அதிரை மக்களே உஷார்! உங்கள் ஓட்டுரிமையை பாதுகாக்க இதை செய்யாதீங்க

Editorial
0

நாடு முழுவதும் ஆதார் - வாக்காளர் அடையாளர் அட்டை இணைப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிராம்பட்டினத்தில் இது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள்.
சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் அழைத்தால் கண்டுகொள்ளாமல் இருக்கும் சில அதிரை வார்டு கவுன்சிலர்கள் இந்த பணியில் மும்முரமாக இறங்கி இரு ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்க தங்களை அணுகுமாறு தெரிவித்து வருகின்றனர்.

இன்று வரை ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்ற எந்த விதமான கட்டாயமும் இல்லாத சூழலில் வீடு வீடாக சென்று சில அரசு ஊழியர்கள் ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவே இது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையமும் இணைப்பது கட்டாயம் கிடையாது என்று விளக்கமளித்து இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளால் சிசிஜி எனப்படும் `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு' (Constituition Conduct group) என்ற அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 140 பேர் கொண்ட இந்தக் குழுவில் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் என்பவரும் ஒருவர்.

அவர் இதுகுறித்த அளித்த பேட்டியில், "வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒருவர் இந்த நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆதார் அட்டை என்பது ஒருவருடைய அடையாளத்தைக் குறிப்பதாக மட்டுமே அமைகிறது. ஒருவர் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அடையாளமாக ஆதார் அட்டை இல்லை. இந்த நாட்டின் குடிமகனாக இல்லாத ஒருவர்கூட, ஆதார் அட்டையைப் பெற முடியும். எனவே, ஆதார் அட்டையை வைத்து வாக்காளரை பரிசோதித்துக் கொள்ளலாம் என்பது சரியானதல்ல.

ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும்போது எந்தப் பெயரெல்லாம் தவறாக இணைக்கப்பட்டதோ அவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. நான் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறேன். வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள நபர் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை அறிந்து அந்தப் பெயர் நீக்கப்படும். இது சரியான நடைமுறை. ஆனால், ஆந்திரா, தெலுங்கானாவில் அண்மையில் நடைபெற்ற விஷயம், அவர்களிடம் ஆதார் தொடர்பான மென்பொருளானது, மாநில குடியுரிமை தகவல் மையத்தில் (State resident data hub) வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இங்குள்ள மென்பொருளைப் பயன்படுத்தி இரண்டு மாநில அரசுகளும் போலியான வாக்காளர்கள் என மாநில தலைமை தேர்தல் அலுவலரிடம் கூறியதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தங்கள் வாக்குரிமையை இழந்தனர். ஒருவர் தவறு செய்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வரையில் வாக்குரிமையை இழக்க வைக்கக் கூடாது என்பது விதியாக இருக்கும்போது, அரசின் இந்தச் சட்டத்தால் எத்தகைய ஆபத்து உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கிறீர்கள் என்றால் அதில் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணும் சென்று சேர்கிறது. இதனைத் தவிர்க்க முடியாது. இதனால் சமூக ஊடகங்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆவணங்களை பொதுவெளியில் வைக்க முடியும். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒருவர் டெல்லியில் பயணம் செய்யும்போது எங்காவது நின்றால், அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு அதேபோல் விருப்பமான இடங்கள் எது என்ற விவரத்தை உங்கள் செல்போனில் காட்டும். அதாவது, பயனாளர்களின் விருப்பத்தை அறிந்து அவை திறமையாக இயங்குகின்றன.

ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால் வாக்காளரின் ஆர்வத்தினை எளிதில் கண்டுகொள்ள முடியும். தரவுகளை ஒழுங்குபடுத்தும் முறைகள் என்பது மிகச் சரியாக உருவாக்கப்படவில்லையென்றால், இலக்கு வைத்து பிரசாரம் செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிபர் தேர்தல் பிரசாரம் நடந்தபோது, `கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற மோசடி வெளியுலகுக்கு வந்தது. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர் என்பது அறியப்பட்டால், ஒரு வேட்பாளருக்கு இந்த விவரங்கள் எளிதில் வந்து சேர்கிறது என்றால் அந்த வேட்பாளர் அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சியால் தங்களுக்கு ஆதரவான நிலையை நோக்கி வாக்காளரை மடைமாற்ற முடியும்.

இது தேர்தல் நடைமுறையையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. இதன் மூலம் தேர்தல் நாணயமாக நடக்கும் என்ற நம்பிக்கையைக் குலைக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி.என்.பானர்ஜியை தலைவராகக் கொண்டு, தரவுகளைப் பாதுகாப்பதற்கான நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர், `வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது ஆபத்தான சூழலை உருவாக்கும்' என்றார். தேர்தல் சரியாகவும் நேர்மையாக நடப்பதை மாற்றும் வல்லமை கொண்டதாக அவை மாறிவிடும்.

ஆதார் அட்டையின் அடிப்படை நோக்கம், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களில் சரியான பயனாளிகளைத் தேர்வு செய்ய முடியும் என்பது மட்டுமே. அந்த நோக்கத்துக்காக மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. தனியார் நிறுவனங்கள் எந்தவொரு சேவையை அளிக்கும்போதும் மக்களிடம் ஆதார் எண்ணைக் கேட்கின்றனர். வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கச் செய்தனர். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே காங்கிரஸ் கட்சிதான். ஆனால், அதன் கூட்டணியில் உள்ள திமுக அரசு இங்கு விழிப்புணர்வு செய்து வருகிறது. குடியுரிமையை காக்க சி.ஏ.ஏ.வை எதிர்த்து எப்படி மக்கள் விழிப்புணர்வு அடைந்தார்களோ நம் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க, இதற்கு துணைபோகும் அதிரையை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயம் கிடைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு பக்கம் தங்கள் கட்சி, கூட்டணி கட்சியின் தலைவர்கள், எம்.பிக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுபக்கம் இவர்கள் இங்கு புரோக்கர் வேலை செய்கிறார்கள்.

தங்களுக்கு கிடைத்த அரசியல் அறிவை கொண்டு மக்களுக்கு நண்மை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். நமது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உறவினர், வார்டு கவுன்சிலர், பழக்கமானவர், நண்பர் என்று நம்பி இதுபோன்றவர்களின் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...