கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை என்பது பல இளைஞர்களின் தவிர்க்க முடியாக ஆசையாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் 5 முதல் 10 ஆண்டுகள் தங்கி சம்பாதித்தால் வாழ்கையில் செடிலாகிவிடாலாம் என்ற ஃபார்முலாவை வைத்துக்கொண்டு சிலர் பல லட்சங்கள் செலவு செய்து சென்று விடுகின்றனர். அது போல் உடனே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும், மாதாமாதம் வீட்டு தேவைக்கு பணம் அனுப்பலாம் என்று அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு சென்று அவர்கள் படும் கஷ்டம் எண்ணிலடங்காதது. புதிய பகுதி, புதிய மக்கள், புதிய கலாச்சாரம், புதிய உணவுகள், புதிய வாழ்க்கை என்று நமது வழக்கமான வாழ்க்கையையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை மாற்றி விடுகின்றது.
பாசமான உறவுகளை விட்டு, பழகிய நண்பர்களை விட்டு, சொந்த ஊரினை விட்டு விட்டு அரபு நாட்டு வெயிலில் வெந்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் நமது வீட்டிலும் இருக்கவே செய்கின்றனர். நமது ஊரின் நிலமை என்னவென்றால் வெளிநாட்டுக்கு சென்றால் அந்தஸ்து, மதிப்பு. உள்ளூரில் ஒரு லட்சம் சம்பாதிப்பவரை விட வெளிநாட்டில் பத்தாயிரம் சம்பாதிப்பவருக்கு தான் இங்கு மதிப்பு அதிகம். இப்படி பார்க்கும் நம் சமுகத்தின் காரணமாகவும் நிர்பந்த நிலையினாலுமே உள்ளூரில் வண்ணத்துப்பூச்சிகளை பரந்துக்கொண்டிருந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை கருப்பு வெள்ளை காகிதமாக அயல் நாட்டில் கிழிந்து கந்தலாக மாறி விடுகின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு குடும்ப சூழலுக்காக வெளிநாடு செல்ல முயலும் இளைஞர்கள் அதற்க்கு எண்ணிடங்காத பணத்தை இங்கு செலவு செய்யவேண்டியுள்ளது. பாஸ்போர்ட், மெடிக்கல் சர்டிபிக்கட், விசா, இகாமா, விமான டிக்கட் மேலும் பலவற்றுக்கு பல லட்சங்கள் செலவு செய்து செல்லவேண்டியுள்ளது. இதற்காக இளைஞர்கள் பலர் அவசரத்தின் காரணமாக பல போலி ட்ராவல்ஸ் நிறுவனங்களிடம் பணத்தை வழங்கி ஏமாற்றப்பட்டு விடுகின்றனர். பல ஏழை இளைஞர்கள் பெற்றோர்களின் நகைகளை விற்று, பல லட்சம் கடன்பட்டு அந்த பணத்தை எடுத்து விசா வழங்கும் நிறுவங்களிடம் கொடுத்தால் துவக்கத்தில் நன்றாக பேசும் அவர்கள் பணத்தை பெற்ற பிறகு லீகல் டாக்குமெண்டில் கையெழுத்து வாங்கிய பிறகு தங்களது இரண்டாவது கோர முகத்தை காட்டிவிடுகின்றனர். இது போன்ற விசா வழங்குவதாக கூறி மோசடி செய்பவர்களில் அதிரை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சிகரமான செய்தியாகும். நமதூரை சேர்ந்த ஒரு நபரிடம் நமதூரை சேர்ந்த ட்ராவல்ஸ் நிறுவானத்தினர் வலைகுடா நாட்டுக்கு விசா பெற்று தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நியாயம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது எந்தவிதத்தில் நியாயம்! அடுத்தவரின் வயிற்றில் அடித்து சேர்க்கும் செல்வம் எப்படி நிலைக்கும்! நம் மார்க்கம் இதை தான் சொல்லித்தந்துள்ளதா? மோசடிக்காரர்களே அல்லாஹ்வின் பார்வையில் இருந்தும் வேதனையில் இருந்தும் உங்களால தப்பிக்க முடியாது.
இது போன்ற பல நிறுவனங்கள் முறையான லைசன்ஸ் இல்லாமல் பல பெயர்களில் ட்ராவல்ஸ் நிறுவங்களை துவங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுக்கு அனுப்பி உள்ளனர், இது போன்ற நிறுவங்களிடம் விசா பெறும் முன்னர் இவர்கள் எத்தனை நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இது நம்பகமான நிறுவனம் தானா? இவர்களிடம் விசா பெற்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதை எல்லாம் தீர வீசாரித்து தெளிவடைந்த பிறகே பணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அதிகளவில் நடக்கும் மோசடிகளுக்கு முக்கிய காரணம் வெளிநாட்டு மோகம் மட்டுமே. வெளிநாடு சென்றால் முன்னேறிவிடலாம் என்ற எண்ணாத்தை மாற்ற வேண்டும்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி