யார் இந்த அதிரை அப்துல் காதர் ஆலிம்..?

Editorial
0
தப்லீக் ஜமாத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞருமான அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள். 
அவர்களின் ஜனாசா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரிடம் தான் கண்ட மாண்புகளை அரிய குணங்களை, மார்க்க பணிகளை பல ஊர்களை சேர்ந்த உலமாக்கள், முக்கியதஸ்தர்கள், தீன்தாரிகள், தப்லீக் சாத்திகள் எழுதி வருகின்றனர். அவற்றை நாம் இங்கு அறிய தருகிறோம்... சிலர் தங்களின் பெயரை பதியாவில் ஊர் பெயரையும், அடைமொழியையும் பதிந்துள்ளார்கள்.

சபியுல்லாஹ் மௌலானா அவர்களின் பதிவு:

தென்னகத்தின் விடிவெள்ளி - அப்துல் காதர் ஆலிம்ஷா

கடந்த ரமலானில் எங்களது உஸ்தாத் மௌலானா முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களிடம் போனில் பேசும் போது வழமையான விசாரிப்புக்கு பிறகு ஹஜ்ரத் அவர்கள், “ துஆ செய், இந்த ரமலானில் ஏராளமான உலமாக்கள் உலகை விட்டு தொடர்ந்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் ” என்று கவலையுடன் கூறினார்கள், அந்த செய்தியை பெரிதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை, ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தாருல் உலூம் தேவ்பந்தின் ஸத்ருல் முதர்ரிஸீனான மௌலானா முப்தீ சயீத் அஹ்மத் ஸாஹிப் பாலன்பூரி அவர்கள் உலகை விட்டு பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி இதயத்தில் ஈட்டியாய் இறங்கியது , ஹஜ்ரத் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன் நான்.  எனவே அன்று முதல் சில தினங்களாக இனம் புரியாத துக்கம் மனதை சூழ்ந்து கொண்டது, அப்போதுதான் மௌலானா ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களின் கவலை எனக்கும் சிறிது புரிய ஆரம்பித்தது,  அதன் பின்னரும் தொடர்ந்து தமிழகத்திலேயே கூட பல உலமா பெருமக்களின் மறைவு செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன, அந்த செய்திக்கு சற்று இடைவேளை வரும் என எதிர்பார்த்த நிலையில் மற்றொரு சோகமான செய்தி தமிழகத்தின் தப்லீக் ஜமாஅத்தின் அமீரான, அதிராம்பட்டினத்தின் அடையாளமாக கருதப்படும் கண்ணியமிக்க அப்துல் காதர் ஆலிம் சாஹிப் அவர்கள் நேற்றைய தினம் 25/06/2020 வியாழன் பகல் ஒரு மணி அளவில் உலகை விட்டு விடை பெற்றார்கள் என்பது குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் உள்ளங்களில் இன்னுமொரு காயத்தை ஏற்படுத்தியது. 

லுஹர் நேரம் வரை உஷாருடன் இருந்தவர்கள் தொழுகைக்காக வீட்டை விட்டு இறங்க எத்தனித்தபோது தடுமாறி கீழே சாய்ந்து விட்டார்கள், அதுவே அவர்களின் இறுதி நிமிடமாகிப்போனது . 

வபாத் உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக அடக்கத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு மாலை ஐந்து மணியளவில் மரைக்காயர் பள்ளி கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 

ஆலிம்ஸா அவர்களின் மருமகன் மௌலானா ஷுஐப் அவர்கள் ஜனாஸா தொழ வைக்க பள்ளி நிரம்பும் அளவுக்கு மக்கள் ஜனாஸாவில் திரண்டிருந்தார்கள்.

 ஊரடங்கு கட்டுப்பாட்டின் காரணமாக பல பேரால் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனது , இல்லாவிட்டால் தமிழகம் அது போல ஒரு கூட்டத்தை கண்டிருந்ததில்லை என கூறப்படும் அளவுக்கு அதிராம்பட்டினமே ஸ்தம்பித்து போயிக்கும்.

 யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ தரும் கூலியை விட்டு எங்களையும் விலக்கி வைத்து விடாதே, அவர்களுக்கு பின் எங்களை சோதனையில் தள்ளி விடாதே, எங்களையும் அவர்களையும் நீ மன்னிப்பாயாக.


முதல் அறிமுகம்
அடியேன் திருச்சி அன்வாருல் உலூம் மதரஸாவில் கல்வி பயின்று கொண்டிருந்த போது அங்கே வருகை புரிந்திருந்த ஆலிம் சாஹிப் அவர்களுடன் மாணவர்களின் ஒரு ஜமாஅத் அதிராம்பட்டினம் புறப்பட்டு வந்தது, அடியேனும் அதில் இடம் பெற்றிருந்தேன்.

 அதுதான் ஆலிம்ஸா அவர்களுடன் அடியேனின் முதல் அறிமுகம். அதிலேயே அவர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் குடி கொண்டு விட்டது. 

பின்னர் மதரசா கல்வியை நிறைவு செய்து பணிக்காக அதிராம்பட்டினம் வந்த போதும் ஆலிம்ஸா அவர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது, அவர்கள் என்னை  மபீஃ (விற்கப்பட்ட பொருள்) என செல்லமாக கூறுவார்கள், அது அஸலில் எனது அண்ணனை எங்களது உஸ்தாத் மௌலானா ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்கள் ஆலிம்ஸா அவர்களிடம் ஒப்படைத்து இவனை நான் உங்களிடம் விற்றுவிட்டேன் என கூறினார்கள், அது நான்தான் என நினைத்துக் கொண்டு ஆலிம்ஸா அவர்கள் என்னையும் மபீஃ என்பதாக அழைப்பார்கள், அல்லாஹ் ஆலிம்ஸா அவர்களின் இந்த சொல்லுக்காகவாவது எனக்கும் மன்னிப்பை வழங்குவானாக, 


ஆலிம்ஸாவிடமிருந்து எனது சிறிய பார்வையில் நான் பார்த்த சில பண்புகளை,    அவர்கள் குறித்து  நான்  கேள்விப்பட்ட  தகவல்களை அது எனக்கும் , மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதால், அடுத்து  தலைமுறையினருக்காக  அது பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள்  என்பதால் அவற்றை இங்கே கூற எண்ணுகிறேன்.

உண்மையான தாயீ
ஆலிம்ஸா அவர்கள் ஒரு உண்மையான தாயீயிக்கு எடுத்துக் காட்டாவார்கள், எப்போதும் சிரித்த முகம், பிரகாசமான தோற்றம், எல்லோரையும் வசீகரிக்கக் கூடிய அன்பான அனுசரணை, எல்லோரையும் அரவணைக்கும் விசாலமான உள்ளம், யாரையும் ஒதுக்கி வைக்காத எல்லோரையும் திறந்த மனதுடன் அணுகும் கள்ளம் கபடமற்ற அணுகுமுறை என ஒரு தாயீயிடம் இருக்க வேண்டிய அனைத்து பண்புகளும் ஆலிம் சாஹிப் அவர்களிடத்தில் நிரம்பி காணப்பட்டன, 

 யாருடைய சொல்லுக்கும் அடங்காத எத்தனையோ முரடர்கள், தவறான நடத்தை கொண்டவர்கள் ஆலிம்ஸா அவர்களின் அன்பான அரவணைப்பால் முற்றிலுமாக அடங்கிப் போனார்கள், ஆலிம்ஸாவால் தமது குடியை விட்டு நேர்வழிக்கு திரும்பியவர்கள் ஏராளம், வாழ்க்கையை தொலைத்து நின்றவர்கள் ஆலிம்ஸாவின் சீரிய வழிகாட்டலால் மீண்டும் தமது வாழ்க்கையை நோக்கி திரும்பியிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. மக்களுக்கு மத்தியில் ஏற்படும் தீர்க்க முடியாத எத்தனையோ பல சமூக, குடும்ப பிரச்சனைகள் ஆலிம்ஸாவின் தலையீட்டால் சுமூகமாகிப் போயிருக்கின்றன.

நபியவர்களைச் சுற்றி தீனை படிப்பதற்காக எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதைப்போல, ஆலிம் சாஹிப் அவர்களை சுற்றி எப்போதும் ஒரு ஜமாஅத் இருந்து கொண்டே இருக்கும். 

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், வசதியற்றவர்கள், ஆதரவற்றவர்கள், புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்கள் என பல விதத்தில் இருப்பார்கள். அவர்கள் யாவரையும் மனம் கோணாமல் ஆலிம்ஸா அவர்கள் வழி நடத்திக் கொண்டிருப்பார்கள்.

 தாவத்தின் மீது ஆழ்ந்த பற்றிருந்தாலும் அதில் தீவிரமான போக்கை அவர்கள் கையாள மாட்டார்கள்..

அவரவர் மனநிலையை நன்கு புரிந்து நடந்துகொள்வார்கள்..

ஆலிம்கள் ஒவ்வொருவரும் தாவத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதேநேரத்தில் தாவத்தை காரணம் காட்டி இல்முக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்...
தஃவத்தும், இல்மும் இரண்டு கண்கள் என்று ஒப்பிடுவார்கள்..

யாரேனும் பயானில் இல்மை சற்று குறைத்து பேசிவிட்டால் அங்கேயே எழுந்து அதை திருத்தி தருவார்கள்..

தேவையுள்ளவர்கள், சிரமப்படுபவர்கள் ௭ன  எத்தனையோ நபர்களுக்கு யாரின் கண்களுக்கும் படாமல் தாரளமாக உதவி செய்வார்கள்..

தமது குடும்ப ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தனக்கு சொந்தமான தோப்பையும் கூட விற்று அவர்களை வாழ வைத்தார்கள்...

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று அதிராம்பட்டினம் வருகை புரிந்த புதிதாக கலிமா கூறியவர்கள் ஆதரவற்ற நிலையில் ஆலிம்ஸாவை நாடி வரும்போது அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடையும்வரை பேணி பாதுகாத்து வந்துள்ளார்கள்...

மாற்று மதத்தவர்களுக்கு கலிமா சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்..

பயணங்களில் தனக்கு அருகாமையில் இருப்பவர்களோடு அன்புடன் பேசி அவர்களை  கலிமா கூற வைப்பார்கள்..

காரில் செல்லும் பொழுது ஓட்டுனர் களுடனும் கனிவுடன் பழகி அவர்களின் உள்ளங்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பார்கள்.. 

தீனுடைய தேட்டமில்லாத மக்களை எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தேடிச் சென்று தீன் பற்றி கூறவேண்டும் என்ற உஸுலுக்கு பொருத்தமான உதாரணமாக ஆலிம்ஸா அவர்கள் திகழ்ந்தார்கள்.

 தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அவர்கள் நடந்த நடையின் கதை பேசும், மஸ்ஜிதுகளெல்லாம் அவர்கள் உம்மத்தின் மீது கொண்டிருந்த ஆழமான கவலைக்கு சாட்சியம் கூறும். 

இளகிய மனம் கொண்டவர்கள். பயானிலேயே 'ஓ'வென்று சப்தமிட்டு அழுவார்கள். துஆ விற்காக கையை ஏந்திய உடன் கண்களில் நீர் கசிய ஆரம்பித்து விடும். அதில் துளி கூட முகஸ்துதி இருக்காது. 

தப்லீக் பெரியார்களின் உதாரணமாக திகழ்ந்தார்கள்.

நபியவர்களைப் பற்றி ஸஹாபாக்கள் விவரிக்கும் போது ஒவ்வொரு ஸஹாபியும் நபியவர்கள் என்னைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். இந்தத் தன்மையை ஆலிம்ஸா அவர்களிடம் கண்கூடாக பார்க்கலாம், ஒவ்வொருவரும் தன்னை விட ஆலிம்ஸாவிற்கு விருப்பமானவர்கள் யாருமில்லை என்று கருதும் அளவுக்கு ஒவ்வொருவருடனும் அன்பாக பழகுவார்கள்.


அவர்கள் நோயுற்றிருந்த சமயத்தில் ஒரு முறை அவர்களை சந்திக்கச் சென்றேன், "அல்லாஹ் உன்னை தாயீ ஆக்குவானாக" என்று துஆ செய்துவிட்டு அதன்பின் அவர்கள் கூறிய வாசகம் தாவத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த தீராத பற்றை வெளிப்படுத்தியது, "மற்றொருவருக்காக ஒருவர் துஆ செய்தால் துஆ செய்தவருக்கும் சேர்த்து அல்லாஹ் அந்த துஆவை அங்கீகரிக்கிறான் என்ற ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ் என்னையும் தாயீயாக்குவான்" என்று தாம் செய்த துஆவின் நோக்கத்தை விளக்கி பூரிப்படைந்தார்கள்.

விசுவாசிகளில் சிலர் தாம் இறைவனுக்கு கொடுத்த வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினார்கள், சிலர் சென்று விட்டார்கள் சிலர் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், அவர்கள் இறக்கும் தருவாய் வரை தமது வாக்கிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை, தன்னை மாற்றிக்கொள்ள யாரையும் அனுமதிக்கவில்லை என்று குர்ஆனால் புகழப்பட்டவர்களின் பட்டியலில் ஆலிம்சா அவர்களும் இடம் பெற்று விட்டார்கள் என்று கூறினால் அது மிகையல்ல. 

உலக பற்றின்மை
அடுத்ததாக அவர்களிடம் காணப்பட்ட பண்பு அவர்களின் எளிமை. மிக சாதாரணமான அலட்டிக்கொள்ளாத எளிய வாழ்க்கை, உலகின் எந்த சுகமும் சுகமல்ல, உலகம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முற்றிலும் லாயக்கற்ற ஒன்று என்பதை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர். 

உலகிலே ஒரு வேற்றூர்காரனைப்போல அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல நீ  வாழ்வாயாக என்ற ஹதீஸின் மொத்த உருவாக திகழ்ந்தவர்கள். 

எத்தனையோ பெரும் பெரும் மனிதர்களை உலகம் கீழே சாய்த்துக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆலிம்ஸாவிடம் மட்டும் உலகம் தோற்றுப்போனது என கூற வேண்டும்.

ஆலிம்ஸா அவர்களின் இறுதி சில வருடங்களில் அவர்கள் பட்ட துயரங்களினால் அவர்களின் கணக்கு வழக்கு எல்லாம் சரியாக்கப்பட்டு விட்டது, இனி நேரடி சுவனம்தான் என்பதை நாம் ஆலிம்ஷாவுடைய விஷயத்தில் இன்ஷா அல்லாஹ் உறுதியாக நம்பலாம், ஆலிம்ஸாவின் வாழ்க்கை தாயீகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையை ஜெயிக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் அழகிய எடுத்துக் காட்டு .


கல்வி, குடும்பம்:
 அதிராம்பட்டினத்தின் பழம் பெரும் மதரஸாவான ரஹ்மானிய்யாவிலேயே கல்வி பயின்று முடித்தார்கள், சுமார் 83 வயதை அடைய பெற்றிருக்கின்றார்கள், நான்கு பெண் மக்கள், நால்வரும் திருமணம் முடித்து எல்லோரும் பிள்ளை பாக்கியமும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள், அல்லாஹ் அவர்களுக்கு ஸப்ரன் ஜமீலாவை நஸீபாக்குவானாக,


இறுதி சொல்:
 உம்மத்தை சுமந்து நின்ற பெரும் பெரும் தூண்கள் எல்லாம்  அடுத்த தலைமுறையினரிடம் தோள் கொடுக்கச் சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அடுத்த தலைமுறையோ தன் பொறுப்பை மறந்து உள்நாட்டு குழப்பத்திலும், வாட்ஸ் விவாதத்திலும் சிக்கியிருப்பது இன்னும் வேதனை அளிக்கிறது, எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற பயம் மனதை கவ்வுகிறது... 

- M. G முஹம்மது சபியுல்லாஹ் அன்வாரி

மேலை மைந்தன் அவர்களின் பதிவு:
ஒரு மகத்தான பரக்கத்  பொருந்திய ஆத்மாவின்  மறைவு

கண்ணியத்திற்குரிய அதிரை   அப்துல்  காதிர்  ஆலிம்ஸா  அவர்களின்  மரணச்  செய்தி  உண்மையிலேயே   செவிமடுக்கிற ஒவ்வொருவரின்  உள்ளத்தை  இன்று  ( 25-06-2020 ) உலுக்கி எடுத்தது  என்பதே  உண்மை. . . 

1952 ல்  தமிழகத்திற்கு   டில்லி  நிஜாமுத்தீனிலிருந்து  வருகை  தந்த மௌலானா  அப்துல்  மாலிக்  தெஹ்லவி  ரஹ்மத்துல்லாஹி  அலைஹி  அவர்களின்  தப்லீஃக்  ஜமாஅத்  வருகை  மூலம்  தமிழகத்தில்  தஃவத்  வ தப்லீஃக்  அறிமுகமானது. . . அந்த ஆரம்ப காலம்  தொட்டு  தஃவத் வ தப்லீஃகில்  ஈடுபாட்டுடன்  பங்கெடுத்தவர்கள்  நமது  அதிரை  அப்துல்  காதிர்  ஆலிம்ஸா  அவர்கள். . . 

        தமிழக தஃவத் வ தப்லீஃகின்  முதல்  அமீர்ஸாஹிபாக திண்டுக்கல்  பேகம்பூரைச்  சேர்ந்த  கண்ணியத்திற்குரிய ஹாஜி  ஸுலைமான்  ஸாஹிப்  ரஹ்மத்துல்லாஹி  அலைஹி  அவர்கள்  இருந்துள்ளார்கள். . . 
2004 அல்லது  2006 ல்  அவர்கள்  வஃபாத்தானார்கள். . . 

      அவர்களின்  மரணத்திற்குப்  பிறகு  தமிழக தஃவத் வ தப்லீஃகின்  மூத்த பொறுப்புதாரிகள்  அனைவரும்  ஏகோபித்த மனதோடு  நம்முடைய அதிரை  அப்துல்  காதிர்  ஆலிம்ஸா  அவர்களை  அமீர்ஸாஹிபாக இருக்கும் படி வேண்டிக்  கொண்டார்கள். . . ஆலிம்ஸா  அவர்கள்  அன்று  முதல்  மரணிக்கும்  வரை  அமீர்ஸாஹிபாகவே  எல்லோராலும்  பார்க்கப்பட்டார்கள். . . அவர்கள்  உடல்  நிலை  சரியில்லாத கடைசி  காலகட்டத்தில்  தமிழக தஃவத் வ தப்லீஃகின்  நிலவரங்களை  அனுசரித்து  மற்ற பொறுப்புதாரிகள்  இந்த மகத்தான உழைப்பை  மகோன்னதம்  மாறாமல்  அமானிதத்தோடு  வழி  நடத்திச்  சென்றார்கள். . . ஆனால்  எந்த பொறுப்புதாரியையும்  யாரும்  ஆலிம்ஸா  அவர்களின்  உடல்  நிலையைக்  கருத்தில்  கொண்டு  தமிழக தஃவத் வ தப்லீஃகின்  அமீர்ஸாஹிபாக முடிவு  செய்யவில்லை. . . காரணம்  இதுவாக இருக்கலாம்  என்பது  அடியேனின்  யோசனையாக உள்ளது. . . அதாவது  ,  

       அதிரை  அப்துல்  காதிர்  ஆலிம்ஸா  அவர்கள்  இருப்பதின்  மூலம்  தஃவத் வ தப்லீஃகில்  பரக்கத்  ஏற்படுவதாகவே  எல்லோரும்  எண்ணியிருக்கலாம். . . இங்கே  பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்  அவர்களின்  ஒரு  சொற்றொடரை  ஞாபகப் படுத்த விரும்புகிறேன். . . ألبرکة مع الأکابر பெரியவர்களுடன்  இருப்பதில்  பரக்கத்  இருக்கிறது. . . இந்த சொற்றொடரின்  அடிப்படையில்  பார்க்கிற போது  நமது  காலத்தில்  நம்மோடு  வாழ்ந்து  இன்று  ( 25-06-2020 ) நிரந்தரமான மறு உலகில்  நித்திரையில்  நீடூடி வாழச்  சென்றுள்ள ஒரு பெரியார்  அதிரை  அப்துல்  காதிர்  ஆலிம்ஸா  அவர்கள்  நம்மை விட்டுச் சென்ற ஈடு  செய்ய முடியாத இழப்பு  ஒரு  மகத்தான பரக்கத்  ஒன்று  நம்மை  விட்டுச்  சென்ற வருத்தமான உணர்வுகளை  நமக்குள்  ஏற்படுத்தியிருக்கிறது. . . 

அல்லாஹ்  அவர்களின்  மறு  உலக வாழ்வை  நிம்மதியானதாக சந்தோஷமானதாக ஆக்கி  அருள்வானாக.


"சின்னகுருமார்" என்ற அடைமொழி கொண்டவரின் பதிவு:

ஒரு மௌன குருவின் மரணம் சொல்லும் செய்தி

அதிராம்பட்டினம் அப்துல்காதர் ஆலிம்ஷா இயற்கை எய்து விட்டார்கள் ! 
நாம்  அல்லாஹ்விற்க்கென்றே உள்ளவர்கள் ! அவனின் பக்கமே மீளவேண்டியவர்கள் !.

குரோதங்கள், காழ்ப்புணர்ச்சிகள், 
கயமைகள், தன்னலவாதங்கள் இன்னும் இன்னும் எத்தனை, எத்தனை வகை தொகையில்லா  கணக்கிலடங்கா 
உளச் சீர்கேடுகள் இருக்கிறதோ,  அத்தனையும் குழுமி யிருக்கும் ஒரு பூமி னியினிலேதான்  நாம் வாழ்கின்றோம். 
அவ்வளவு எளிதில் இந்தத்  தன்மைகளை விட்டு நாம் விடுதலை பெற்று விட முடியாது. அரிதிலும் அரிதாக இந்த அவனியில் சிலர் மட்டுமே  இவைகளை வெற்றி கொண்டிருக்கிறார்கள். தவத்தின் மூலம் அன்று ! தனித்திருத்தலின் மூலமன்று ! மக்களோடு, மக்களாக இரண்டற கலந்திருந்தே பொறுமையின் வடிவில், சகிப்பின் வடிவில்தான் ஜெயம் கொண்டார்கள். 

அவர்கள் இந்த பூமிப் பந்தின் அன்னபோஸ்ட் அரசர்கள் ! தங்களின்  வசீகரிக்கும் ஞானப்பார்வையால் காண்போரை ஈர்த்தவர்கள்!. தங்களின் மௌனத்தின் வழி தீராத சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தந்தவர்கள்.!

அல்லாஹ் நபியைப் பார்த்து கூறிய புகழாரங்களில், சூட்டிய மகுடங்களில்
 " திட்டமாக நீர் மகத்தான குணத்தில் இருக்கின்றீர் !"   என்ற வார்த்தைகளுக்கு இணையான இன்னொன்று குர்ஆனில் காணக் கிடைக்காது. அவ் வார்த்தைகளுக்கு வாரிசுகள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதே நபித்துவப் பணிக்கு பெருமை சேர்க்கக் கூடியது. 
அந்த மகத்தான குணத்தை தங்களின் மரணம் வரை சுமந்தவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தால் அது ஒரு பேரிழப்பு ! பெரும் துயரம் ! அந்த இழப்பும் துயரமும் இன்றைய நாளில் இந்திய இஸ்லாமியச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆம் ! அதிரையின் மௌன குரு மரணித்து விட்டார். இவர் அப்படி என்ன சாதித்து விட்டார் ? என்று நீங்கள் கேட்டால்,  எல்லோராலும் அவர் விரும்பப்பட்டார் என்றே என்னால் சொல்ல முடியும் . அல்லாமா அபுல்ஹஸன் அலி ஹஸன் அந்நத்வி அவர்கள் மரணித்த வேளையில் 
இந்தியாவில் உள்ள  இஸ்லாமிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் " அவர்  எங்களைச் சார்ந்தவர்"هو منا என்று உரிமை கொண்டாடின. இந்தச் சொந்தம் கொண்டாடும் பாக்கியம் மௌலானாவிற்கு அடுத்த படியாய் வாய்க்கப்பெற்றவர்கள் அதிரை ஆலிம் ஷா அவர்களே. மனிதன் தன்னடக்கத் தோடு வாழும் போது அவனுள் அனைவரும் கருத்து பேதமில்லாமல் அடங்கி விடுகிறார்கள் என்பதே அவர்களின் மரணத்தின் வழியே வாழ்வு தரும் செய்தி . 

"மௌனி வெற்றியடைந்து விட்டார் " என்ற நபி மொழிக் கேற்ப ஆலிம்ஷா தன் வாழ்க்கையை தமிழக இஸ்லாமியச் சமூகத்திற்கு பேசு பொருளாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
ஒரு மௌனத்தின் வழி தன்னை அடையாளப்படுத்தி முத்திரை பதித்த  இந்த மகானின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ் உயர்ந்த சுவனத்தை அவர்களுக்கு வழங்கிடுவானாக ! அவர்களை இழந்து வாடும் நமக்கும், அவரின் குடும்பத்திற்கும் அல்லாஹ்  சிறந்த பகரத்தை தந்திடுவானாக ! ஆமீன் !

முஹம்மது ரபீக் மிஸ்பாஹி அவர்களின் பதிவு:

1980 அதிராம்பட்டினத்தில் நான் ஹாபிழ் பிரிவு ஓதிய காலத்திலிருந்து இவரை அறிந்தவன். 
காலம் முழுக்க இஸ்லாமிய தாவா பணியிலேயே தன்னுடைய வாழ்க்கையை கழித்தவர்.

அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமையில் இவர் இருந்தால் மரைக்காயர் பள்ளியில்
வெள்ளிக்கிழமை சுபுஹுத் தொழுகையை 
ஸஜ்தா, தஹ்ர் சூரா ஓதி இவர்தான் தொழ வைப்பார். நிறுத்தி, நிதானமாக ஓதி தொழ வைப்பார். சிறுவயதில் எங்களுக்கெல்லாம் அலுப்பு தட்டிவிடும்.

மேல் விஷாரத்தில் நடந்த உலக இஜ்திமாவின் முன்உழைப்பிற்காக ஆலிம்கள் ஜமாத்  இவர்களுடைய தலைமையில் சுமார் 20 ஆலிம்கள் (நானும்)சென்ற அந்த நாட்கள் பசுமையானவை.
தப்லீக் பணியின் மூலகர்தா இல்யாஸ் மவ்லானாவை கணவில் கண்டுள்ளதாக
சொன்னார்கள்.

இக்லாசான மனிதர், அன்பானவர், ஆதரிப்பவர், அப்துல் காதிர் ஆலிம்சா என்று பிரபல்யமானவர். 
ஏழு வருடங்கள் ஓதி ஸனது பெற்ற ஆலிமா இவர்? என்ன ஸனது என்பது
பலருக்கும் தெரியாத ரகசியம்.
பல்லாயிரம் தப்லீக் பணியாளர்களின் துஆவை பெற்ற ஒப்பற்ற மாமனிதர்.

ஊரடங்கு மட்டும் இல்லாவிட்டால் 
ஆலிம்சா உடைய ஜனாஸா தொழுகைக்காக தமிழகமே இன்று அதிரையில் கூடியிருக்கும்.

அல்லாஹ் அவர்களுடைய கபுரை சுவனப் பூஞ்சோலையாக ஆக்குவானாக!
ஆமீன்.

ஹாபிழ் M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.

இன்னும் பலர் அப்துல் காதர் ஆலிம் அவர்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். உங்கள் பதிவுகளையும் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் தெரிவிக்கலாம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...