அதிரை பேஸ்புக், வாட்ஸ் அப் போராளிகளே... கொஞ்சம் அடக்கி வாசிங்க!

Editorial
0
கொரோனா வதந்தி காரணமாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த யாரையும் ஊருக்குள் விடக்கூடாது, அதிராம்பட்டினத்துக்கு யாரும் செல்லக்கூடாது என சில சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்துக்கள் பிறப்பித்த உத்தரவால் அதிரையில் வழக்கமாக ஊருக்குள் வரவில்லை. இதனால் அதிரையில் குழந்தைகள், பெரியவர்கள் பால் இன்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

இதனை தொடர்ந்து அதிரையை சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு சென்று பால் வாங்கி வந்து வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் இவர்களிடமே மக்கள் பால் வாங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அதிரையை சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெளியூர் பால்காரர்கள் அதிரைக்கு வந்து பால் விநியோகம் செய்யாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் மட்டுமே தடாலடியாக பால் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளனர். பெரும்பாலான பால்காரர்கள் அதிராம்பட்டினம் சென்று பால் விநியோகிக்க அந்தந்த ஊர் கிராமங்களே தடை விதித்தன. அதுபோல் அதிரை எல்லையில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ் கட்டுபாடு காரணமாகவும் அவர்கள் ஊருக்குள் நுழைந்து பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அதிரையை சேர்ந்த சில பேஸ்புக், வாட்ஸ் அப் போராளிகள் ஆர்வக்கோளாறில் அனைத்து பால்காரர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிட்டு பகைமையை தூண்டி வருகின்றனர். அதிரையை சேர்ந்த ஒருவரது பேஸ்புக் பதிவு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பால்காரர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அதிரையில் விநியோகம் செய்யும் பால்காரர் ஒருவர், "ஏப்ரல் 7-ம் தேதி மட்டும் தான் பால் கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு பக்கத்துக்கு கிராம மக்களின் எதிர்ப்பை மீறி சில கிராமங்களை தாண்டி வந்து அதிராம்பட்டினத்துக்கு மொத்தமாக பால் வழங்கி வருகிறோம். நமது மக்களுக்கு எப்படியாவது பால் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாம் சிரமங்களுக்கு மத்தியில் வருகிறோம். இதுவரை 5 முதல் 6 முறை அதிராம்பட்டினத்தில் இருந்து நம்மை திருப்பிவிட்டார்கள். ஒரு முறை போலீஸ் என்னை பிடித்துவைத்துக் கொண்டு அந்த ஊரில் இருப்பவர்களுக்கு கொரோனா உள்ளது என்று சொல்லி திருப்பி விட்டது. இத்தனை கஷ்டங்களை கடந்து தான் நாம் பால் கொடுக்க வருகிறோம். ஆனால் எங்களை காவிகள், டாஸ்மாக்கில் குடித்துவிட்டு நோய் பரப்புபவர்கள் என பேஸ்புக்கில் எழுதுகிறார்கள். அதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது." என்றார்.

அதிரை பேஸ்புக் போராளிகளே உங்கள் பதிவுகள் யாவும் பலரது பார்வைக்கு செல்கின்றன. புறக்கணிப்பின் வலியை நீங்கள் வெளிப்படுத்துவதை உணர முடிகிறது. அதை உணர்ந்த நாம், ஒரு சில செய்த தவறுக்காக எந்த தவறும் செய்யாதவர்களுக்கும் அதை ஏற்படுத்திவிட வேண்டாம். அதேபோல் அதிரை பால் வியாபாரிகளிடம் பால் வாங்க வேண்டும் என்பது ஊர் நலன் சார்ந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து தான். அதே வேலையில் சுற்றுவட்டார கிராம விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு உள்ளூர் வியாபாரிகளால் பால் விற்க முடியாது என்பதை நினைவில் கொள்க. இதுதொடர்பாக விரிவான பதிவு ஒன்றை இதற்கு முன்பாக வெளியிட்டு உள்ளோம். அதை படித்து புரிந்துகொள்ளுங்கள்.

அதற்காக உணர்ச்சி வசப்பட்டு எதையாவது எழுதி ஒற்றுமையுடன் இருக்கும் பக்கத்து கிராமவாசிகளை பகையாளிகளாக மாற்றி விடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு ஒட்டுமொத்த அதிராம்பட்டினம் மீதும் பழி சுமத்தப்படும். வெறுப்புணர்வை ஏற்படுத்த காத்திருக்கும் சமூக விரோதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள். எதையும் சிந்தித்து பதிவிடுங்கள். நமது எழுத்துக்கள் பிறருக்கு கரம் கொடுக்க வேண்டுமே தவிர காயப்படுத்திவிடக் கூடாது.

இதைப்படிக்கும் பக்கத்து கிராம மக்களுக்கு...

அதிராம்பட்டினத்துக்கு தற்போது வரை வங்கி மற்றும் இதர தேவைகளுக்காக வெளியூர் மக்கள் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நமது அதிரை மக்கள் எந்த வகையிலும் ஒதுக்கவோ, புறக்கணிக்கவோ இல்லை. ஏற்கனவே கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் ஊர் மக்கள், அந்த பாதிப்பை மீண்டும் தாங்க சந்தித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைகாகவே உங்களை கொரோனா சோதனை செய்ய சொல்கிறார்கள். இதில் எந்த வெறுப்புணர்வும், பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை.

ஏனெனில் கொரோனா பீதியால், சென்னை போன்ற பிற ஊர்களில் தங்கி இருந்து ஊர் திரும்பும் தங்கள் மக்களையே ஊருக்குள் வர வேண்டாம் என அதிரை மக்கள் தடுத்து வருகிறார்கள். பெருநாள் துணிகள் வாங்க வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம் என கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். இவை யாவும் கொரோனா மீண்டும் அதிராம்பட்டினத்தில் பரவி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே. அந்த வகையில் தான் அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பால்காரர்கள் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...