அதிரையர்களின் ஆன்லைன் பிசினசும், ஆட்டிப்படைக்கும் பண பிசாசும்

Editorial
0
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காலை எழுந்தவுடன் பல் துலக்க பயன்படும் பசை தொடங்கி இரவு தூங்க வைக்கும் கொசு வத்தி வரை அனைத்தும் ஆன்லைன் ஆகிவிட்டது. இந்த ஆன்லைனில் மக்களுக்கு நிகராக அவர்களிடம் மோசடி செய்து சம்பாதிக்கும் கும்பலும் ஆன்லைனில் முகாமிட்டு விடுகிறது.

3,000 ரூபாய் கொடுங்க 10 மாதம் கழித்து 30,000 வாங்கிட்டு போங்க...! இந்த ட்ரேட் ஆப்பை டவுன்லோடு செய்யுங்க... குறைந்தபட்ச காசை முதலீடு பன்னுங்க... லட்சாதிபதி ஆகுங்க... என ஆன்லைன் சம்பாதிக்க வழி என பல விளம்பரங்களை யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

இதே போல் பிட்காயின் போல் நாங்கள் ஒரு காயினை அறிமுகம் செய்துள்ளோம், அதில் முதலீடு செய்ய இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள் என விளம்பரம் வருகிறது. நம்மவர்கள் அதை டவுன்லோடு செய்து சிறிது முதலீடு செய்கிறார்கள். உடனே அந்த டிஜிட்டல் பணம் பன்மடங்கு ஏறுவதாக காட்டப்படுகிறது. இதனை கண்டு அவர் மேலும் உற்சாகமடைகிறார். அதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்து மற்றவர்களையும் அதற்குள் இழுக்கிறார்.

அவ்வாறு சிலரை பரிந்துரைத்தால் போனஸ் புள்ளிகள் வழங்கப்படுகிறதாம்... இதற்காக இதில் அனைவரையும் கொண்டுபோய் தள்ளுகிறார். சிறிதளவு தொகையை கொடுத்து அவரது போதையை மேலும் அதிகரிக்க செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து அவரை அதில் முதலீடு செய்யத் தூண்டுகின்றன. இவர் மூலம் கொரோனா வைரஸ் போல் ஒரே தொற்றாக பரவிய முதலீட்டாளர்கள் சமூகத் தொற்றாக மாறுகிறார்கள். அப்போது, அந்த ஆப்பை நடத்தும் கும்பல் கிடைத்த மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு, பெரிய ஆப்பு ஒன்றை அடித்துவிட்டு தப்பிவிடுகின்றனர். சில மாதங்கள் கழித்து அதே கும்பல் வேறு விதமான மோசடி உத்தியை கையாண்டு சதுரங்க வேட்டையில் ஈடுபட புறப்பட்டு விடுகின்றனர்.

கொரோனா, எபோலா, நிஃபா வைரஸ் என புதிது புதிதாக வைரஸ்கள் தோன்றி பலர் அதில் பாதிக்கப்படுவதைப் போல், இதுபோல் புதிது புதிதாக தோன்றும் போலி மோசடி நிறுவனங்களால் பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். இதுபற்றி எத்தனை செய்திகள் வந்தாலும், பண ஆசை அவர்கள் அறிவுக்கண்னை மறைத்துவிடுகிறது. இவர்கள் ஏமாறுகிறார்கள் என்பதை விட தங்கள் பண ஆசையால், மார்க்க அறிவின்மையால் மற்றவர்களையும் ஏமாற்றி தங்களுக்கு கிடைக்கும் அற்ப போனஸ் புள்ளிகளுக்காக மோசடிக்கு துணை புரிகிறார்கள்.

ஒரு நிறுவனத்திடம் இதுபோல் பாதிக்கப்பட்டவர் திருந்திவிடுவார் என்று பார்த்தால் மீண்டும் அதுபோல் வேறு ஒரு மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து மற்றவர்கள் ஏமாற்றப்பட வழிவகுக்கிறார். லாட்டரியில், சூதாட்டத்தில் எத்தனை முறை பணத்தை இழந்தாலும் மீண்டும் அதன் பக்கம் செல்பவர்களை, இக்காலத்தில் இந்த முதலீடு மோசடி ஆப்களை மீண்டும் மீண்டும் நாடிச்செல்வது ஒருவித போதையாகிவிட்டது. இது பலரை பாதை மாறி அழைத்துச் செல்கிறது. முறையான வேலை கிடைக்காமல் பொருளாதாரத்தில் திண்டாடும் நபர்களை குறிவைத்து அவர்களை மார்க்கெட்டிங் ஏஜெண்டுகளாக மாற்றுகின்றனர் இந்த மோசடி பேர்வழிகள். வருமானம் இல்லாத அவரும் எளிதில் பணம் கிடைப்பதாக நம்பி செல்கிறார். இறுதியில் அவர்கள் கம்பி நீட்டியவுடன் பாதிக்கப்படுவர்களுக்கு இவர் பலியாடாகி விடுகிறார்.

மேலும் இந்த வருமானத்தை நாடி செல்வோர், முதலீட்டை தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஒரு நிலம், நகை, நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம், அல்லது பங்குதாரர்கள் ஆவதன் மூலம் அதன் லாபம் மட்டுமின்றி நஷ்டத்திலும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், ஆன்லைனில் வரும் முதலீடு என்ற பெயரில் வரும் இதுபோன்ற ஆப்கள் உறுதிபடுத்தப்பட்ட லாபம் என்கின்றன. இதன் நேரடி அர்த்தம் வட்டியாகவே உள்ளது. உறுதியான லாபம் கிடைக்க அவ்ர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்றால் பதில் இல்லை. அவர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள் என்றால் பதில் இல்லை. இப்படி எதுவும் தெரியாமல் லாபம் என உறுதியுடன் சொல்பவர்களை நம்பி ஹலால், ஹராம் பார்க்காமல் நம்மவர்கள் செல்கிறார்கள்.

இஸ்லாமிய பொருளாதார சட்டங்களை நமது மக்களுக்கு உலமாக்கள் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். மாறி வரும் வர்த்தக சூழலில், எது மார்க்கத்துக்கு முரணானது, எது அனுமதிக்கப்பட்டது என்பது சராசரி முஸ்லிமான பலருக்கு தெரியவில்லை. உலமாக்கள் இதனை உற்று நோக்கி சமுதாயத்தை நேரான பாதையில் நடத்த வேண்டும்.

- நூருல் இப்னு ஜஹபர் அலி 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...