அதிரை உலமாக்களுக்கு அதிரை பிறையின் கனிவான வேண்டுகோள்..!

Editorial
3
அதிராம்பட்டினம் உலமாக்கள் நிறைந்த ஊர். எந்த ஒரு குழப்பமான விசயத்திற்கும் உலமாக்களை சந்தித்து தெளிவுபெற்றுக் கொள்ளலாம். தமிழக அளவில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களை நமதூர் தந்துள்ளது. பல்வேறு அநியாயங்கள், பாவங்கள், தீமைகள், பிரச்சனைகளை பயான்களின் மூலமே ஊரை விட்டு விரட்டியடித்தவர்கள் நமதூர் உலமாக்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையிலும் இணையதளம், சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தேவையான மார்க்க விளக்கங்களை வழங்க நமதூர் உலமாக்கள் தவறுவதில்லை.

அந்த வகையில் மேலும் பல விசயங்களில் 
நமதூர் மக்களை நெறிப்படுத்த வேண்டிய கடமை உலமாக்களுக்கு உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், தொழில்நுட்பம் சார்ந்த, இணையம் சார்ந்த வர்த்தகங்களில் நமதூர் மக்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு பொருளின் தரத்தை பார்க்காமல் வேறு ஒரு தளத்தில் வந்த விளம்பரத்தை தனது நண்பர்களுக்கு பரிந்துரைத்து விற்பனை செய்ய வைத்து அதன் மூலம் கமிஷன் பெறுகிறார்கள். அவ்வாறு விற்கப்பட்ட பெரும்பாலும் பொருள் தரமற்றதாக இல்லை.

இதுபோல் ஆன்லைனில், ரம்மி, கேசினோ, பங்கு முதலீடு, லாட்டரி என பல்வேறு சூதாட்டங்களில் நமது மக்கள் பாவம் என்றே தெரியாமல் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக இந்த லாக் டவுன் நேரத்தில் வேலை இல்லாததால் இதன் மூலம் சம்பாதிக்கலாம் என வரும் யூடியூப் சேனல்களின் விளம்பரத்தை நம்பி அதனை செய்கிறார்கள். இது யாவும் ஹலாலா ஹராமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சில இளைஞர்கள் மாடலிங் என சொல்லி தவறான வழிகளிலும், புகைப்பழக்கம், மது, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளிப்பருவத்திலேயே இவர்கள் இந்த வழிகேடுக்கு செல்லும் அவலம் நிலவுகிறது.

அதே போல், அரசியலில் ஈடுபடுகிறேன் என்ற பெயரில் முப்பாட்டன் முருகன் என்று துணிச்சலாக கூறிவருகிறார்கள். இஸ்லாத்துக்கு இணையாக இனத்தை மேன்மைப்படுத்தி பேசும் நிலைக்கு செல்கிறார்கள். இனத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் கட்சிகளில் சேர்கிறார்கள். இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த இனவெறியனை மாவீரன் தலைவன் என்கிறார்கள். தமிழில் பெயரை மாற்றிக்கொண்டால் என்ன தவறு, நமது தெருவுக்குள் கோவில் கட்டினால் என தவறு என்ற அளவுக்கு கேட்கிறார்கள். மேலும் கொள்கை என்ற பெயரால் கடவுள் மறுப்பையும், பெண்ணியம் என்ற பெயரால் மேற்கத்திய கலாச்சாரத்தையும் ஆதரிக்கும் அவலம் தொடர்கிறது. 

தங்கள் அரசியல் இருப்புக்காக, இன அடையாளத்துக்காக, கட்சியில் நற்பெயர் பெறுவதற்காக இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகிறார்கள். இதுமார்க்கத்துக்கு பொருத்தமானதா? அல்லது முரணானதா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலுத்து வருகிறது. 

தற்போது ரமலான், லைலத்துல் கத்ர், ஜகாத், பித்ரா சட்டங்கள் பற்றிய காலத்துக்கு தேவையான முக்கிய விளக்கங்களை உலமாக்கள் வழங்கி வருகிறீர்கள். ரமலான் முடிந்த பிறகு நாம் மேற்குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த, புதிய தொழில்சார்ந்த, அரசியல் சார்ந்த மார்க்க விளக்கங்களை வழங்கி அதிரை மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த உலமாக்கள் முயற்சிக்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உலமாக்கள் ஆதரவுடன் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த நிகழ்ச்சியில் உலமாக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றியது அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடைந்தது. ஆயிரம் இயக்கங்கள் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்தை ஒருசேர கொண்டு செல்லும் பலம் உலமாக்களிடம் உள்ளது. எனவே இதுபோன்ற விசயங்களில் உலமாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிரை பிறை சார்பாக நாம் கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

3Comments
 1. அதிரை பிறை நல்ல, தூர நோக்கு சிந்தனையோடு பயணிக்கிறது....

  ReplyDelete
 2. இதே துணிச்சலோடு தொடர்ந்து பயணியுங்கள். மாற்று மருத்துவ பித்தலாட்டங்களைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். துரதிருஷ்டமாக இந்த பித்தலாட்டம் பற்றிய விழிப்புணர்வை ஆலிம்களுக்கே முதலில் ஏற்படுத்தவேண்டும்.

  ReplyDelete
 3. ஊடகம் என்ற பெயரில் அவதூறுகளையும், ஒரு அரசியல் கட்சியில் பயணிப்பதால் தன் மார்கத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்று பொய் சொல்வதும், தான் பிரபலமாவதற்காக பிறர் மனம் புன்படும் வகையில் எழுதுவதும்..

  உறவினர், நன்பர் என்பதற்காக இத்தகைய அவதூறுகளை ஆதரிப்பதும்..

  இவையும் அவலங்கள்தான்..

  தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்வதை விட பிறருக்கு தீங்கு இழைப்பது அல்லாஹ்வின் பார்வையில் கொடியது.

  அநீதி இழைக்கப் பட்டவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் அதை மன்னிப்பதில்லை.

  ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...