அதிரை கர்ப்பிணிகள் ராஜாமடத்தில் கால்கடுக்க காத்திருக்கும் துயரம்.. நகராட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத அவலம்

Editorial
0

தமிழ்நாட்டில் கர்ப்பமாக உள்ள பெண்களைப் பதிவு செய்தல், 19 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் வளர்ச்சியைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்கின்றனர்.

தாய்-சேய் நல அட்டைகள் வழங்குதல், பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ஆகிய பணிகளை மேற்கொள்வதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.


பெண்கள் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகளுக்கு அரசின் பல திட்டங்களைக் கொண்டு சென்று சேர்ப்பதில் மேற்கூறிய அனைவரும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர். ஆனால், அதிரை மக்கள் இதற்காக ராஜாமடம் வரை செல்லும் நிலை உள்ளது.


45 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட அதிராம்பட்டினத்தில் அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது. ஆனால், அங்கு இந்த சேவைகள் வழங்கப்படுவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அதிரையில் இருந்தால் ராஜாமடம் வரை செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 


35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் கொண்ட மக்கள்தொகைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கலாம் என்ற சூழலில் புதிய நகராட்சி நிர்வாகம் வந்த இரண்டரை ஆண்டுகளாகியும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான எந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.


ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் மக்கள் தொகை கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றவட்டார கிராம மக்களுக்கு சேவை வழங்கப்படுவதால் தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் அங்கு வருகை தருகிறார்கள். அவர்கள் அமர போதிய இருக்கை கூட இல்லாததால் கால் கடுக்க காத்திருக்கும் சூழல் உள்ளது. வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ள கர்ப்பிணிகளால் எப்படி இவ்வளவு தூரம் வர முடியும்?


நகராட்சி நிர்வாகமே இதற்கு போதிய நிதியை ஒதுக்கி ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்கலாம். கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அதை இயக்கலாம். நடவடிக்கை எடுக்கிறார்களா என பார்ப்போம்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...