அதிரை இமாம் ஷாபி இடத்தை காப்பாற்ற.. குடும்பத்தோடு வாங்க! பெண்களுக்கு வேன்கள் ஏற்பாடு என போராட்டக்குழு அறிவிப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை விட்டு காலி செய்யாவிட்டால் ஜப்தி செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நகராட்சி துணைத் தலைவரும், திமுக நகர செயலாளருமான ராம குணசேகரனையும், நகராட்சி ஆணையரையும்  கண்டித்து நாளை (8-01-2024, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குடும்பத்துடன் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து இருக்கும் அதிரை நகர ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.முஹம்மது தமீம் அழைப்பு விடுத்து உள்ளார். பெண்களுக்காக ஏற்பாடு செய்துள்ள வேன்கள் அனைத்து பள்ளிவாசல்களுக்கு அருகில் இருஙும் புறப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக இந்த கூட்டமைப்பு வெளியிட்ட நோட்டீசில், "1975 ஆம் ஆண்டிற்கு முன்பு அதிராம்பட்டினம் மக்தும் பள்ளி அருகில் உள்ள ரேடியோ பார்க் செயல்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக பயன்படுத்தி வந்ததனால், நமது ஊரில் வசித்து வரும் முஸ்லிம் பெருமக்கள் ஒன்று சேர்ந்து 'அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்த அறக்கட்டளை மூலம் முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக 'இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி' என்ற பள்ளியை நிறுவி, அந்தப் பள்ளி நடத்துவதற்காக மேலே கண்ட இடத்தை நீண்ட கால குத்தகைக்கு விடும்படி கேட்டதன் பேரில் 1975 ஆம் ஆண்டில் அந்த பள்ளிக்கு அடிநில குத்தகைக்கு விடப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட குத்தகையைச் செலுத்திக் கொண்டு, பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை மிகுந்த பொருட்செலவில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடந்து வருகிறது. இதனை அங்கீகரிக்கும் விதமாக அப்போதைய அரசு 2009 ஆம் ஆண்டு அவ்விடத்தை நம் பள்ளிக்கு விற்க முடிவு செய்து பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. அதனை ஆட்சேபித்து இராம.குணசேகரன் அளித்த மனுவினை உள்நோக்கம் கொண்டது என அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு. கருணாகரன் ஐஏஎஸ் அவர்கள் தள்ளுபடி செய்தார்.

மேலும் இந்த இடம் எந்த ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம் இல்லை அரசு புறம்போக்கு இடம் தவிர அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்டு கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது என்பதை அரசு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. இந்த இடம் தொடர்பாக இடையில் உரிமையியல் வழக்குகள் நடத்தப்பட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த பள்ளி நீண்ட காலமாக, இயங்கி வரும் இடத்தை கைப்பற்றி தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான திரு. ராமகுணசேகரன் என்பவரும் அவரை சேர்ந்தவர்களும் அராஜகப்போக்குடன் முறைகேடான முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது முயற்சியால் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சி முற்றிலும் தடைபட்டு வீடும் அாயம் உள்ளது.

முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்கள் பகுதியில் கல்வி பயின்று வரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து ஆவண செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி வழங்கி அவர்களின் வாழ்வு செழிப்புற காரணமாக இருந்த இந்த கல்வி நிறுவனத்திற்கு ஜமாத்தார்கள் ஆகிய நாம் நம்முடைய முழு ஒத்துழைப்பினை வழங்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...