நபியை இழிவுபடுத்துவதா? அதிரை நாம் தமிழர் கட்சி உறுப்பினரின் அதிரடி முடிவு

Editorial
0
மலையாள நடிகர் துல்கர் சல்மானின் புதிய படம் ஒன்றில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமரியாதை செய்துள்ளார்கள் எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். வசனத்தை பேசிய பாஜக எம்.பியான நடிகர் சுரேஷ் கோபியையும், இயக்குநர் அணூப் சத்தியனையும் தம்பிகள் விமர்சிக்காமல்  தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மானையும் அவர் சார்ந்த இஸ்லாம் மீதும் முஹம்மது நபி அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இவர்கள் மீது தலைமை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் குமுறுகின்றனர். இந்த நிலையில் முஹம்மது நபி தான் எனக்கு முக்கியம் எனக்கூறி அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அகமது ஜலாலுதீன்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து உள்ளார்.

அவரது விலகல் கடிதம்:

அனுப்புநர்,
அகமது ஜலாலுதீன்,
அதிராம்பட்டினம்.
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் எண்: 67213774603.

பெறுநர்,
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

பொருள்: அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்.

ஐயா,
கடந்த 2017ம் என்னை அதிராம்பட்டினத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் "சீமானின் பதிவுகள்" என்ற ஒரு வாட்ஸ் அப் குழுவில்  இணைத்தனர். அதில் நான் பயணித்து வந்தேன். அக்கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் எனக்கு அடையாள அட்டை தருவதாக கூறி போட்டோ மற்றும் அரசு ஆவணத்தை கேட்டார். நான் அனுப்பியவுடன் கட்சியில் சேர்ந்துவிட்டதாக எனக்கு அடையாள அட்டை கொடுத்தார்கள். அந்த சமயத்தில் சீமான் மீது பெரிய விமர்சனம் எதுவும் இல்லாத காரணத்தினாலும், அவர் பேசுவது நன்றாக உள்ளது என்பதாலும் நான் கட்சியில் சேர்ந்தேன். பிறகு நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் இனவாதத்தை மையப்படுத்தி இருப்பதையும், அது இஸ்லாத்துக்கு விரோதமானதாக இருந்த காரணத்தினாலும் எனக்கு அக்கட்சியின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து சீமானின் செயல்பாடுகள், பேச்சுக்களை கவனித்து வந்த நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் மாற்றி மாற்றி பேசுவதை தெரிந்துகொண்டேன். இதுகுறித்து "சீமானின் பதிவுகள்" வாட்ஸ் அப் குழுவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உள்ளூர் நிர்வாகிகளால் பதில் சொல்ல முடியவில்லை. உடனே என்னை குழுவில் இருந்து நீக்கிவிட்டனர். முழுக்க முழுக்க ஜனநாயகமற்ற சர்வாதிகார போக்கை அவர்கள் கையாண்டனர். தொடர்ந்து முகநூலில் கட்சியின் மீதான விமர்சனங்களை எழுதி அதை அதிராம்பட்டினத்தை சேர்ந்த 2 முக்கிய நிர்வாகிகளிடமும் கேட்பேன். அதிலும் பதிலளிக்க முடியாமல் என்னை ப்ளாக் செய்துவிட்டார்கள்.  

இதைக்கடந்து கட்சி செயல்பாடுகளில் வீரத்தமிழர் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி முருக வழிபாட்டை தமிழ் வழிபாடு தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி இஸ்லாமியர்களிடம் திணிப்பதையும் தெரிந்துகொண்டேன். இந்த அமைப்பு இந்து முன்னணியின் மறு உருவம் போல் எனக்கு தோன்றியது. அதன்பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் மீட்பு பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று  கூறியதையும் அனைவரும் தாய்மதம் திரும்ப வேண்டும் என்று பேச பட்டதையும் கண்டித்து  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அப்போது கட்சியில் இருந்து விலகினர்.  இதுகுறித்து எனது முகநூலில் தொடர்ந்து கண்டனங்களையும் பதிவு செய்து வந்தேன். ஆனால் எனது கண்டனங்களுக்கு எந்த பதிலும் கட்சியிடமிருந்து, அதில் உள்ள அதிராம்பட்டினத்தில் சேர்ந்த நிர்வாகிகளிடம் இருந்தோ வரவில்லை. மாறாக அதுபோல் பதிவுகளை வெளியிட்டதால் என்னை விமர்சனம் செய்ய தொடங்கினர். தற்பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலர் முகநூலில் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலானதாக கருதும் முகமது நபியை இழிவுபடுத்தி பதிவிட்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினருக்கு இணையாக இஸ்லாமியர்கள் மீது அவர்கள் வெறுப்பை கக்கி வருகிறார்கள். இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது அதிராம்பட்டினத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விமர்சனம் செய்கிறார்கள். அதுபோல்  இலங்கையில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த பிரபாகரனை தலைவன் என்று கூறி வீர முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய தம்பிகளும் முகமது நபியை விட பிரபாகரன் மேலானவர் என்பது போல் பேசுகிறார்கள். இதனை கண்டித்து எழுதுபவர்கள் மீது அவதூறு பிரச்சாரம், தனிமனித தாக்குதல்களில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள். இது போன்ற ஒழுங்கீனமானவர்கள் கட்சியில் இருப்பதாலும், அதன் கொள்கை எனது இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமானதாக இருப்பதாலும் அந்த கட்சியில் தொடர்ந்து நீடிக்க நான் விரும்பவில்லை. எனவே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
அகமது ஜலாலுதீன்,
அதிராம்பட்டினம்.

ஜலாலுதீன் போல் அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் பலர் விலகும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் நபரின் ராஜினாமா கடிதத்தில் உள்ளதே தவிர நமது தனிப்பட்ட கருத்து கிடையாது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...