பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக

Editorial
0


தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இதற்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக உள்ளது. 


தமிழகத்தில் செல்வாக்கு இல்லாதபோதிலும் கூடுதலான சீட்டுகளை, தாங்கள் சொல்லும் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக வற்புறுத்தி வருகிறது. இதனால் அதிமுக தலைமை செய்வதறியாமல் திணறி வருகிறது.


தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க தலைமையிடம் பா.ஜ.க வழங்கியுள்ளது. அதைக்கண்டு அ.தி.மு.க தலைமை அதிர்ந்துபோய் உள்ளதாம். குறிப்பாக பாஜக பட்டுக்கோட்டை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளதாம்.


கடந்த பிப்ரவரி 20ம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பங்கேற்றதன் மூலம் இத்தகவலை மேலும் உறுதிபடுத்த முடிகிறது. 


பல ஆண்டுகளாக திமுக கூட்டணி வசம் இருந்த பட்டுக்கோட்டை தொகுதி சென்ற முறைதான் அதிமுக வசம் சென்றுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் என்.ஆர்.ரங்கராஜன் 3 முறை பட்டுக்கோட்டையில் வென்றுள்ளார். எனவே அக்கட்சியும் பட்டுக்கோட்டையை கேட்கும் வாய்ப்பு அதிகம்.


அதே போல் சென்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் 3-வது இடத்தை பிடித்தார். தேமுதிக - அதிமுக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டால் அக்கட்சியும் பட்டுக்கோட்டைக்கு போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.


பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கருப்பு முருகானந்தம் பட்டுக்கோட்டை தொகுதியில் சென்ற முறை போட்டியிட்டு இருப்பதால், அவரை களமிறக்குவதற்காக இம்முறை பட்டுக்கோட்டை தொகுதி பாஜக அதிமுகவிடம் முடிந்தவரை போராடும்.


பட்டுக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை அதிராம்பட்டினமும் மதுக்கூரும் தான் பேரூராட்சிகள். இரண்டிலும் இஸ்லாமியர்கள்  பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் கொண்ட பட்டுக்கோட்டை தொகுதியை அதிமுக பாஜகவுக்கு வழங்குமா என்பது சந்தேகம். அப்படி வழங்கினால் அதிராம்பட்டினம், மதுக்கூர் போன்ற ஊர்களில் இஸ்லாமியர் சமுதாயத்தை சேர்ந்த அதிமுகவினர் களத்தில் இறங்கி பணியாற்றுவார்களா என்பது கேள்விக்குறியே..?

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...