அதிரை மக்களே... இனியும் தி.மு.க-வை நம்பலாமா?

Editorial
1
அதிரை உட்பட பிற ஊர்களில்  கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துவமனைகளில் அதிரையர்களுக்கு பிரசவம் போன்ற அத்தியாவசிய சிகிச்சைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டன. 

அதேபோல், அதிராம்பட்டினத்தில் ஏராளமானோருக்கு கொரோனா என்ற வதந்தியை சங்கிகள் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல் பரப்பினர். முதலில் ஒரு ஊருக்கு எதிரானதாக பரப்பப்பட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு எதிராக அந்த வதந்தியை பரப்பினர் சங்கிகள். 
விளைவு, அதிராம்பட்டினத்தை சேர்ந்த யாரையும் ஊருக்குள் விடக்கூடாது என கிராம பஞ்சாயத்துக்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தன. அதிரையை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு வரும் செவிலியர்களைக்கூட அவர்கள் அனுப்பவில்லை. அதிரை எல்லைகளில் சுயமாக தடுப்பு வைத்து தங்கள் கிராமங்களில் பால் எடுக்கவும், அங்குள்ள தங்கள் தென்னை தோப்புகளை பார்வையிட செல்லும் அதிரை மக்களை இவர்கள் அனுமதிக்காமல் தடுத்தனர். இந்த பிரச்சனையை கலைய அதிரையை சேர்ந்த தி.மு.கவினர் தங்கள் கட்சி சார்பாக எந்த பெரிய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்தபோதும் இதுகுறித்து திமுக தலைமை எந்த உதவியும் செய்யவில்லை. கண்டனம் தெரிவிக்கக்கூட முன்வரவில்லை.


இந்த சூழலில், டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாஅத்தினர் 700 பேர் சிக்கிக்கொண்டு தவித்தபோது அவர்கள் ஊர் திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பத்திரிகையாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வலி நிறைந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவு,

"டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது அறிந்து அத்தனை உள்ளங்களும் மகிழ்ச்சி கொள்கின்றன. புனிதமான இந்த ரமழானில் அல்லாஹ் நம்மனைவரின் துஆக்களை ஏற்று அவர்களை நல்லபடியாக ஊர் திரும்ப வைத்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் இதற்குப் பின்னால் ஒரு வலிமிகுந்த வரலாறு உண்டு என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.

டெல்லியில் பரிதவித்தபொழுது தப்லீக் ஜமாஅத்தினர் பட்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை. அவர்கள் கவலைப்பட்டார்கள், கண்ணீர் விட்டார்கள், கதறினார்கள், காணொளிகள் எடுத்து அனுப்பினார்கள், உயிரைக் கூட இழந்தார்கள்.

இவ்வளவு கொடுமைகள் நடந்தபொழுதும் முஸ்லிம் சமூகம் தன் சொந்தக் காலில் நின்று அவர்களைக் காப்பாற்றியதே ஒழிய வேறு யாரும் சட்டை செய்யவில்லை என்பதை வலியோடு நாம் நினைவுகூரவேண்டியுள்ளது. முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து அனாதையாகவே வைக்கப்படுவதை நாம் உணரவேண்டும்.

டெல்லியில் சிக்கிக்கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். முஸ்லிம்களின் முழு ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தப்லீக் ஜமாஅத்தினருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை நாடே அறியும்.

டெல்லி அரசு அதிகாரிகள் ஒவ்வொரு தப்லீக் சாத்தியையும் கிட்டத்தட்ட 6 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்று பரிசோதனை முடிவுகள் வந்தவர்களையும் மீண்டும் மீண்டும் பரிசோதித்திருக்கிறார்கள். 6 முறை மூக்கில் கருவியை விட்டு மாதிரி (சாம்பிள்) எடுத்தால் என்ன நிலைக்கு அவர்கள் ஆளாகியிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். பலருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தோடியிருக்கிறது.

அடிப்படை வசதிகள், போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத தங்குமிடங்கள். ஒழுங்கான உணவு இல்லை. அந்த உணவுகளும் நேரத்துக்கு வருவதில்லை. இது ரமழானுக்கு முன்னுள்ள நிலை என்றால், ரமழான் ஆரம்பித்த பிறகு அவர்களின் நிலை இன்னும் அவலநிலை ஆனது. இரண்டு பிரட் துண்டுகளும் இரண்டு பிஸ்கட்டுகளையும் வைத்து ஸஹர் செய்துள்ளார்கள். இதுவும் கிடைக்காத நபர்களும் உண்டு.

எங்கும் வெளியேயும் செல்லமுடியாது. எப்பொழுதும் அடைந்தே கிடக்கவேண்டிய நிலை. கொடுமையின் உச்சகட்டமாக 5 முஸ்லிம்கள் அங்கேயே இறந்துபோனார்கள். மரணத்திற்கான காரணம் ஒருநேரம் கொரோனா பாதிப்பு என்றார்கள். இன்னொரு நேரம் கொரோனா பாதிப்பு இல்லை என்றார்கள்.

கடைசியாக இறந்த முஸ்தஃபா என்பவருக்கு கொரோனா தொற்று வந்து பின்னர் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து 50 சதவீதம் அவருக்குக் குணம் கிடைத்தபிறகு அவரைத் தனிமைப்பத்தலுக்கு (குவாரண்டின்) அனுப்பியதால்தான் அவர் இறந்தார் என்று கூறப்படுகிறது.

இன்னும் என்னென்ன கொடுமைகளை அவர்கள் அனுபவித்தார்கள் என்பது அவர்கள் தமிழகம் வந்தபின்தான் தெரியவரும். இந்த நிலையில் தமிழகத்திலோ அவர்களுடைய குடும்பங்கள் பொருளாதாரச் சிரமங்களிலும் இதர சிக்கல்களிலும் சிக்கித் தவித்தன.

இதில் இதர கட்சிகளின் நிலைப்பாடு என்ன? 
அதிமுகவிடம் நீதியையோ அல்லது உதவியையோ பெறமுடியாது என்பதை முஸ்லிம் சமூகம் நன்கு உணர்ந்தே வைத்திருக்கின்றது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பின், ஃபாசிசக் கொள்கையின் மறு பக்கமாக அதிமுக மாறிவிட்டதோ என்ற ஐயம் கூட நம்மில் பலருக்கு உண்டு. அப்படியிருக்க அவர்களிடம் நீதியை எதிர்பார்ப்பதில் பலன் ஏதும் இல்லை.

இதில் திமுகவின் செயல்பாடு என்ன? திமுக அழுத்தம் கொடுத்திருக்கும் என்றால் டெல்லியிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது ஒரு பெரிய விடயமாகவே இருந்திருக்காது என்பதுதான் சில பத்திரிகையாளர்களின் கருத்து.

ஆனால் கைசேதமான நிலை என்னவென்றால் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “டெல்லியில் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்தினரை தமிழகத்திற்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்” என்று குறப்பிட்டு ஓர் அறிக்கை கூட விடவில்லை.

முஸ்லிம்களின் முழு ஆதரவுடன் வெற்றிபெற்ற கனிமொழி எம்பி அவர்கள் 78 பெண்கள் மும்பையில் சிக்கிக்கொண்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் உடனே அவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் என்று செய்தி வந்தது. 78 பேரை மும்பையிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக வரவழைக்க ஏற்பாடு செய்த கனிமொழி எம்பி அவர்களுக்கு 700 பேருக்கு மேல் டெல்லியில் தவித்த முஸ்லிம்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியாதா?

எங்கிருந்தோ வந்த குரலுக்கெல்லாம் செவிசாய்த்த கனிமொழி எம்பி அவர்களுக்கு இவர்களின் கண்ணீர் கதறல்கள் காதுகளில் விழவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புள்ள பதவியில் உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களின் காதுகளிலும் விழவில்லை. அதுவும் முஸ்லிம்களின் ஓட்டுகளை மொத்தமாக வாங்கி 39 பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றும் 4, 5 ராஜ்யசபை சீட்டுகளைக் கையில் வைத்துக்கொண்டும் இவர்கள் கிஞ்சிற்றும் சட்டை செய்யவில்லையே…

தங்களையும் தங்கள் சமூகத்தையும் இவர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்பித்தானே முஸ்லிம்கள் கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்… இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் 700 முஸ்லிம்களுக்கு மேல் சிக்கித் தவித்தும் இவர்களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லையே… எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரு. ஸ்டாலின் அவர்கள் ஓர் அறிக்கை விட்டால் தமிழக அரசு அதற்குப் பதில் சொல்லியாகவேண்டிய நிலை வந்திருக்குமே…

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எல்லா மக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவரது கடமையல்லவா… “ஒருங்கிணைவோம் வா…” என்று அழைத்தார்களே… மக்களை ஒருங்கிணைக்கும் என்ன நடவடிக்கைகளை இவர்கள் எடுத்தார்கள்?

கொரோனாவை வைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக மிகப்பெரிய அவதூறுப் பிரச்சாரம் செய்யப்பட்டதே… தப்லீக் ஜமாஅத்தினரை வைத்து முஸ்லிம்களுக்கெதிராக மிகப் பெரிய வெறுப்பரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டதே… முஸ்லிம்களெல்லாம் ஒரு கலவரச் சூழலில் சிக்கித் தவித்தார்களே… இதில் திமுக என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தது? 

“கொரோனாவுக்கு மதச் சாயம் பூசாதீர்கள்” என்று பிரதமர் மோடி கூறியது போல் பொத்தாம்பொதுவாக திரு. ஸ்டாலின் அவர்கள் ஓர் அறிக்கை விட்டது தவிர வேறு என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தார்? பெயரைக் குறிப்பிட்டு கடுமையான அறிக்கை விட்டிருக்கவேண்டாமா?

வேலூரில் துரைமுருகனின் மகன் இறுதியில் வெற்றிபெற்றது முஸ்லிம்களின் ஓட்டுகளை வைத்துதான் என்று மனசாட்சியுள்ள அத்தனை பேருக்கும் தெரியும். அந்த அளவுக்கு முழு ஆதரவளித்த முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் நன்றிக் கடனா இது?

அதிமுக அரசும் அரசு அதிகாரிகளும் கொரோனாவின் பெயரால் முஸ்லிம்களை வைத்து பந்தாடியபொழுது திமுக என்ன செய்தது? முஸ்லிம்களுக்கென்று ஏதாவது குரல் கொடுத்ததா? ஏதாவது வழக்கு தொடுக்க முனைந்ததா? பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வாய்ப்பிருந்தும் குரல் எழுப்பியதா? பாதிக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்காவது திமுக சார்பில் உதவி செய்யப்பட்டதா? முஸ்லிம் அமைப்புகள்தானே முழுவதுமாக உதவிகள் புரிந்தன.

700க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை டெல்லியிலிருந்து கொண்டுவருவதற்காக இங்குள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகளும் எவ்வளவு பாடுபட்டு கஷ்டப்பட்டார்கள்? பல்வேறு முஸ்லிம் அமைப்பினரும் முஸ்லிம் தனவந்தர்களும் இன்னும் பல்வேறு தரப்பட்ட முஸ்லிம்களும் அவரவர் அளவிற்கு இதற்காக முயற்சிகளைச் செய்துள்ளார்கள்.

எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் அ.ச. உமர் ஃபாரூக் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், வழக்கறிஞர் ராஜா முஹம்மத் ஆகியோரின் கடும் முயற்சியினால்தானே இன்று தப்லீக் ஜமாஅத்தினர் தமிழகம் வருகிறார்கள்… 

78 பேருடைய குரல்கள் கேட்ட கனிமொழி எம்பி அவர்களுக்கு 700க்கும் மேற்பட்டவர்களின் கண்ணீர் கதறல்கள் ஏன் காதுகளில் விழவில்லை? அவர்கள் நினைத்திருந்தால் எப்பொழுதோ இவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே… இத்தனை துன்பங்களை தப்லீக் ஜமாஅத்தினர் அனுபவிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே…

திமுகவிலுள்ள நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு இதனைச் சிந்திக்கவேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில்கூட முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவாதவர்கள் எப்பொழுது உதவப் போகிறார்கள்? இவர்களுக்குப் பின்னால் இன்னும் நம்பிப் போய் ஏமாறப்போகிறோமா? அல்லது சொந்தக் காலில் நின்று பழகப்போகிறோமா?

எனவே முஸ்லிம்கள் கொரோனாவுக்கிடையிலும் இதனைப் பரிசீலிக்கவேண்டும். நமக்காகக் குரல் கொடுக்க யாரும் முன்வரப்போவதில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்."

Post a Comment

1Comments
  1. நமக்காக குரல் கொடுப்பவர்களை நாம் நம்புவதில்லையே.

    நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காத கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதே மார்க்க கடமை என்றல்லவா போதிக்கப் படுகிறது..

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...