அரசியல்வாதிகளா? அரசியல் வியாதிகளா?

Editorial
0
இன்றைய அரசியல் என்பது சாக்கடை என்பதை நிருபித்துக் கொண்டிருக்கின்றனர் பல அரசியல் வாதிகள். சமுக ஆர்வலர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு, அரசியலில் நுழையும் சிலர் கவர்ச்சியான வாக்குறுதி களை அள்ளி வீசி, பொதுமக்களின் வாக்குகளைப் பிடுங்கி வெற்றி பெறுகின்றனர்.

பின்னர் மக்களின் பாடு திண்டாட்டமாகிவிடுகின்றது. ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகப் பாசாங்கு காட்டிவிட்டு, அடுத்த சில வருடங்கள் தன்னை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களின் நிலையைத் திண்டாட்டமாக்கிவிட்டுக் கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் ஊரின் சுகாதாரத்தில் அக்கரை கொள்ளாமல், மக்களின் நலனில் அக்கரை காட்டாமல், தான் ஒரு ஆட்சியாளர் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, ஆட்சியாளர் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். பெயருக்காகவும் பெருமைக்காகவும் அரசியலுக்கு வரும் இத்தகையவர்களை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்!  இவர்கள் பல திறமையானவர்களையும், பொதுச் சேவையில் ஆர்வம் கொண்டவர்களையும் ஆட்சிக்கு வர வாய்ப்பற்றவர்களாக்கிவிடுகின்றனர்.

சுயநலவாதிகளிடமும், சந்தர்பவாதிகளிடமும், சமுக விரோதிகளிடமும் இந்த அரசியலும் ஆட்சியும் சிக்கிக்கொண்டு சின்னாப் பின்னமாகி விட்டன. இதன் விளைவுதான், நம் நாடும் அதன் மக்களும் இன்னும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம். இது போன்ற அரசியல் வியாதிகளால்தான் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகின்றது.

மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் பலர், காசுக்கும் பெருமைக்கும் மாரடிக்கும் ஊடகங்கங்களின் உதவியால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிடுகின்றனர். மக்களும் தங்களின் மீதுள்ள சமுதாயப் பொறுப்பை மறந்து, அதிகப் பணம் தருபவர்களுக்குத் தங்கள் வாக்குரிமையை விட்டுக் கொடுக்கின்றனர். இதில் ஓட்டுக்குத் தரும் பணத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்ற விவாதம் வேறு.  தேர்தல் நேரத்தில் 500 ரூபாயை அள்ளி  வீசிவிட்டு, ஆட்சி நெரத்தில் 50 கோடிக்கும் அதிகமாக அபேஸ் பண்ணும் அரசியல்வாதிகள் இன்றையக் காலகட்டத்தில் அதிகம் நிறைந்துள்ளனர்.

பதவியேற்று எந்த நலத் திட்டத்தையும் செய்யாமல், பிறரைக் குறை சொல்லியே காலம் கடத்திவிட்டு, அடுத்த தேர்தல் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு ஏதாவது நன்மையை செய்தால் மக்களை ஏமாற்றி, அடுத்தமுறை ஆட்சிக்கு வரலாம் என்ற தேர்தல் வியூகத்தைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றனர்.

அப்பாவி மக்களும் இறுதியில் இவர்கள் செய்த ‘நல்லவற்றை’ வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், இவர்கள் மீண்டும் "பழைய திருடி, கதவைத் திறடி" என்ற பழமொழிக்கு ஏற்ப, மீண்டும் சகஜ நிலைக்கு மாறி விடுவார்கள்.

எந்த நிலையாக இருந்தாலும், மக்களின் பாடு திண்டாட்டம் தான். 2020 ல் இந்தியா வல்லரசு ஆகும் என்ற கனவு நம் நாட்டில் உள்ள அரசியல் வியாதிகளால் 2050 மாற்றப்படுமோ என்ற அச்சம் எழுகின்றது.

பொது மக்களும் தமது நலன் கருதி, காசுக்காக இல்லாமல், உண்மைக்காக, உயர்வுக்காக வாக்களிக்க வேண்டும். பெயர் பெறுவதற்காக அரசியல் பிழைப்பு நடத்துபவர்களை ஒதுக்க வேண்டும்! நாட்டின் மீது அக்கறை  கொண்ட, சேவை மனம் படைத்த பலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.  நம் ஓட்டு, நம் உரிமை! சிந்தித்துச்  செயல்படுவோம்!

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...