அதிரையில் வேடிக்கை பார்க்கும் திமுக - அதிமுக... வேதனையில் மக்கள்

Editorial
0
தமிழ்நாட்டு அரசியலில் சிறுபான்மை காவலர்கள் என்ற பட்டத்துக்காக திமுகவுக்கும் அதிமுக மாற்றி மாற்றி போட்டிப் போட்டுக் கொள்வது வழக்கம். தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் நாங்கள் வருவோம் என இருவரும் ஓட்டுக் கேட்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இருவரது செயல்பாடும் சிறுபான்மையினர்களை குறிப்பாக இஸ்லாமியர்களை திருப்திபடுத்தவே இல்லை.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடனே சிறுபான்மை காவலர் போட்டியில் அக்கட்சி விலகி விட்டது என்றே சொல்ல வேண்டும். தற்போது இருக்கும் திமுகவுக்கும் அந்த பட்டம் பொருத்தமானது தானா என்ற கேள்வி எழுகிறது. நாடு முழுவதும், தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் அடக்குமுறைகளுக்கு திமுக எந்த ஒரு வலுவான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.

குறிப்பாக தற்போதைய கொரோனா பிரச்சனையில் இஸ்லாமியர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டதற்கும், அதை வைத்து ஊடகங்களும், சமூக வலைதளங்களில் பாஜக ஐ.டி-. விங்குகளும் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பியதற்கு எதிராக திமுக தலைமை பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அவர்கள் கண்டும் காணாமல் அதிமுக அரசை குறை சொல்வதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். திமுகவின் ஐ.டி. விங்க் நினைத்து இருந்தால் தமிழக பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தை அன்றே தவிடுபொடியாக்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் இதை யாருக்கோ நேர்ந்த பிரச்சனையை போல் தான் கடந்து சென்றார்கள்.

குறிப்பாக அதிரை உட்பட பிற ஊர்களில்  கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துவமனைகளில் அதிரையர்களுக்கு பிரசவம் போன்ற அத்தியாவசிய சிகிச்சைகள் இன்று வரை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் அதிரை கர்ப்பிணிக்கு இரத்தம் வழங்கக்கூட இரத்த வங்கி மறுத்துள்ளது. இந்த பிரச்சனையில் தலையிட்டு அதிரையை சேர்ந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தங்கள் கட்சி சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருந்துகின்றனர் மக்கள்.

அதேபோல், அதிராம்பட்டினத்தில் ஏராளமானோருக்கு கொரோனா என்ற வதந்தியை சங்கிகள் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல் பரப்பினர். முதலில் ஒரு ஊருக்கு எதிரானதாக பரப்பப்பட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு எதிராக அந்த வதந்தியை பரப்பினர் சங்கிகள். 
விளைவு, அதிராம்பட்டினத்தை சேர்ந்த யாரையும் ஊருக்குள் விடக்கூடாது என கிராம பஞ்சாயத்துக்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தன. அதிரையை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு வரும் செவிலியர்களைக்கூட அவர்கள் அனுப்பவில்லை. இன்று வரை அதிரை எல்லைகளில் சுயமாக தடுப்பு வைத்து தங்கள் கிராமங்களில் பால் எடுக்கவும், அங்குள்ள தங்கள் தென்னை தோப்புகளை பார்வையிட செல்லும் அதிரை மக்களை இவர்கள் அனுமதிப்பது கிடையாது. இந்த கிராமங்களில் எல்லாம் உள்ளாட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள் திமுக, அதிமுக கட்சியினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தங்கள் கட்சி சார்பாக பேசி இப்பிரச்சனையை களைய அதிரையை சேர்ந்த இரு கழகத்தினரும்  முயற்சிக்கவில்லை.

இதேபோல், அதிரைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்டன. திமுக-வை சேர்ந்த அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லம் வீட்டுக்கே எரிவாயு கேஸ் சிலிண்டர் விநியோகிக்க மாட்டேன் என ஊழியர் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும். அதற்கு பிறகும் கூட திமுக சார்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படவில்லை.

கோரோனா பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்கள் என அதிரையில் சுகாதாரத்துறையினரால் மக்கள் வீட்டுக்கு வந்து அழைத்து செல்லப்படும்போதும் இவர்கள் அரசியல் செய்ததால் அனைவரும் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களுக்காக பணியாற்றி வரும் தன்னார்வலர்களை வைத்தும் இவர்கள் அரசியல் செய்து நெருக்கடியை மேலும் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வண்ண அட்டைகளை வீடுகளுக்கு முறையாக விநியோகித்து வந்ததை ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தி தடுத்து இவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் பிறகு அட்டை வழங்கும் பொருப்பு கைமாறினாலும் இன்று வரை பல வீடுளுக்கு வண்ண அட்டை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அதிரையில் இக்கட்சியை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் முஹல்லாக்கள் மற்றும் NGOக்களுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வந்தாலுமதை வைத்து அரசியல் ஆதாயம் அடையவே முயற்சிப்பதாக மற்ற தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். வலுவான இவ்விரு கட்சிகளின் தலைமைக்கு அதிரையை சேர்ந்த உறுப்பினர்கள் தெரியப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படாமல், உள்ளூர் மக்களிடமும், அதிகாரிகளிடமும் தங்கள் பலத்தை காட்டுவதற்கு மட்டுமே கட்சியின் பெயரை தலைவர்கள் பெயரை இவர்கள் பயன்படுத்துவதாக அதிரை மக்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த கொரோனா மட்டுமின்றி அண்மைகால திமுக வின் செயல்பாடுகள் எதுவும் இஸ்லாமியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திருபுவனத்தில் இராமலிங்கம் கொலை சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 இஸ்லாமியர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என அவரது மகனே கூறினார். இஸ்லாமிய அமைப்புகள் ஐவர் கைதை வண்மையாக கண்டித்தனர். ஆனால், வழக்கு விசாரணைக்கு முன்பே ஸ்டாலின் 5 கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். இதுபோல் மக்களவைத் தேர்தல், மாநிலங்களவை தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் பெயரைக் கூட திமுக அறிவிக்கைவில்லை. குறிப்பாக அவர்களுடனேயே இருந்த முஸ்லீம் லீக் கட்சியை தவிர்த்து மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் தராமல் திமுக கடைசி நேரத்தில் காலை வாரியது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உடனே உடனே கைது செய்யும் என்.ஐ.ஏ-வுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மத்திய பாஜக அரசின் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு அளித்து அதிர்ச்சியளித்தது திமுக. குறிப்பாக பாபர் மசூதி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தது இஸ்லாமியர்களை வேதனை அடைய செய்தது.

இறுதியாக நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களிலும் திமுகவின் பங்களிப்பு கடமைக்கு என்பது போலவே இருந்தது. ஒரு அடையாள பேரணி நடத்தியது, மக்களிடம் கருத்துக்கேட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை தவிர்த்து பெரிதாக வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. குறிப்பாக அதிரையில் நடந்த போராட்டத்தில் கூட திமுகவினர் சிறப்பு விருந்தினர் போலவே கலந்துகொண்டனர். கட்சி சார்பற்ற இந்த போராட்டத்தில் தங்களை முன்னிலைப் படுத்தவில்லை எனக்கூறி போட்டிப் போராட்டம் நடத்தச்சென்றதாகவும் சர்ச்சைக் கிளம்பியது. அதை தொடர்ந்து உள்ளூரில் உள்ள திமுகவின் பெருந்தலைகள் சி.ஏ.ஏ போராட்டத்தை கண்டும் காணாமலும் தான் இருந்தனர். தற்போதைய கொரோனா பிரச்சனையில் அக்கட்சியினர் கண்டும் காணாமல் இருப்பது அதிரை மக்களிடம் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...