அதிரையின் சிஎம்பி லேன் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சி தருவதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள். பல ஆண்டுகளாக குறித்து கோரிக்கை வைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஒரு வழியாக மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நடுவிக்காடு முதல் சி.எம்.பி. லேன் வரை ₹2.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை இந்த சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தற்போது சி.எம்.பி. லேன் பிரதான சாலையை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆனால், பல இடங்களில் ஏற்ற இறக்கமாகவும், வளைவு நெளிவாகவும் அமைக்கப்பட்டு இருப்பதை நாம் நேரில் சென்று பார்த்தபோது தெரிந்தது. அதன் புகைப்படங்களையும் கீழே நான் இணைத்து உள்ளோம். ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த பழைய சாலையை முழுமையாக தோண்டி எடுக்காமல் லேசாக கீரிவிட்டு அதன் மேலேயே சாலை அமைத்து வருகிறார்கள். இதனால் சாலை தரமற்று அடுத்த மழைக்கே பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சாலை அமைப்பதத்கு முன் எடுத்த படங்கள் இவர். லேசாக கிரியும், பழைய சாலையை சில பகுதிகளில் உடைத்தும் விட்டுள்ளனர்
பழைய சாலையை தோண்டாமல் அதன் மீதே புதிய சாலை அமைப்பதால் ஒவ்வொரு முறையும் பாதை உயரமாகவும் வீடுகள் தாழ்வாகவும் செல்லும். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசே சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு போராட்டங்களிக்கு பிறகு அமைக்கப்படும் இந்த சாலை அடுத்த மழைக்கே குண்டும் குழியுமாக மாறாமல் இருக்க இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே புதிய சாலையை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.