் மீதா?


நமதூரில் பல இளைஞர்கள் தங்களின் சகோதரிக்காக வீடு கட்ட பொருள் சேர்ப்பதற்க்காகவே தங்கள் பொன்னான இளமை பருவத்தை கழித்து விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் வீடு கட்டுவதனாலேயே நமது அதிரையின் எல்லை மிலாரிக்காடு வரை நீண்டு விட்டது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளும் வருடத்தில் மே மற்றும் டிசெம்பர் மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில் பூட்டப்பட்டே கிடப்பதை நம்மால் காணமுடிகின்றது.

நமதூரில் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பெண் வீட்டார்களிடம் வரதட்சனை, வீடு வாங்குவதை விரும்புவதில்லை. நபி அவர்களின் வழிமுறைபடி மஹர் வழங்கி திருமணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை தங்கள் குடும்ப கவுரவத்திற்காகவும், பழமையில் ஊரிப்போன காரணத்தினாலும் அவ்வாறு முறையில் நடக்க விரும்புவதில்லை.

மேலும் பெண் வீட்டார்கள் பலர் தாங்களாக முன்வந்து மாப்பிள்ளை வீட்டார்களுக்கு வீட்டை வழங்குகின்றனர். அதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் நமது கேள்வி என்னவென்றால், இஸ்லாம் வழியுறுத்திய பாகப்பிரிவினையை அவர்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்று...? 

செல்வம் படைத்த பெண் வீட்டார்கள் இவ்வாறு வழங்குவதன் காரணத்தால் மாப்பிள்ளை வீட்டார்களின் மனதில் பெண் வீட்டார்கள் அன்பளிப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு சில காலங்கள் கழித்து  கட்டளையாக மாறிவிடுகிறது. விளைவு, பல ஏழை குமர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.

அதே போல், மாப்பிள்ளை வீட்டார்கள் சிலர் "நாங்களாகவே வீடு கேட்கவில்லை, பெண் வீட்டார் விருப்பப்பட்டு தான் வீடு தருகின்றனர்" என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால், இவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் பெண் வீட்டாரிடம் வீடு இல்லாமல் இருந்திருந்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருப்பார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலும் அமைதியே பதிலாக கிடைக்கிறது.


இவ்வாறு குடும்ப கவுரவத்திற்க்காக மார்க்க நடைமுறைகளை மறந்து ஆடம்பரமாக, வரதட்சனை வழங்கி திருமணம் செய்யப்படும் தம்பதிகளின் வாழ்வில் அல்லாஹ்வின் உதவியும் ஒற்றுமை இல்லாமல் போய்விடுகிறது. இனி வரும் காலங்களில் வரதட்சனைகள் இல்லாத திருமணங்களை முடிக்க நாளைய மாப்பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் முன்வர வேண்டும்.

வீடு வரதட்சனையின் விபரீதங்கள்.
 • வரதட்சனை
 • பாகப்பிரிவினை(ஆணுக்கு சொத்துரிமை மிகக்குறைவு)
 • ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்பம் பெண்ணின் கட்டுப்பாட்டுக்குள் போகிறது.
 • இந்த நிர்பந்தத்தினால் வெளிநாட்டு பணிக்கு செல்வதால், மனைவியை பிரிந்து இருக்கும் காலம் அதிகமாகிறது.
 • முதுமையில் பெற்றோர்கள் கைவிடப்படுகின்றனர். குறிப்பாக தந்தைமார்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர்.
 • இஸ்லாம் காட்டித்தந்த வழியில் திருமணம் நடைபெறுவது இல்லை.
 • வீடுகளை கட்டுவதற்காக ஹராமான சம்பாத்தியத்தையும் சிலர் தேர்வு செய்கின்றனர்.
 • வீடுகளுக்காக பல குடும்பங்கள் வட்டியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
 • முதிர்கன்னிகள் அதிகமாகின்றனர்.
 • கணவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இல்லை
 • தந்தையின் கண்டிப்பு இன்றி குழந்தை வளர்கிறது
 • பெற்றோரின் ஜனாசாவை கூட மகன் காண முடியாத நிலை
 • விவாகரத்து அதிகமாகிறது
 • வீடு கட்ட விரைந்து பணம் சம்பதிப்பதற்காக தனக்கு பிடித்த துறையில் கூட வேலை செய்யாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர்.
 • திறமைகள் இருந்தும் அத்துறையில் இளைஞர்களால் சாதிக்க இயலவில்லை.

 இவை அனைத்திலிருந்தும் இனி வரும் சந்ததியை பாதுகாக்க ஊர் வழக்கம் என்ற பெயரில் நடைபெறும் வீடு வரதட்சனை என்னும் ஊர் கொல்லியை விரட்டி அடிப்போம்

வீடு வரதட்சனையை ஒழிப்பது எப்படி? 
அதிரையில் வீடு வரதட்சனை முறையை தவறு என்று நாம் பேசி வந்தாலும், அதனை தற்போதைய சூழலில் களைவது எப்படி என்பது குறித்து பலரும் முறையான செயல்திட்டங்களை முன் வைப்பது இல்லை. ஆனால் நமது மாற்றம் காண்போம் என்ற குழுவின் மூலம் செயல் திட்டத்தை முன்வைத்து இதனை ஒழிக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளோம்.

செயல்திட்டம்:
வீடு வரதட்சனை வாங்குவது தவறு என திருமணம் செய்ய உள்ள இளைஞர்கள் புரிந்து வைத்திருந்தாலும், அவர்கள் நிர்பந்தமான நிலையிலேயே வீடுகளை வாங்குகின்றனர்.

காரணம், தன்னுடைய வீட்டை பெற்றோர்கள் சகோதரிக்கு வழங்கி விடுவதால் ஆண்களுக்கு வீடு என்பது இல்லாமல் ஆகிவிடுகின்றது. எனவே, அவர்கள் தவறு என தெரிந்தும் வேறு வழியின்றி மனைவியிடம் வீடு வாங்கும் நிர்பந்தமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இவர்களின் சகோதரிகளுக்கும் வீடு வாங்காத ஒருவர் கணவராக அமைந்து தன்னுடைய வீட்டுக்கு மனைவியை அழைத்து சென்றுவிட்டால், இந்த இளைஞருக்கு அவருடைய சொந்த வீடு கிடைத்துவிடும். அவரும் தனது மனைவியிடம் வீடு வாங்க தேவையில்லை அல்லவா. ஆக, இவர் வீடு வாங்காத பட்சத்தில் அந்த இளைஞருடைய மனைவியின் சகோதரருக்கு அவருடைய வீடு சொந்தமாகிவிடுகிறது. இதனால் அவரும் தனது மனைவிடம் வீடு வாங்க மாட்டார். இது போல் சங்கிலி தொடராக காலப்போக்கில் கலாச்சாரம் நல்ல மாற்றத்தை நமதூரில் காணும்.

எனவே, முதலில் நாம் மாற்றம் காண வேண்டியது இது போன்ற நிலையில் உள்ள இளைஞர்களையும், உடன் பிறந்த சகோதரிகள் இல்லாத இளைஞர்களையும் தான்.

இது போன்ற இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வீடு வரதட்சனையின் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும். பின்னர் வீடு வாங்கமாட்டேன் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்தவுடன், மணமகன் குறித்த முழு தகவலை சேகரித்துக்கொள்ள வேண்டும்.  அத்துடன், என் மகளுக்கு வீடு கொடுக்காமல் தான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்துக்கொள்ள வேண்டும்.

இது ஒரு திருமண தகவல் தளம் போல் உருவான பின்னர், வீடு கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெண் வீட்டார், அல்லது வீடு கொடுக்க கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்கள் நம்மை தொடர்புகொண்டு வீடு வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வேன் என உறுதியுடன் உள்ள மாப்பிள்ளை வரன்களை கேட்டுப்பெறலாம்.

அவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில், வீடு வரதட்சனை இல்லாத திருமணங்கள் காலப்போக்கில் அதிகரிக்கும். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி பிற்காலத்தில் ஊரே இதில் ஐக்கியமாகும் சூழல் உருவாகும். மொத்தத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்

"மாற்றம் காண்போம்"

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

அதிரை பிறையில் இரவு 10:15 மணிக்கு தினசரி ஒளிபரப்பாகும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் நேரலை பயான் நிகழ்ச்சியில் வீடுவரதட்சனை குறித்து விரிவாக பேசி வருகிறார்கள். அதை பார்த்து தெளிவடைந்துகொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...